"தடைகளைத் தகர்த்தெறிவோம் ! திறமைகளை வளர்த்தெடுப்போம் !! "
- 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , ' தாகம் ' இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் !
'தாகம்' விமர்சனத்தைப் படித்தேன். நன்றி.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வியில் வென்றால்தான் விளையாட்டில் வெல்ல முடியும், என்ற தங்களின் கருத்து மற்ற விளையாட்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், மகளிர் கிரிக்கெட்டைக்கட்டுக்கு கல்வித்தகுதி முக்கியம் இல்லை. ' கனா ' படத்தில் நடித்த அத்தனை கிரிக்கெட் வீராங்கனைகளும் நிஜ வீராங்கனைகள். ஆஸ்திரேலியா அணி உட்பட. அதில் பலருக்கு பெரிய கல்வித்தகுதி எல்லாம் இல்லை. ஆங்கிலம் தெரியாதவர்கள் பலர் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளனர். நீங்கள் சொல்லும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக அணிகளில் விளையாடிய தகுதி எல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் இருக்கலாம். இங்குப் பெண்கள் விளையாட்டுத்துறைக்கு வருவதே அபூர்வம். அதுவும் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வம் என்பது மிகக் குறைவு. அதனால்தான் வெறும் திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
# உங்கள் கருத்துக்கே வருகிறேன். குறைந்தபட்சம் ஒரு கிளப்பிலாவது விளையாடுவது கிரிக்கெட்டுக்கு அவசியம்தானே ?
கண்டிப்பாக. இப்படத்தின் நாயகியும் அதுபோல் போராடி இந்திய அணியில் இடம் பிடிப்பதாக ஒரு பாடலில் காட்சிகள் வைத்திருப்பேன். இன்னொன்று, நீங்கள் பார்க்கும் நுட்பமான குறியீடுகள் எல்லாம் விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். ஒரு ஏழை விவசாயியின் மகள் எப்படி விளையாட்டுத்துறையில் போராடி ஜெயிக்கிறாள் என்பதே என் திரைக்கதை. அதை வெகு மக்கள் மிக எளிதாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது எனக்குப் பெரிய திருப்தி. பலர் என் தொலைபேசியில் ஆனந்த கண்ணீர் வடித்து வருகின்றனர். எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
# உங்கள் பள்ளி கல்லூரி நாள்கள் எப்படி ?
பள்ளி முழுவதும் என் குளித்தலையில் தான். கல்லூரி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி. இயல்பாகவே எனக்கு தமிழ் மீது பற்று உண்டு. அதற்காக எப்போதும் நூல்களும் கையுமாக அலைவதில்லை. என் மொழி மீதான ஆர்வம்தான் என்னை 'நெருப்புடா' உட்பட ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுத வைத்தது.
# திரைத்துறை ஆர்வம் எப்படி?
விஜய் தொலைக்காட்சி ஒரு திறவுகோல். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி என் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. அந்த இயக்நர் குழுவில் நான்தான் கடைசியாக படம் இயக்கினேன். என் நண்பர்கள் எல்லோரும் முந்திக்கொண்டார்கள்.
# விவசாயத்தை உயர்த்திப்பிடித்துள்ளீர்களே , நீங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரா?
ஆம். ஆனால் என் தந்தை முழு நேர விவசாயி அல்ல. நான் குளித்தலைக்காரன் என்பதால், டெல்டா விவசாயிகள் படும் துயரங்கள் அத்தனையும் எனக்குத்தெரியும். படத்தில் விவசாயம் குறித்தப் பகுதி மிகவும் கனமாக உள்ளதாக சிலர் சொன்னார்கள். உண்மைதான் , அவர்கள் படும் துயரத்தை நான் அப்படியே பதிவு செய்துள்ளேன். கொஞ்சம் அசந்திருந்தால் 'கனா' ஓர் ஆவணப்படமாக மாறி இருக்கும். அதைப்பற்றி நானும் கவலைப்படவில்லை, இப்படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனும் கவலைப்படவிலலை. எங்கள் நோக்கம் நல்ல படம். அதே நேரத்தில் கமர்சியல் வெற்றி. இரண்டு சாத்தியமானதில் மிக்க மகிழ்ச்சி.
# உண்மையான் கிரிக்கெட் வீராங்கனைகள் நடித்துள்ளதாக சொன்னீர்கள் . அவர்கள் 'கனாவை' எப்படி உணர்ந்தார்கள் ?
மிகவும் நெகிழ்ந்தார்கள். அவரவர் வாழ்வின் போராட்டங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
# ஏற்கனவே இதே கருவைக்கொண்டு இயக்குநர் சுசீந்திரன் 'ஜீவா' தந்தார். அது முழுக்க முழுக்க கிரிக்கெட்டில் நிலவும் சாதி அரசியலை பேசியது அல்லவா?
ஆமாம். நானும் அது பற்றி பேசி இருக்கலாம். திட்டமிட்டே தவிர்த்தேன். இங்கு விளையாட்டில் மட்டுமா சாதியும் அரசியலும் உள்ளது ? அவை ஆதிக்கம் இல்லாத ஒரே ஒரு துறையைச் சொல்லுங்கள். பிரச்சனை பிரச்சனை என்று புலம்புவதை விட அதை எப்படி உடைத்து வெல்வது என்றுதான் யோசிக்க வேண்டும். அதைத்தான் என் 'கனா' சொல்கிறது.
'தாகம்' விமர்சனத்தில், நம் நாட்டில் கல்விக்கு தரும் முக்கியத்துவம் விளையாட்டுக்கு தரப்படுவதில்லை என்று எழுதி உள்ளீர்கள். உண்மைதான். ஆனால் , பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த டெண்டுல்கர் எப்படி ஜெயிக்க முடிந்தது ? கல்வித்தகுதியே இல்லாதவனும் இங்கே திறமையின் அடிப்படையில் வென்றாக வேண்டும். அது இந்தியா முழுவதும் நடந்தாக வேண்டும்.
# கவிஞர், பாடலாசிரியர், சமூக அக்கறை கொண்ட இயக்குநருக்கு நிச்சயம் அரசியல் பார்வை இருக்குமே ?
அது இல்லாமலா? என் அரசியல் என்பது , உங்கள் தொகுதி வேட்பாளரின் தகுதி பார்த்து வாக்களியுங்கள் மக்களே.... என்பதுதான். அவர் எத்தனைப் பெரிய கட்சி வேட்பாளராக இருந்தாலும் , அவர் நேர்மை இல்லாதவர், மக்களுக்காக குரல் கொடுக்காதவர் என்றால் அவரை நிராகரியுங்கள். கட்சியைப்பார்த்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யாதீர்கள். உங்கள் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் யோக்கியர் என்றால் அவரை தேர்வு செய்யுங்கள்.
நேர்மையாளர்கள் வெல்ல வெல்ல, கட்சிகள் தானாக முன் வந்து நேர்மையான வேட்பாளர்களை நிறுத்தும்.
நன்றி. வணக்கம். 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தாகம்' இதழுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
No comments:
Post a Comment