அடிக்கடி அவனும் அவளும் பொழுதுபோக்குகின்ற அதே மலைதான். இப்போது ரொம்பவும் அழகாகத் தெரிந்தது. மாமாங்கத்துக்கு ஒரு முறை பூக்கின்ற குறிஞ்சி மலர் பரந்து பூத்து அந்த மலைக்கு புதுப்புடவையாக இருந்ததுதான் கூடுதல் அழகுக்கு காரணம், அதைவிட அழகு, இதமாக வீசிய காற்று, அடிக்கடி அந்த மலையின் புதுப்புடவையை விலகச் செய்து முகடுகளையும் வளைவுகளையும் கண்களுக்கு விருந்தாக்கி குறும்பு செய்தது.
மலையை ரசிப்பதுபோலவே அவன் தன்னையும் ரசிப்பதை உணர்ந்தவள் தன் உடையைத் திருத்திக் கொண்டாள்.
“நீ சரி செய்வதாக நினைக்கிறாய்.. அதுதான் என் பார்வையைத் தவறாக்குகிறது” என்றான்.
“தவறும்கூட சரியாகத் தெரிவதுதான் காதல்..” என்றாள்.
மலைப்பாதையில் இருவர் கைகளும் பிணைத்தபடி நடந்போது, ஏற்றம்கூட சமதளம் போல இருந்தது.
தோள்கள் உரசின.. அது மாலைக் குளிருக்கேற்ற தேநீர் போல இதமான சூட்டில் இருந்தது.
கைகள், இடுப்பை வளைத்தன. ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வது போன்ற இன்பம் கிடைத்தது.
மெல்லிய இருள் படர்ந்த வேளையில், பட்டும் படாமல் தொட்டுக் கொண்டே எதை எதையோ பேசியபடியே நெடுந்தூரம் நடந்தனர்.
இரவுப் பொழுதில், புடவையைக் களைந்து, இரவு உடைக்கு மாறியிருந்தது போல காட்சியளித்தது மலை.
அவனும் அவளும் விடுதிக்குத் திரும்பியிருந்தார்கள்.
“மலைகூட புடவையைக் களைந்துவிட்டது...” என்றான் கண் சிமிட்டியபடி.
வெட்கத்துடன் விலகியவள், “இருட்டா இருக்கிறதாலதான் மலை டிரஸ் மாற்றியிருக்கு” என்றாள்.
அறையில் விளக்குகள் எரிவதைத்தான் அவள் அப்படி சொல்கிறாள் என்பது அவனுக்குப் புரியாமலில்லை. அடுத்த நொடி, விளக்குகள் கண்மூடிக் கொண்டன.
அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் உடைகளைக் களைவதில் உதவி செய்துகொண்டார்கள்.
இரவு உடையை அணிவதற்கு முன் இருவருமே ஒருவருக்கொருவர் ஆடைகளாக மாறியிருந்தனர்.
மலையில் வீசிய இரவு நேரக் காற்று அறைக்குள் ஊசியாக நுழைந்தாலும், அந்தக் குளிர் தாக்காதபடி ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர்.
ஊடுருவி நுழைய முயன்ற காற்று தோற்றுப்போய், அவர்களின் வெப்ப மூச்சினால் விரட்டியடிக்கப்பட்டது.
இறுகத் தழுவித் தொடங்கிய அவர்களின் இரவுப் பொழுது, விடிய விடிய விலகாமல் அரவணைத்திருந்தது காதலின் பேரின்பத்தை.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
-குறள் 1108
No comments:
Post a Comment