Monday, December 24, 2018

தமிழ் தமிழ் இளங்கோவன்

சில நாட்கள் கழித்து, உருகி,உருகி, ஏங்கி,ஏங்கி, உற்சாகமாய் துள்ளி, துள்ளி ஒரு படம் பார்த்தேன். அது, என்னால் அடைய முடியாத, ஆனால் அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியோடு இருந்த என் கனவின் செல்லுலாய்டு வடிவம் "கனா". முதல் காட்சியிலேயே ஏனோ என்னை அறியாமல் கலங்க தொடங்கியவன், அடுத்தடுத்து அந்த குழந்தையின் ஆசை, ஏக்கம் எல்லாம் பார்க்க பார்க்க உருமாறினேன். என்னையே சின்ன வயது பையனாய் அந்த குழந்தைக்குள் சுருட்டி வைத்துவிட்ட உணர்வு. சின்ன வயதில் கிரிக்கெட் தான் என் உலகம். சரியாக சொல்லித் தர ஆள் இல்லை.விளையாட ஒருமுறையும் பெற்றோர்களிடம் அனுமதி கிடைத்ததில்லை. எப்படி கற்றுக்கொண்டேன் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஏகலைவன் போலவே கிரிக்கெட் வீரனானேன். எனது இடது கை பழக்கம், என் அப்பாவுக்கு வேண்டுமானால் இடைஞ்சலாக இருந்திருக்கலாம்...என் பள்ளி மற்றும் சேலம் கிட்சிப்பாளையம் ஏரியா பசங்களுக்கு அது வரப்பிரசாதம். பவுலிங், பேட்டிங் என என்னுடைய ஆட்டமும், அதில் கிடைக்கும் ஆனந்தமும், 'ஓம் சிவோம்' எனும் 'நான் கடவுள்' தாண்டவம் தான். பந்தை பாய்ந்து பிடிக்க முள்செடிக்குள் விழுந்தது, கை கால் எல்லாம் முள் கிழித்து தொங்கினாலும் கவலையில்லாமல், கேட்ச் பிடித்த ஆனந்தத்தை கொண்டாடியது, உச்சகட்ட பரபரப்பான ஆட்டத்தில் எல்லையில் விழுந்து நான்கு ரன்களை தடுத்து ஒரு ரன்னில் வென்றது, ஏரியாவின் சிறந்த அணியின் சிறந்த பவுலரின் சிறந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தது, இந்த 37 வயதில் குன்றத்தூரில் ஹாட்ரிக் விக்கட் எடுத்தது ....எல்லாமே 'கனா' பார்க்க பார்க்க அப்படியே பக்கத்தில் ஒரு ஸ்க்ரீனில் என் முன் வந்து நிழலாடியது. பந்து கொடுக்கமாட்டார்களா? அணியில் சேர்க்க மாட்டார்களா ? என்ற அந்த குழந்தையின் ஏக்கத்தை பார்த்த அந்த நேரம், எனக்கு தாரை தாரையாக கண்களில் நீர். என் நண்பனுக்கு தெரியாமல் குலுங்கி அழுதேன். சின்ன வயதில் எனக்கும் அரங்கேறிய ஒன்று.  நம்மை நாமே மறுமுறை கண் முன் பார்த்த உணர்வு. இப்போதும், என்னுடைய 1996-1997 டைரி எடுத்து பார்த்தால், 'தாவி வந்து மூன்று கேட்ச்களைப் பிடித்தேன், இந்த வாரம் நான்கு மேட்ச்களில் டக் அவுட் ஆனேன். தாங்கவே முடியவில்லை' என்ற பதிவுகளால் மட்டுமே நிரம்பியிருக்கும். அப்போதும் சரி, இப்போதும் சரி விளையாட்டுதான் என் உலகம். இப்போது கூட , சில வாரங்கள் மட்டுமே விளையாடிய எங்கள் கிரிக்கெட் அணியை, யாரும் விளையாட வராததால் சட்டென கலைக்கப்பட்டது. இதற்காக அழுத கண்ணீர் என தனிமைக்கு மட்டுமே தெரியும். வயது, என் விளையாட்டு உணர்வுக்கு தடையாக இருந்ததே இல்லை. அப்படியான என் உள்ளுணர்வை, கனா திரைவடிவமாய் கண் முன் நிறுத்தியது.
