Saturday, July 21, 2018

கோவி. லெனின்

கலைஞரின் பேனா (3)
-------------------------------------------------
‘பராசக்தி’ படத்தில் அனல் பறக்கும் நீதிமன்றக் காட்சிகள் முடிந்ததும், 3 சகோதரர்களும் சகோதரி கல்யாணியும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்று கூடுவார்கள். அந்த உணர்ச்சிகரமான காட்சியில்...

(போர்க்கள குண்டுவீச்சில் கால்களை இழந்து பிச்சைக்காரரான) ஞானசேகரன்:  சரிதான்.. அப்ப நீங்களெல்லாம் இங்கேயே இருங்க. நான் வர்றேன்.
(நீதிபதியான மூத்த சகோதரர்) ராஜசேகரன்: நீ எங்க தம்பி போறே?
ஞானசேகரன்: உங்க உலகத்துக்கும் நம்ம உலகத்துக்கும் சரிப்பட்டு வராது. நீங்க பங்களா, ஆபீஸ் இப்படி பழக்கப்பட்டுட்டீங்க. நான் பரதேசி மடம், ஆலமரத்தடி இப்படி பழகிட்டேன். நமக்கு அதுதான் சரி.
சகோதரி கல்யாணி: அப்ப நானும் வந்திடுறேன்.
(இளைய சகோதரர்) குணசேகரன்: அப்படின்னா நானும் புறப்படுறேன்.
(குணசேகரனின் காதலி) விமலா: எல்லாரும் பரதேசி மடத்துக்குப் போறதைவிட, பரதேசிகளை இங்கேயே வரவழைச்சிடுறது  நல்லதாச்சே...
ராஜசேகரன்: ரைட்.. ரைட்.. அதுதான் சரி.. பரதேசிகளெல்லாம் பங்களாவாசியா மாறணும். ஞானசேகரா.. உன் கொள்கைப்படி பங்களாவாசிகள் பரதேசியா மாறக்கூடாது.
ஞானசேகரன்: ம்... அப்ப சரி.. நான் போய் எல்லாரையும் அழைச்சிட்டு வர்றேன்.

(சாந்தநாயகி அனாதை விடுதி தொடங்கப்படுகிறது)
சகோதரர்கள், சகோதரி கல்யாணி, மூத்த சகோதரரின் அண்ணி, குணசேகரனின் காதலி விமலா, ஞானசேகரன் அழைத்து வந்த தோழர்கள் எல்லாரும் சூழ்ந்திருக்க, தலைவர்கள் வருகை தந்து வாழ்த்துகிறார்கள்.

(பாடல் ஒலிக்கிறது)
எல்லாரும் வாழவேண்டும்.. உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.  

கலைஞரின் பேனாவிலிருந்து பிறந்த கூர்மையான  வசனங்களாலும் அதனை நடிகர் திலகம் சிவாஜி தன் நடிப்பால் மெருகேற்றியதாலும் தமிழ்த் திரையுலகில் புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய  பராசக்தி படத்தின் நிறைவுக் காட்சி இது. (பாடலை எழுதியவர் தமிழறிஞர் கு.மு.அண்ணல்தங்கோ)

1952ல் படம் வெளியானது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில், 1971ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற கலைஞரின் பேனா பிச்சைக்காரர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட்டோருக்கும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டது.
தொழுநோயாளிகளை சமுதாயம் எப்படி பார்த்தது என்பதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அசாத்திய நடிப்பில் வெளியான திருவாரூர் தங்கராசு வசனத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’ படத்தைப் பார்க்கும்போதெல்லாம் புரிந்து  கொள்ளலாம். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளின் ஒரே தொழில், பிச்சை  எடுத்தல்தான். அந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டு, ஆலமரத்தடியிலும் பரதேசி மடத்திலும் கோவில் வாசல்களிலும் கிடந்தவர்களை பங்களா போன்ற மாடிக்கட்டடங்களுக்கு கொண்டு வந்து சிகிச்சையும் உணவும் கிடைக்கச் செய்து அவர்களுக்கேற்ற கைத்தொழில்கள் மூலம் வருமானம் கிடைக்கவும் வழி செய்தது கலைஞரின்  பேனா.

