Monday, July 16, 2018

கவிதாபாரதி

சோமாலியாவைப் பற்றிய ஓர் ஆவணப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அரசு என்பதே இல்லாமல் ஒரு சமூகமாக நின்று போராடிக்கொண்டிருந்த மக்களின் வரலாறு என்று விரிகிறது அவர்களுடைய கதை.

பொறாக்கொடுங்கோன்மையர் ஒருவரின் ஆட்சியின்கீழ் இருபதாண்டுகளுக்கும் மேலாக அந்நாடு தவித்துக்கொண்டிருந்திருக்கிறது.

அந்நாட்டு விவசாயி ஒருவர் கூறுகிறார் :

“என் நிலத்தில் தக்காளி விளைவித்தேன். உணவுப் பயிர்களை எல்லாம் விளைவித்தேன். இவற்றால் எனக்கு ஒருபோதும் உணவுப் பஞ்சம் வந்திருக்க முடியாது. ஆனால், என்ன நடந்தது ? ஒருநாள் அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வண்டி வண்டியாக உணவுப் பொருள்கள் வந்திறங்கின. அந்நாட்டுக்கு எங்கள் சந்தை திறந்துவிடப்பட்டது. நான் விளைவிக்கும் அதே தக்காளியை அவர்கள் கொண்டு வந்து இறக்கினர்.

என் தேவை போக மீதியை நான் சந்தையில் விற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், எத்தியோப்பியப் பொருள்கள் வந்த பிறகு என் தக்காளிக்கு விலையில்லை. எங்களால் எதையும் விற்க முடியவில்லை. வேறு வழியின்றி நாங்கள் வேளாண்மையைக் கைவிடுமாறு நெருக்கித் தள்ளப்பட்டோம். நானும் கைவிட்டேன். எங்கள் நாட்டுப் பொருளாதாரம் அழிந்தது. நாங்களும் பஞ்சத்திற்கு ஆளானோம்...”

அப்பெரியவர் நினைவுகூர்கின்ற எல்லாம் இங்கே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ என்று ஒப்பிட்டுப் பார்த்தேன். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

அவர்கள் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் ஆனது கூடத் தங்களைத் தற்காத்துக்கொள்ளவே என்கின்றனர். மிகுந்த மீன்வளமுடைய கடற்பரப்பு அவர்களுடையது.

அரசே இல்லாத வெறும் ஊர்ப்புறச் சமுதாயமாய் அந்நாடு அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கையில், மீன்வளமே இன்றியமையாத உணவாதராமாக இருந்திருக்கிறது. ஆனால், பாதுகாப்பில்லாத சோமாலியக் கடற்பரப்பில் பிறநாட்டு மீன்பிடிபடகுகள் நடமாடத் தொடங்கின.

முதலில் சிறு படகுகள் வந்து மீன்பிடித்தன. பிறகு நடுத்தரப் படகுகள் வந்தன. இறுதியில் பெருங்கப்பல்கள் வந்து மீன்பிடிக்கத் தொடங்கின. அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற சோமாலிய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வேறு வழியின்றி சோமாலியர்களும் துப்பாக்கி எடுத்து மீன்பிடிக்கச் செல்லத் தலைப்பட்டனர். அது கப்பலைக் கைப்பற்றுவதில் சென்று முடிந்தது.

- Magudeswaran Govindarajan பதிவு'2017

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...