தமிழ் நாட்டில் ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்று,’’ நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிப்பது குறித்த எதிர்பார்ப்புகள்...!
தன்னை மையப்படுத்தி அவரவர் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட, பரப்பப்பட்ட செய்திகளால் தனக்கு சாதகமான அம்சங்களை மேலும் அதிகப்படுத்தி தன் பட வெற்றிகளுக்கு பயன்படுத்திக் கொண்டார் ரஜினி.ஆனால்,அவரது விருப்பம், நோக்கம் குறித்து இது வரை அவர் உறுதியாகவும்,திட்டவட்டமாகவும் தன்னை வெளிப்படுத்தவில்லை.
1996 ஆம் ஆண்டு அவர் ஜெயலலிதாவை எதிர்த்து,அறிக்கை விட்டு முக்கியத்துவம் அடைந்த போது, அவரே நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உச்சத்தில் இருந்தது.ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அப்போது துக்ளக்கிற்காக நாங்கள் செய்த கருத்துக் கணிப்பில் இதை மிக பிரத்தியட்சமாக உணர்ந்து வியந்து போனோம்.!
சோ சார் ரஜினியை அழைத்து மேற்படி நிலவரங்களை விரிவாக விளக்கினார். ரஜினியும் மிக ஆர்வத்தோடு கேட்டு மகிழ்ந்து உணர்ச்சிவசமானார்.
ஆனால்,அவர் தன்னுடைய அரசியல் விருப்பம் என்று எதையும் வெளிப்படுத்தவில்லை.அரசியல் என்பது சுய விருப்பத்துடனும்,அதற்கான உழைப்பை தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மட்டுமே கைகூடும் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்து வைத்திருந்தவர் என்ற வகையில் சோ வும் அவராக வெளிப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
ஆனால்,இதன் பிறகு ரஜினி தனக்கு சூட்டிங் இல்லாத காலகட்டங்களிலெல்லாம் அடிக்கடி துக்ளக் அலுவலகம் வந்து சோவிடம் அரசியல் பற்றி பெரு விருப்பத்தோடு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நிறைய சந்தேகங்கள் எழுப்பி விளக்கம் பெறுவார்.சோ வும் சலிக்காமல் பேசி விளக்கம் தருவார்.பல நேரங்களில் சோ கடுமையான பத்திரிகை பணிகளுக்கு இடையே ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்துவிடுவார். ஆனாலும், வயது மற்றும் வேலைகளின் காரணமாக தனக்கேற்பட்ட சோர்வையும் பொருட்படுத்தாமல் நீண்ட உரையாடலை செய்வார்.
ரஜினிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாரே.., உண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்துவிடக் கூடும் என்று அலுவலகத்தில் எல்லோரும் நினைத்தோம். ஆனால், ஒரு நாள் சோ,’’ இவர் ஏன் இப்படி அடிக்கடி வந்து அரசியல் பேசறார்,..பிறகு எந்த டெவப்மெண்டும் இல்லாமல் சும்மா இருக்கிறார்.பிறகு மீண்டும் ஆர்வம் காட்டறார்.. என்றே தெரியவில்லை...’’ என்றார்.
’’சார், நீங்க ஏன் சார் இவர்கிட்ட உங்க நேரத்தை மெனக்கிடறீங்க..’’என்றேன் நான்...!
எம் ஜீ ஆர் அரசியலுக்கு வந்த போது அவரை மிகக் கடுமையாக எதிர்த்தேன்.ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறேன்,அவரை சற்று மென்மையாக கையாண்டிருந்தால் சில நல்ல காரியங்களையாவது செய்ய வைத்திருக்கலாம்...அது போல ரஜினி விஷயத்தில் இருந்துவிட வேண்டாம்.. என்பது தான் என் எண்ணம்! நாட்டுக்கு இவரால் ஏதோ கொஞ்சம் நன்மை நடக்கும் என்றால்,அதற்கு உதவலாமே
..என்பதற்காகத் தான் பொறுமையாக போய்கிட்டிருக்கேனே தவிர ,எனக்கே அவர் போக்கை புரிஞ்சிக்க முடியவில்லை...! ஏதோ வர்றார்,பேசறார்..போறார்..ஏதேதோ ஜாலியா பேசறோம்..டைம் பாசாகுது..! என்றார்.
ரஜினி தன்னிடம் வந்து பேசுவது குறித்து ஒரு போதும் மற்றவர்களிடமோ,மீடியாக்களிடமோ சோ பேசியதே இல்லை.
ஆனால், ரஜினி விஷயத்தில் சோ எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ள முடியாது என்ற தெளிவுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசாத்தியமான பொறுமையைக் கையாண்டார் என்று தான் சொல்ல வேண்டும்! ஒரு சமயம் ரஜினியின் முட்டாள்தனமான அரசியல் அபிலாசைக்கு ஒத்துழைக்க முடியாது எனக் கூறி அவரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார். அதை பிறகு சொல்கிறேன்.
No comments:
Post a Comment