சிதைக்கப்படும்குழந்தைகளின் கதறல் மனிதர்களை அலைக்கழிக்கிறது. நடுவில் மகாநடிகர்களின் பங்களிப்பு
ஆகா ஓஹோ பேஷ் பேஷ்..என்கிறது.
நண்பர்களே , செய்திகள் படிக்கப்படும் போதே , சுடச்சுட சத்தமாக இரத்தம் சிந்தும் சொற்களில் அறிக்கை விட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.
மூளை இருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கருத்து இருக்கத்தான் செய்யும்.
அது சரி என்று ஒரு நூறு பேராவது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சின்னஞ்சிறு பெண்குழந்தையை புணர்ந்து அதை பாறையில் அடித்துக் கொன்றவன் அந்தக் குழந்தையின் தாய்மாமன்..சில ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறநகரில் நடந்ததாக வந்த செய்தி.
ரேஷன் வாங்கச் சென்ற பாட்டியுடன் நடந்து போன ஒரு சிறுமியை பால்வாடியில் விடுவதற்கு அந்தப் பக்கமாக சைக்கிளில் சென்ற உறவுப்பையனிடம் உதவி கேட்டார் அந்தப் பாட்டி. சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் சென்றவனுக்கு கொஞ்ச தூரம் போனதும் எண்ணம் மாறியது... மறுநாள் குழந்தையின் பிணம் முட்புதரில் கிடந்தது.
காதலனைப் பார்க்கச் சென்ற ஒரு பெண்ணை தன் நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்து கொலை செய்தான் அவன்
இப்படியாக ஒழுக்கம் இரக்கம் பரிதாபம் எதுவும் இல்லாமல் ஒருமுறை தன் வெறியைத் தீர்த்துக்கொள்ள ஒரு குழந்தையைக் கொல்லும கிரிமினல்கள் நம்முடன் நமது வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ....அவர்களின் ' எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை உணராமலும்
உணர்ந்தாலும் அவர்கள் நம்மவர்கள் இல்லை என்று நம்பிக்கொண்டும், உண்மை தெரிந்த பின்னும் அவர்கள் குற்றவாளி இல்லை என்று வாதிட்டுக் கொண்டும் ,
அந்தக் குழந்தையோ , சிறுமியோ , சின்னப் பெண்ணோ ,இளம்பெண்ணோ காமவெறி கொண்டு அவனை அழைத்தார்கள்.பிறகு..தானே மூச்சுத்திணறி இறந்து விட்டார்கள் என்று சொல்லக்கூட தயாராக இருக்கிறோம்...
மனம் கசந்து வழிகிறது...
ஒரே குற்றத்தை செய்பவர்கள் ஒரே மாதிரி தண்டிக்கப் படுவதில்லை...பாதிக்கப்பட்டவரின் பின்னணியை முன்வைத்து குற்றவிசாரணை முறை மாறுவதும் உண்மையே..
அதைக் கண்டிப்பதற்காக என் சாதிக்காரன் என் மதத்தவன் என் கட்சிக்காரன் ஒரு பெண்ணை வன்முறைக்கு ஆளாக்கினால் அவனை காப்பாற்ற வேண்டும் என்று இறங்கி குரல் கொடுக்கும் குற்ற மனநிலை..குற்றவாளிகள் பெருகுவதற்கு இந்த வகை ஆதரவும் ஒரு காரணம்.
ஆண்களிடம் ஒழுக்கம் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் அவர்கள் விலங்குகள் அல்ல என்பதையும் விலங்குகள் கூட இப்படி நடந்து கொள்ளாது என்பதையும் உணர்த்தாமல் ஆணைப் பூனையாகவும் பெண்ணைக் கருவாடாகவும் நினைக்கும் போக்கை மாற்றாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாது.
No comments:
Post a Comment