  இந்த படத்திற்கும் எனக்கும் சிறு வித்தியாசம் தான். படத்தில் அம்மா மட்டும்தான் மகளை விளையாட கூடாது என்று அடிப்பார். என் வாழ்வில் அதை என் அப்பா, அம்மா இருவருமே இணைந்து செய்தனர். குடும்பம்னா சமத்துவம் வேண்டாமா!
கனா-வின் தந்தை முருகேசனை (சத்யராஜ்) பார்க்கும்போது, ஏக்கத்தில் கண்ணீர் சிந்தினேன். என்னை எப்போதும் என் தந்தை விளையாட அனுமதித்ததே இல்லை. பொதுவாக தம் கனவுகளை , மகன்-மகள் மீது சுமத்துவது பல தந்தைகளின்  இயல்பு. முருகேசனின் கனவு, குழந்தைகளின் இயல்போடு ஒட்டியிருந்தது. என் தந்தையின் கனவோ, அவர் அடையமுடியாத உயரத்தில் இருந்து பிறந்ததாகவே இருந்தது. பெரும்பாலான தந்தைகளைப் போலவே படித்தால் மட்டுமே உயரத்தை அடைய முடியும் என நம்பியவரில் இவரும் ஒருவர். அவர்களின் கனவில் குழந்தைகள் மீதான அக்கறை இருந்தது என்பதில் பிழையில்லை. ஆனால் அதை அவர்கள் சாத்தியப்படுத்த, நடத்தும் அணுகுமுறையே பல குழந்தைகளை உளவியலாக சிதைத்துவிடுகிறது. கிரிக்கெட் விளையாடினால், புட்பால் விளையாடினால் படிப்பு ஏறாது...முன்னேற முடியாது என சொல்லி சொல்லியே இளமையின் துடிப்புக்கு அணை போட்டனர். ஒருமுறை கூட உண்மை சொல்லி விளையாட போனதில்லை. இப்படி ஒடுக்கப்பட்ட உணர்வுகளோடு பயணித்த என் போன்றவனுக்கு, முருகேசன் கொஞ்சம் பொறாமையை தூண்டவே செய்தார்.  
என் அப்பா போன்றவர்களை குறை சொல்லி தவறில்லை. அவரும் விவசாய குடும்பத்தில் பிறந்து, முயற்சியால் மெக்கானிக்காக வளர்ந்தவர். கனா முருகேசனைப் போலவே விவசாயம் பொய்த்துப் போய், குடும்பம் சிதைந்து...அது ஒரு திசையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. சுயமரியாதையோடு வாழவும், பலரின் அங்கீகாரத்தைப் பெறவும் கல்வி ஒன்றே சிறந்த வழி, அதற்கு மதிப்பெண் மட்டுமே ஏணிப்படி என அவர் நம்பியதில் தவறில்லை. இந்த இந்திய நாட்டில் ஏழை கனவுகள் அரியணை ஏற எந்த அரசு தான் வாய்ப்பு வழங்கியுள்ளது??? நாட்டை வல்லரசாக்குவது என்பது பல கோடி ஏழை இளைஞர்களின் கனவுகளைப் புதைத்து, உழைப்பை உறிந்து , சில பெருந்தொழிலதிபர்களை கொள்ளை லாபமடைய வைப்பதாகத் தானே உள்ளது. 
கவுசல்யா-வின் ஒவ்வொரு பந்தும் நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற விளையாட்டு ஆர்வமுள்ள பல கோடி இளம் பட்டாளம் வீசிய பந்துகளாக இருந்தன. அவர் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும், இளம் கூட்டத்தின் கனவுகளை சிதைக்கும் மோசமான இந்த சமூக சூழலையும், அதை ஏற்படுத்திய கார்ப்பரேட் வர்கத்தின் சுரண்டலை வீழ்த்த வேண்டும் என உணர்த்தியவைகள்.
கவுசல்யாவின் கனா, நாட்டில் உள்ள பல கோடி ஆண்-பெண் கவுசல்யாக்களின் கனவை நிறைவேற்றுவதற்கான தூண்டுதலாக இருக்கட்டும்.
கவுசல்யாவின் முகத்தின் ஐஸ்வர்யாவை பார்க்கவில்லை. அதில், என்னையே எனக்கு காட்டிய இயக்குனர் அருணுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும், அன்பு முத்தங்களும்.
'கனா'- நிஜமாகட்டும். !

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...