Sunday, December 16, 2018

ரவிக்குமார்

திரு Thangam Thenarasu அவர்களால் துளிர்விடும் நம்பிக்கை
- ரவிக்குமார்

கலைக்கு உள்ளத்தைப் பறிகொடுக்கும் பண்பு உன்னதமானது. படைப்பூக்கம் கொண்ட மனநிலை அரசியலுக்கு உகந்ததல்ல என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் அதுதான் இன்றைய அரசியலுக்குத் தேவை என்பது என்கருத்து. அரசியலுக்கு மட்டுமல்ல நீதித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் இருப்பவர்களுக்கும் அது அவசியம்.

முன்பெல்லாம் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் பலர் கூட்டங்களில் பேசுவதற்காக இலக்கியங்களை வாசிப்பதுண்டு எனப் படித்திருக்கிறேன். அப்படியான  வாசிப்பிலும்கூட அவர்களது பயன்பாட்டு நோக்கத்தையும் தாண்டி அந்த இலக்கியப் பிரதிகள் அவர்களது மனங்களில் தங்கி அவர்களிடம் கொஞ்சம் மனிதத்தன்மையைத் தக்கவைத்ததை அவர்களது செயல்பாடுகள் காட்டியுள்ளன.

கற்பனை வறண்டுபோன மனம்  வெறுப்பு கனலும் பாலையாகிறது. அப்படியான மனம் கொண்டோரின் கையில் அதிகாரம் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தமிழகத்தில் உதாரணங்கள் பல உண்டு.

நீதித் துறையில் இருந்தவர்கள் பலர் தமிழின் சமய இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. இப்போது அப்படி ஒருவர்கூட இல்லை. நீதிபதிகளாயிருந்து இப்போது ஓய்வுபெற்றுவிட்ட திரு சந்துரு அவர்களும் திரு பிரபா ஶ்ரீதேவன் அவர்களும் வழங்கிய தீர்ப்புகளில் அவர்களுக்கிருந்த இலக்கிய ஆர்வம் தென்படக் காணலாம். இப்போது
அப்படியான நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளிலும்கூட இலக்கிய ஆர்வம் கொண்டவர்களை இப்போது தேடத்தான் வேண்டியிருக்கிறது. சட்டங்களையும் விதிகளையும் மனிதர்களைவிட முக்கியமாகக் கருதும் அதிகாரிகள் நேர்மையாளர்களாக இருக்கலாமே தவிர மக்களுக்கு உதவக்கூடிய திட்டங்களை வகுப்பவர்களாக இருக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் கலையில் ஈடுபாடுகொண்ட ஒருவர்
திரு தங்கம் தென்னரசு. தொல்லியல்,  ஆண்டாள் பாசுரம் மட்டுமல்ல எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் வரை அவருக்கு ஆழ்ந்த பற்றும் புலமையும் உண்டு.

அவரைப் பார்க்கும்போதெல்லாம்
எதிர்காலத்தின்மீது சிறிய நம்பிக்கை துளிர்க்கும். நேற்றிரவு கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது கூட்ட நெரிசலில்  அவரைப் பார்த்தேன். மார்கழியும் ஆண்டாள் மீதான அவரது ஈடுபாடும் நினைவுக்கு வந்தன.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...