'புதிய தலைமுறை'யில் பணியாற்றியபோதுதான் அவரோடு அறிமுகம். சுகுணா திவாகரின் மகனுடைய முதல் பிறந்தநாளில்தான் அவரை முதன்முதலில் பார்த்தேன். கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாள் அவர் 'இத்தனை நாள் எங்கே இருந்தே?' என்றார். என்னைப்போன்ற பலரையும் அவர் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகள்தான் என்னை சிறுகதை எழுதத் தூண்டின. 'உன்னால் சிறுகதைகள் எழுதமுடியும்' என்கிற அவருடைய வார்த்தைகளே 'இரவில் கரையும் நிழல்கள்' என்கிற என் முதல் சிறுகதைக்கு அடிக்கோலியது. அந்த சிறுகதை 'உயிர் எழுத்து' இதழில் வெளிவந்தது. கதை அப்போது பரவலான கவனத்தைப் பெற்றது. அக்கதையை அவருக்கு அனுப்பியபோது கடிதத்தை இப்படித்தான் தொடங்கினேன் - 'அன்புள்ள க(அ)ண்ணா'. அதன்பின் எப்போதும் அப்படித்தான் விளித்திருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் அவரை 'சார்' என்றழைக்க நான் மட்டும் 'அண்ணா' என்றேதான் அழைத்தேன். இன்றுவரை அப்படியே. எனக்கு சிறுகதை எழுத வரும் என்பதையே என் கட்டுரைகள் மூலம் கண்டறிந்து எனக்கே சொன்னவர் அவர்தான். என் 'நீளும் கனவு' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். இரண்டாவது சிறுகதை விகடனில் வந்தது. இதழ் அச்சுக்குச் சென்றபின் ஒரு திருத்தம் தோன்றி அவரை அழைத்தேன். 'அச்சுக்குப் போய்விட்டது. தொகுப்பு போடும்போது திருத்தி போடு' என்றார். தொகுப்பு போடுவேனா, அத்தனை சிறுகதைகள் எழுதுவேனா என்பதெல்லாம் எனக்கே தெரியாதபோது, தொகுப்பு வெளியிடவேண்டும் என்கிற உத்வேகம் வந்ததும் அவரால்தான்.
அதன்பிறகு கவிதைகள் எழுதத் தொடங்கினேன். பிற இதழ்களில் வெளிவந்ததோடு ஆனந்தவிகடனிலும் என் கவிதைகள் வெளிவந்தன.
போலவே சிறுகதைகளும். நான் புனைவு எழுத தொடங்கியதற்கான மிக மிக முக்கியமான காரணம் அவர். முதல் தொகுப்பு 2014 ஜனவரியில் வெளிவந்தது அதன்பின் சிறுகதைத் தொகுப்பு எதுவும் வரவில்லை. பெரிதாக சிறுகதைகளும் எழுதவில்லை ஒருவேளை எழுது என்று சொல்லி ஊக்கப்படுத்த இப்போது பெரிதாக ஆள் இல்லை என்பதனால் கூட இருக்கலாம்.
என்னுடைய புனைவு நூல் அல்லது அபுனைவு நூல் என்று எதுவாக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லாமல் இதுவரை நான் புத்தகம் வெளியிட்டதில்லை. பிறந்தநாள் அன்று அவருடைய வாழ்த்துக்காக காத்திருப்பதும் இப்போது வரை தொடர்கிறது. என்னுடைய ஊடக வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டுரைகளை விகடனில் பணியாற்றியபோது எழுதியிருக்கிறேன்.
அவர் ஆனந்தவிகடனில் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார் என்கிற செய்தியை மை.பாரதிராஜா ஒரு நாள் அலைபேசியில் எனக்கு தெரிவித்தார். உண்மையில் வேறு எந்த விஷயத்திற்காகவும் அப்போது அத்தனை சந்தோஷப்பட்டு இருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை.
அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு பின் விகடனில் உண்டான மாற்றங்கள் இன்றும் பல பழமைவாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பதை அறிகிறேன். இளைஞர்கள், புதிய நம்பிக்கையை ஊட்டுபவர்கள், புதிதாய் சிந்திப்பவர்கள் எழுதுவதற்கு அவர் களம் அமைத்துத்
தந்தார். ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளை எளிதாக எழுத முடிந்தது. பணியாற்றிய காலத்தில் அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம்.
தனிப்பட்ட உறவை அலுவல்ரீதியான உறவோடு குழப்பிக் கொள்ளவே மாட்டார். இது எப்போதும் அவரிடம் வியக்கும் ஒரு விஷயம். அலுவலகத்தில் என்னை 'வாங்க போங்க' என மிக மரியாதையோடு அழைப்பது வழக்கம் ஆனால் அலுவலகத்திற்கு வெளியே சென்று விட்டால் நாம் எதற்காகவாவது அலைபேசியில் அழைத்தால் என்னை எப்பொழுதும் போல ஒருமையில் அழைப்பார். அலுவலகத்திற்குள் என்னை ஒருமுறை கூட ஒருமையில் அழைத்தது இல்லை. ஒருமுறை கூட அதில் அவர் தவறியதே இல்லை இது எனக்கு மிகவும் வியப்பை அளிக்கும் ஒரு விஷயம்.
