Wednesday, December 12, 2018

கோவி லெனின்

‘இந்தி’ பெல்ட் எனப்படும் மாநிலங்களை ‘இந்து’ வெறி பெல்ட்டாக மாற்றி தனது ஆளுகைக்குள் வைத்திருந்த பா.ஜ.க.வை அசைத்துப் பார்த்திருக்கிறது காங்கிரஸ். மோடிக்கும் ராகுலுக்குமான நேரடிப் போட்டியில் முதன்முறையாக ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தன் வலிமையைக் காட்டியுள்ளதன் விளைவுதான் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றி.
வாக்கு வித்தியாசம் மிக மெலிதாக இருப்பதும்-சில இடங்களில் காங்கிரஸைவிட பா.ஜ.க. கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பதும் காங்கிரஸ் கடக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, சாதி-மத-ஆதிக்க மனப்பான்மை ஊறிய ம.பி.யிலும் ராஜஸ்தானிலும் நகர்ப்புறங்களில் பா.ஜ.க.வை எதிர்கொண்ட அளவுக்கு கிராமப்புறங்களில் காங்கிரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில், சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தபோதும் அது பா.ஜ.க.வை துவைத்து எடுத்திருக்கிறது.

மக்களோடு நின்று அவர்களுக்கு நம்பிக்கை தருவதுதான் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான அடிப்படை இலக்கணம். பழம் பெருச்சாளிகள் நிறைந்த வடமாநில காங்கிரஸில் இம்முறை மூத்தோர்-இளையோர் இணைந்த செயல்பாட்டு அணியை ராகுல் கட்டமைத்ததற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. ஆனால், இம்மாநிலங்களில் பா.ஜ.க.வின் 15 ஆண்டுகால ஊடுருவலை எதிர்கொள்ள காங்கிரஸ் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.
தெலங்கானாவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியும், வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வசம் மிச்சமிருந்த மிசோரம் மாநிலத்தை இழந்திருப்பதும், காங்கிரசைவிட மாநிலக் கட்சிகள் வலுப் பெற்றுள்ள நிலையைக் காட்டுகிறது.

5 மாநிலங்களிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டிருப்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் ‘Anti-Indian’களாகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. குறிப்பாக விவசாயிகள்-வணிகர்கள்-இளைஞர்கள்-புதிய வாக்காளர்கள் என Anti Indianகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது.
மனிதர்களைவிட மாடுதான் முக்கியம். மாநில வளர்ச்சியைவிட கோவிலும் சிலைகளும்தான் முக்கியம் எனத் திமிர்த்தனத்துடன் திரிந்த மோடி-அமித்ஷா-யோகி உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் 5 மாநில மக்கள்.
‘சாவு பயத்தைக் காட்டிட்டானுங்கடா பரமா“ என்கிற நிலையில் பா.ஜ.க. தரப்பு இருக்கிறது.
பயம் காட்டிய காங்கிரஸ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தன் பலம் காட்ட கூடுதல் கவனத்துடன் வியூகம் வகுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்த செமிஃபைனல் தேர்தலுக்குப் பிறகு, எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத ஆட்சி என்கிற வரைபடத்தைப் பார்க்கையில், இந்தியா இப்போதுதான் புடவை கட்டி செல்ஃபி எடுத்தது போல இருக்கிறது.

திருவள்ளுவர் ஆண்டு 2049 கார்த்திகை 26

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...