Wednesday, January 9, 2019

உழைப்பு மட்டும் போதுமா தளபதி?

உழைப்பு மட்டும் போதுமா தளபதி?
------------------------------------------------------------

மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளாக இதேப் போன்ற மக்கள் சந்திப்பில் அவர் விரையமாக்கிய உழைப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. இருந்தும் தி.மு.க ஏன் தோற்றது என்று அவர் ஆராயவில்லைப்போலும் ?

முன்பைக்காட்டிலும் மக்கள் பெருமளவில் மாற்றத்தை விரும்புகிறார்கள். தி.மு.க உடனடியாக செய்ய வேண்டியது இப்போதைய மாணவர் இளைஞர்களை எப்படி கட்சிக்கு ஆதரவாக இழுப்பது என்பதுதான்.

தி.மு.கவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு இல்லை என்றாலும் , அது ஏன் ஆர்.கே.நகரில் தன் வழக்கமான வாக்குகளைக்கூட பெறவில்லை?

தி.மு.கவில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பது மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு.

ஏற்கனவே கட்சியில் கொட்டைப்போட்டு வளர்ந்துள்ள பலர் , மீண்டும் தங்கள் வாரிசுகளுக்கு எளிதாக பதவி பெறும்போதுதான் மக்கள் பெரும் அதிருப்தி அடைகின்றனர்.

ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அ.தி.மு.க அரசின் ஆட்சி நீடிக்க ஒரே காரணம், அவர் உயிரோடு இருந்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித பின்புலமும் இல்லாத புதியவர்களுக்கு வாய்ப்பளித்தார். அமைசர்களாக்கி அழகுப்பார்த்தார். தி.மு.க அதைச்செய்ய தயங்குகிறது .அஞ்சுகிறது.

இணையதள தி.மு.கவினர் ஈழத்துக்கு எதிராக பரப்பும் அவதூறு கருத்துக்கள்தான், இன்றைய சமூக வலை தள ஆர்வமுள்ள இளைஞர்களை தி.மு.கவுக்கு எதிராக திருப்புகிறது.

ஈழப்படுகொலைக்குக்காரணம் காங்கிரஸ் கட்சி என்பது இன்றளவும் மக்கள் மனதில் ஆறாத வடுவாக உள்ளது  . இந்த நிலையில் தி.மு.க காங்கிரஸ் கட்சிக்கு தீவிரமாக முட்டுக்கொடுப்பது தேர்தலில் கடும் பின்னடைவைத் தரும்.

மக்களைச் சந்தியுங்கள் தளபதி. தவறில்லை.  அதற்கு முன் மாணவர்கள் இளைஞர்களை சென்று சந்தியுங்கள். அன்றைய மாணவர்கள்தான் தி.மு.கவின் வேர்.  இன்றைய மாணவர் இளைஞர்களுக்கு, அவர்கள் தந்தை மட்டுமே தி.மு.கவைப்பற்றி விளக்குகிறார். ஆனால், கட்சி இன்றைய இளைஞர்களைக்கவர மறந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு தரும் முக்கியத்துவத்தை உங்களுடன் நிற்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்குக் கொடுங்கள். அவர்கள்தான் தி.மு.கவை ஆட்சிக்கட்டிலில் அமர உதவுவார்கள்.

கூட்டணித்தலைவர்கள் குறித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் 'துரை' களின் வாயை தைத்து வையுங்கள்.

சமூக வலைத்தளங்கள் தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகின்றன. இணையதள தி.மு.கவை கண்காணியுங்கள். ஒரு தொகுதியில் தி.மு.க குறைவான வாக்குகளில் தோற்கிறது என்றால், அது உங்கள் இணையதள தி.மு.க நடத்திய திருப்பணியே காரணமாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் சொல்கிறோம். உங்கள் தனிப்பட்ட கடுமையான உழைப்பை யாரும் குறை சொல்லவில்லை. வெற்றிக்கு அது மட்டும் போதாது என்பதே கடந்த கால உண்மை.

- தாகம் இதழுக்காக....மு. எழிலரசு

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...