ஆனால் விகடனுக்கு பணியாற்றச் சென்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக அன்பான அண்ணனை நான் இழந்து வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். மனிதர்களை அதிகம் நேசிக்கும் எனக்கு கிடைத்த உறவுகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் எனக்கு இது பெரிய சிக்கலாக இருந்தது. ஒருமுறை அவரிடமே கூட ஒரு குறுஞ்செய்தியில் கேட்டேன் 'நான் விகடனை விட்டு வெளியே சென்று விட்டால் நீங்கள் பழையபடி அன்பான அண்ணனாக இருப்பீர்கள்தானே?' என்று கேட்டிருக்கிறேன்.
இவையெல்லாவற்றுக்கும் நடுவிலும் பல கட்டுரைகளை அவர் இருந்ததால் மட்டுமே எழுத முடிந்தது. விகடனில் 'அன்பானவர்களுக்கு ஒரு கடிதம்' என்கிற தலைப்பில் தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்டதை ஒட்டி எழுதிய கட்டுரைக்கு லாட்லி விருதுபெற்றேன்.
' அலறல்களின் பாடல்' என்கிற எனது கவிதை விகடனில் பிரசுரிக்கப்பட்டது. கவிஞர் குட்டி ரேவதி அடிக்கடி சுட்டிக் காட்டுவதைப் போல 'முலை' போன்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு கவிதை ஒரு வெகுஜன இதழில் வருவது அதுவே முதல் முறை. அவரால்தான் அது சாத்தியமானது.
பாரதிதம்பி 'ஆண்களின் உலகம்' எழுத, நான் அடுத்த வாரம் 'பெண்களின் உலகம்' எழுத, லிவிங் ஸ்மைல் வித்யா 'திருநங்கைகளின் உலகம்' எழுதினாள். அது உண்மையில் எங்களுடைய பொற்காலம்.
ஸ்மைலியின் கட்டுரையை வாசித்துவிட்டு 'அவங்க நல்லா எழுதறாங்க. விகடனுக்கு வேலைக்கு வருவாங்களா?' என்று கேட்டார். எம்.டி.யிடம் பேசி ஒப்புதலும் வாங்கிவிட்டார். ஆனால் ஸ்மைலி 'நாடகமே என் உலகம்' என இருந்துவிட்டாள். இப்போது போலல்ல. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் திருநங்கைகள் குறித்த புரிதல் சமூகத்தில் குறைவாய் இருந்த காலத்திலேயே அவர் அப்படி யோசித்தவர். ஸ்மைலி அந்த வேலையை ஒப்புக்கொண்டு வந்திருக்கலாம் என்பது இப்போதுவரை என் ஆதங்கமாக இருக்கிறது.
தோழர் புனிதப்பாண்டியனை நான் எடுத்த பேட்டியில் 'பார்ப்பனர்' என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தார். முன்பெல்லாம் செய்யப்பட்டதுபோல அச்சொல் 'பிராமணர்' என்று மாற்றப்படாமல் அப்படியே அச்சேறியது. விகடனின் வரலாற்றில் அச்சொல் அச்சேறுவது அதுவே முதல்முறை என வெளியில் தோழர்கள் கூறினர். இதை என் 'அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இப்படி பல முதல் விஷயங்கள் அவரால்தான் நடந்தன.
ஒரு சிக்கலான பிரச்சனையில், ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக என்னை முகநூலில் சிலர் திட்டித் தீர்த்தனர். 'நீ சரியாகத்தான் எழுதி இருக்கிறாய் ' என்று என்னை அழைத்து தைரியமூட்டி, சம்பந்தப்பட்ட சிலரை அழைத்துப் பேசி அந்தப் பதிவை நீக்கச் சொன்னார்.
இப்படி, சிக்கலான தருணங்களில் உடன் நின்றிருக்கிறார். மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்களைக் கூட அவரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
இந்தியா டுடேயில் எனக்கு வேலை கிடைத்து விகடனைவிட்டுக் கிளம்புமுன் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அதை இன்றைக்கு எடுத்து வாசித்துப் பார்த்தேன். அவருக்குப் பிடித்த மழைச்சாரல் என் விழிகளிலிருந்து தெறித்தது.
விகடனில் இருந்த காலத்தின் இறுதி நாட்களில் அவருக்கு என் மீது கோபம் இருந்திருக்கலாம். ஆனால் விகடன் விட்டு நான் வந்தபின்னும், நண்பர்களுக்கு வேலை வேண்டும் எனக் கேட்டபோது மறுக்காமல் உதவி இருக்கிறார். சில நேரங்களில் சில நண்பர்களுக்கு அவசரமாக பண உதவி தேவை என்றாலும் தயங்காமல் அவரிடம் கேட்டிருக்கிறேன். அடுத்தவர் அறியாமல் அவ்வுதவியை செய்திருக்கிறார்.
2 நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையாளரின் பதிவொன்றில் பின்னூட்டம் இட்டிருந்தார் ஒருவர். 'For the past ten years, Vikatan is not for us. Its for dalits, anti nationals and Muslims'.
இதுவல்லவோ அவருக்கான நற்சான்றிதழ்?
கால ஓட்டத்தில் வாழ்க்கைப் பயணத்தில் ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம் அவரும் அவரால் உருவாக்கப்பட்டவர்களும். ஆனால் அவரைப் பற்றிப் பேசாத நாள் இல்லை என்பதை அவர் அறியமாட்டார்.
அவருடன் எடுத்த புகைப்படத்தோடு இப்பதிவை பகிரவேண்டும் என நினைத்துத் தேடிப்பார்க்கையில்தான் உறைக்கிறது. ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை.
எங்கிருந்தாலும் என்றென்றைக்குமான அன்புக்கும் நன்றிக்கும் உரியவர் நீங்கள்.
மிஸ் யூ அண்ணா!!
Hugs
Ra Kannan
No comments:
Post a Comment