2,10,1971ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் முதல் மறுவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 22-01-1972ல் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும், 18-06-72ல் தர்மபுரி மாவட்டம் பர்கூரிலும், 07-01-1973ல் புதுக்கோட்டையிலும், 23-10-1973ல் சேலம் மாவட்டம் தேவியக்குறிச்சியிலும், 17-02-1973ல் தஞ்சை மாவட்டம் மனையேறிப்பட்டியிலும், 22-04-1973ல் மதுரை மாவட்டம் ஒய்.புதுப்பட்டியிலும், 04-07-1973ல் திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடியிலும், 19-10-1973ல் தர்மபுரி மாவட்டம் செல்லையம்பட்டியிலும், 10-01-1974ல் ஈரோடு மாவட்டம் விண்ணப்பள்ளியிலும் என 10 மறுவாழ்வு முகாம்களை கலைஞர் அரசு தொடங்கியதை தமிழ்நாடு அரசின் இணையதளம் பதிவேற்றியுள்ளது.
ஒவ்வொரு முறையும் தி.மு.க. அரசு அமையும்போது, இந்த  மறுவாழ்வு மையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் முகாமின் புதிக கட்டடத்தை 2009ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொண்டு நிறுவனத்தார் பலரும் இங்குள்ளோருக்கு சிகிச்சையும் நன்கொடைகளும் வழங்கி வருகின்றனர்.

இந்திய அளவில் அன்னை தெரசா அவர்கள் தொழுநோயாளிகளுக்கு செய்த தொண்டூழியம் புகழ்பெற்றது. அதற்காக அவர் பாரத் ரத்னா பட்டத்தையும் நோபல் பரிசையும் பெற்றார். உலக அளவில் பார்த்தால், புரட்சியாளரும் மருத்துவருமான சேகுவேரா தென்னமெரிக்க நாடுகளில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை  அளிப்பதை தன் மருத்துவ பட்டத்தின் பயனாகக் கருதி செயல்பட்டார். மகாத்மா காந்தி தொடங்கி பல தலைவர்களும் தொழுநோயாளிகள் மறுவாழ்வில் அக்கறை காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வையும், தொழுநோயை ஒழிப்பதற்கான மருத்துவ சிகிச்சையையும் வெற்றிகரமாக  செயல்படுத்தியது கலைஞர் தலைமையிலான  தி.மு.க அரசு. இதனைச் சொல்வதைக்கூடத் தவிர்த்து, தொழுநோயாளிகளை அணுகுவதைப் போலவே கண்டும் காணாமல் செல்வார்கள் நடுநிலையாளர்கள். ஆனால், கலைஞரால் மறுவாழ்வு பெற்ற தொழுநோயாளர்கள் நன்றி மறக்கவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் காவல்துறையினர் கலைஞரின் வீட்டுப் பூட்டை  உடைத்து உள்ளே புகுந்து அவரைக்  கைது செய்து இழுத்து வந்த செய்தி அறிந்து பதறிப்போன, ஈரோடு மாவட்டம் விண்ணப்பள்ளி மறுவாழ்வு முகாம் தொழுநோயாளர்கள் தங்களுக்கான உணவை மறுத்து, பட்டினிப் போரில் ஈடுபட்டனர். நள்ளிரவு கைது நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கிளம்பிய எதிர்ப்பினால் ஜூலை 4ந் தேதி கலைஞரை ஜெ.அரசு விடுதலை செய்தது. விண்ணப்பள்ளி முகாமில் இருந்த பிச்சைக்காரர்களும் தொழுநோயாளர்களும் மன ஆறுதல் அடைந்து, அதன்பிறகே சாப்பிட்டனர்.

அவர்களுக்கு அவர்தான் ‘பராசக்தி’.

திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆடி 5

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...