Monday, October 1, 2018

பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராஜன்

சஞ்சய் தத்தும் ராஜீவ் கொலை வழக்கும்":-

1993 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மும்பை நகரை தொடர் வெடிகுண்டுகள் கலங்கடித்தன, 13 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் 257 பேர் உயிரிழந்தார்கள், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். தாவூத் இப்ராஹிம் உட்பட பலர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டார்கள். அந்த  குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான தரவுகளும் திரட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் AK  56 இருந்ததற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது, அந்த தீர்ப்பில் சஞ்சய் தத் குற்றவாளி என்றும் அவருக்கு ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் சஞ்சய் தத் 8 மாதங்களுக்கு முன்னரே, பிப்ரவரி மாதம் 2016 நன் நடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்திருக்க வேண்டிய காலகட்டத்தில் 120 நாட்களுக்கு மேலாக பரோலில் வெளியில்தான் இருந்தார், அப்படி இருந்தும் அவர் நல்ல விதமாக நடந்து கொண்டார் என்பதை காரணம்காட்டி பலமாதங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதில் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது, அதை அரசும், நீதிமன்றங்களும் முடிவு செய்யட்டும், ஆனால் சஞ்சய் தத்தை சீக்கிரமே விடுதலை செய்யக்கூடாது என்று மும்பை குண்டுவெடிப்பில் உயிரழிந்த 257 பேரில் ஒருவர் கூட நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. காயம் அடைந்த 700க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரும் நீதிமன்றத்தை நாடவில்லை.

ஆனால், ராஜீவ் கொலைவழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் 28 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகும்,  அவர்களின் விடுதலைக்கு உச்சநீதி மன்றம், தமிழக அரசு, ராஜீவின் குடும்பத்தார் என எல்லோரும் இசைவு தந்தபிறகும் விடுதலை கிடைக்கவில்லை என்பதை எப்படி நாம் பார்ப்பது? உயிரழிந்த ஒவ்வொரு உயிரும் முக்கியமானதுதான் அதற்கு உரிய தண்டனைகளை நீதிமன்றமும் வழங்கிவிட்டன, இதற்கு பிறகு உயிர் இழந்தவர்களின் தரப்பில் எப்படி நீதிமன்றம் செல்ல முடியும்? பல தலைவர்களின் பிறந்தநாட்கள்,  நன்நடத்தை என பல காரணங்களால் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை கிடைக்கும் கைதிகள்  எல்லோருக்கும் எதிர் தரப்பு என்று ஒன்று இருக்கும், அப்படி இருக்கும் ஒவ்வொரு எதிர்தரப்பும் இதைப்போன்ற விடுதலைகளை எதிர்த்து நீதி மன்றங்கள் சென்றால் நீதி மன்றம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இதுவரை இந்திய வரலாற்றில் நடைபெற்றுள்ளதா என்பதை யாராவது சொல்வார்களா ? 

சிறைகள் இருப்பது சீர்திருத்தம் செய்யவே, குற்றவாளிகளை கொல்வதற்காக அல்ல. 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் வாதம் செய்யும் பலர், தண்டனை காலம் முடியும் முன்னரே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே, இதை நாம் எப்படி புரிந்து கொள்வது.?

(பேரறிவாளன் குற்றவாளியா அல்லது பொய் குற்றம் சாட்டப்பட்டவரா என்பது வேறு வாதம், இங்கே அந்த 7 பேரின் தண்டனை குறித்தும் அவர்களின் விடுதலை குறித்து மட்டுமே பார்க்கவேண்டும்).   

(குறிப்பு:- பா.ஜ அரசு வந்தவுடன் எந்த காரணங்களின் அடிப்படையில் சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டார் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு பிறகு அது தள்ளுபடி செய்யப்பட்டது).

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...