திறக்கவே படாத கல்வி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாயா?
முகேஷ் அம்பானி 2017-ஆம் ஆண்டு ஜியோ அலைபேசி மற்றும் இணைய இணைப்பு தொடர்பான அறிமுகக் கூட்டம் ஒன்றில் பேசும் போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ இன்ஸ்டியூட் என கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன் பிறகு அதுகுறித்து அவரும் பேசவில்லை, அவரது நிறுவனத்தின் சார்பில் யாரும் பேசவும் இல்லை,
ஆனால், ஜியோ இன்ஸ்டியூட் என்ற பெயரில் பல போலி இணையதளங்கள் துவக்கப்பட்டு ஜியோ பள்ளிகள் மற்றும் ஜியோ கல்லூரிகள் என பல பெயர்களில் இணையவழி ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றிக் கொண்டு இருந்தனர்.
இது குறித்து ஜியோ அல்லது ரிலையன்ஸ் குழுமம் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை, இந்த நிலையில் முகேஷ் அம்பானி சார்பில் அவரது நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ஜியோ இன்ஸ்டியூட் என்பது ஒரு எதிர்காலத் திட்டமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று வெளியாகி இருந்தது,
ரிலையன்ஸ் குழுமமே இன்னும் உறுதியாக என்ன மாதிரியான கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. மேலும் எந்த இடத்தில் கல்லூரி தொடங்கப்படும் என்றும் கூறப்படவில்லை.
கடந்த திங்கள் அன்று மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்கள் கூட்டத்திலும் இது குறித்து எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான ஒரு திட்டம் ஒன்றை முகேஷ் அம்பானி அறிவிப்பார் என்று செய்தி வெளியானது.
அப்படியே அவர் அறிவித்தாலும் அது எவ்வகையான கல்வி நிறுவனம், பல்கலைக்கழகமா? தொழில் நுட்பக் கல்வி நிறுவனமா? அல்லது தொழில் நுட்பக் கல்லூரியா? என்று 2022 ஆம் ஆண்டுதான் திட்ட அறிக்கையே வெளிவருமாம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு அவ்வப்போது இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து அவைகளுக்கு நிதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 6 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து எல்லோருக்கும் 1000 கோடி ரூபாயை வளர்ச்சி நிதியாக கொடுத்தது.
இதில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, அய்அய்டி மும்பை, அய்அய்டி டில்லி, அய்அய்எஸ்சி பெங்களூரு ஆகியவைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆறாவது கல்வி நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கும் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இந்த பணத்தை செலவிட வேண்டுமாம்.
ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்வி நிறுவனம் முகேஷ் அம்பானியின் கனவில் மட்டுமே தற்போது உள்ளது. இன்னும் நிறுவனம் தொடங்கப்படவேயில்லை. ஒரு கார்ப்பரேட் முதலாளி யின் கனவு மட்டுமே. இந்நிலையில் மத்திய அரசு 1000 கோடி ரூபாயை வாரி தூக்கி கொடுத்துள்ளது.
இதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி,, இந்த கல்வி நிறுவனம் இன்னும் கட்டப்படவில்லை என்றாலும் கூட, இந்த கல்லூரி தற்போது கட்டுவதற்கான அனுமதி வேண்டி கடிதம் கொடுத்துள்ளது.
யுஜிசி விதியின் படி அனுமதி கடிதம் அளித்த கல்வி நிறுவனத்திற்கு விருது வழங்க தேர்வு செய்யலாம். ஆனால் அந்த கல்லூரி அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் இந்த விருது வழங்கப்பட்டது என்று கூறியுள்ளது.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கார்ப்பரேட்டுகளுக்கானது என்று முற் போக்கு சக்திகள் தொடக்க முதலே குற்றஞ்சாட்டி வந்தன. குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் கூடத் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment