Tuesday, October 30, 2018

வழக்கறிஞர் அருள்மொழி

படுகொலைகளுக்கு
தனித்தனியே காரணம் கற்பிக்கும் போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சிய்யை பகிர்ந்து கொள்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு..சென்னையில் தன் பதினேழு வயதுப் பெண்ணை பறிகொடுத்த பெற்றோர் மிகுந்த துயரத்துடன் ஒரு வழக்கறிஞராக என்னைத்தேடி வந்தார்கள். ஒரே மகள் உயிருக்குயிராக வளர்த்து வெளியூரில் திருமணம் செய்தால் நினைத்தபோது மகளைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நான்கு வீடுகள்தள்ளி இருந்த நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நண்பர் மகன் அந்தப் பெண்ணை கொடுமைகள் படுத்தினான். அம்மா அப்பாவை பார்க்கக் தடை போட்டான் . மகள் இரண்டு நாட்களாக பட்டினி கிடக்கிறாள் என்று அறிந்து அந்த வீட்டிற்குப்போய் சமாதானம் செய்து வீட்டுக்கு வரச்சொன்ன தாயிடம் நீபோய் தோசை ஊத்தி வையம்மா நான் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னாள் மகள்.

வீட்டுக்குள் போய் மூன்றாவது தோசையை ஊற்றும்போது தெருவில் மக்கள் திடுதிடுவென்று ஓட்டுகிறார்கள். அதில் ஒருபெண் இந்தத்தாயின் வீட்டை எட்டிப் பார்த்து " அடியே உன் மகள் நெருப்பில் எரிகிறாளாம் ஓடி வா " என்று அலறிக் கொண்டே ஓட.. பதறி ஓடிய தாய் தன் மகள் கொழுந்து விட்டு  எரிவதைப் பார்த்தார். மருத்துவமனைக்குச் சென்ற பின் அந்த மகள் இறந்து விட்டள்.

அந்த வழக்கை காவல்துறை ஆய்வாளர் அந்த மருமகன் தன் மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் அதை தன் கண்ணால் அந்தத் தாய் பார்த்ததாகவும் வாக்குமூலம் எழுதி, கையெழுத்து வாங்கினார். அந்த நாயயை தூக்கில் போட வைக்கிறேன் என்றும் ஆறுதல் கூறினார். ஆனால் வழக்கின் முடிவில் அந்த மருமகன் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டான். காரணம் சாட்சியங்களுடைய குறுக்கு விசாரணையில் மற்றவர்கள் சொல்லித்தான் சம்பவ இடத்திற்கு தாயும் ஓடி வந்தார் என்பது தெளிவாகிவிட்டது. காவல் துறை பொய் வழக்கு போட்டதாக நீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள்.

நான் அந்தத் தீர்ப்பை எடுத்துக் கொண்டு புகழ் பெற்ற கிரிமினல் வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனை செய்தேன். அந்த வழக்கறிஞர் 5 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய பகுதிகளைப் படித்து விட்டுக் கூறினார், "அந்த இன்ஸ்பெக்டர் குற்றவாளிக்கு சாதகமாகவே வழக்கை பதிவு செய்திருக்கிறார்" என்று. பல்வேறு சந்தேகங்களைக் கேட்ட போது அவர் முத்தாய்ப்பாகக் கூறிய பதில் இதுதான்,

"நடந்ததை அப்படியே பதிவு செய்திருந்தால், தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அந்த மருமகனுக்கு உரிய தண்டனை கிடைத்திருக்கும். அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் அந்தத் தாய் பையெழுத்திட்ட தவறான வாக்குமூலம் தான் அவன் தப்பித்துக் கொள்ள உதவியது."

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், நடந்திருப்பது மிகக் கொடூரமான ஒரு குற்றம். அது போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வரை கிடைக்கச் செய்யும். நமது உணர்ச்சிக் கொந்தளிப்புகளை எல்லாம் போலீஸ் அறிக்கையாக அல்லது குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரவர் ஒரு புதுக்கதை எழுதுவது குற்றவாளிக்கு சாதகமாகத்தான் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கழுத்தறுப்பட்ட அந்தக் குழந்தையின் கதறலும் உடைந்து போய்க்கிடக்கும் அந்தத் தாயின் முகமும் அந்தத் தந்தையின் வேதனைக் குரலும் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நமது ஆதங்கமும் பதைப்பும் சரியான திசையில் செல்ல வேண்டும் என்கிற கவலை அதிகமாகிறது.

சமூகம் திருந்துவதும் முக்கியம் குற்றவாளி தண்டிக்கப்படுவதும் முக்கியம் என்பதை நினைவில் வெயுங்கள்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...