சமூகத்திற்கு அவசியமான படைப்பை தரும் எழுத்தாளன் நான்கு வருடத்திற்கு ஒரு புத்தகம் தருகிறான். சமூகத்திற்கு அவசியமில்லாத கிரைம் நாவல் எழுதும் எழுத்தாளன் மாதம் ஒன்று தந்து விடுகிறான்.
- ஒரு விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு.
மதிப்பிற்குரிய கரு.பழனியப்பன் அவர்களே.. வணக்கம்.
ஆம். இன்றும் இப்போதும் நீங்கள் என் மதிப்பிற்கு உரியவர்தான். உங்கள் மேடைப் பேச்சுக்களில் உள்ள தெளிவையும், சரளமான வார்த்தை வீச்சுக்களையும் வசீகரிக்கும் பேச்சாற்றலையும் புகழ்ந்து தனியாகவே ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
போகிற போக்கில் கைத்தட்டல் நோக்கத்துடன் தெளித்த இந்தக் கருத்துக்கு மட்டும் நான் பதில் சொல்லியாக வேண்டும்.
ஒரு சமூகத்திற்கு என்ன வகையான படைப்புகள் அவசியம் என்பதை சமூகம்தான் தீர்மானிக்கிறது.
க்ரைம் நாவல் என்றாலே முகம் சுளிக்கும் போலித்தனமான மனோபாவம் கொண்ட ஒரு கூட்டத்தில் நீங்களும் உண்டென்பதை அறிய ஆச்சரியம்.
இராமாயணமும், மகாபாரதமும் ஒரு வகையில் கிரைம் கலந்த இதிகாசங்கள் என்பேன் நான். அதில் இல்லாத கொலைகளா? ரத்தமா?
மக்கள் கொண்டாடும் நாயகன், முதல் மரியாதை, தேவர் மகன் படங்களில் கொலையும், ரத்தமும் உண்டா இல்லையா?
நம்மவர், மகாநதி, ஹேராம் கொடுத்த அதே கமல்தான் கலைஞன், சிவப்பு ரோஜாக்கள், விஸ்வரூபம், பாபநாசம் கொடுத்தார். 16 வயதினிலே கொடுத்த பாரதிராஜாதான் டிக் டிக் டிக் கொடுத்தார். நீங்கள் வெகுவாகப் பாராட்டும் மணிவண்ணன் நூறாவது நாள் கொடுக்கவில்லையா?
நீங்கள் இயங்கும் சினிமாவில் க்ரைம் படங்கள் இந்த சமுதாயத்திற்கு அவசியமில்லை என்று எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா?
உங்கள் முதல் படமான பார்த்திபன் கனவு காதல் படம் என்று சொல்லிக் கொண்டாலும்..திருமணத்திற்குப் பிறகும் தான் நேசித்த த்ன்னை நேசிக்காத பெண்ணின் பின்னால் திரியும் கதாநாயகன் செய்வது கிரைம் வகையில் சேரும் சார். (stalking is a punishable crime under I.P.C section 354 D)
உங்கள் சிவப்பதிகாரம் படத்தின் கிளைமாக்சில் வில்லனை உட்காரவைத்து நீதி போதனை நடத்தியிருக்கலாமே.. எதற்கு அத்தனை க்ரைம்?
சினிமாவில் காட்ட முடியாத, சொல்ல முடியாத அரசியல் ஊழல்களுக்கு எதிரான பல கருத்துக்களும், வசனங்களும் க்ரைம் கதைகளில் சொல்லப் பட்டிருக்கிறது. சொல்லப்பட்டு வருகிறது.
குடும்பம், சமூகம், காதல், சரித்திரம், நகைச்சுவை, போல க்ரைம் நாவல்களும் ஒரு வகை. ஒரு ரசனை.
காதலே கூடாதென்று பிப்ரவரி 14 அன்று எதிர்ப்பு காட்டும் கூட்டத்தினரின் பார்வையில் இந்த சமூகத்திற்கு காதல் கதைகள் அவசியமில்லை என்று படும்.
எழுதியவருக்கே போன் செய்து என்ன சொல்ல வந்தீர்கள் என்று விளக்கம் கேட்க வேண்டிய வகையில் புரியாமல் எழுதப்படும் சில படைப்புகள் இந்த சமுதாயத்திற்கு அவசியமா என்று இன்னொரு கூட்டம் கேட்கலாம். ,
தவிரவும் க்ரைம் நாவல்கள் எழுதுகிற அத்தனைப் படைப்பாளிகளும் மற்றஅனைத்து வகைப் படைப்புகளும் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜேஷ்குமாரின் விஞ்ஞான அறிவை ஊட்டும் விளக்கம் ப்ளீஸ் விவேக் புத்தகம் படித்திருக்கிறீர்களா? சுபாவின் பரிசு பெற்ற சமூக சிறுகதைகளைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? திருக்குறளுக்கு நான் தெளிவுரை எழுதியிருப்பது தகவலாகவாவது தெரியுமா? இந்திரா செளந்தர்ராஜனின் ஆன்மீக உரைகளையும், மேடைப் பேச்சுக்களையும் தேடிக் கேளுங்கள்.
எந்த ஒரு படைப்பாளியின் ஒரு குறிப்பிட்ட படைப்பையும் தாராளமாக விமரிசியுங்கள். ஒரு குறிப்பிட்ட வகை படைப்புகளே அவசியமில்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை.
உங்கள் பார்த்திபன் கனவு படத்தில் பாக்யராஜ் படம் பிடிக்கும் என்று சொல்லும் கதாநாயகியின் ரசனையை குறைந்ததாகக் கருதி நண்பர்களிடம் சிலாகிப்பான் அவன். (அதுவே தவறு). ஜெயகாந்தன் படிப்பவளை தன் ரசனைக்குப் பொருந்தியவளாக நினைப்பான். ஜெயகாந்தன் படிப்பதும், பாக்யராஜை ரசிப்பதும் அவரவர் ரசனை தொடர்பான விஷயம் சார்.
உங்கள் கதாநாயகனே படத்தின் இறுதிக் காட்சியில் தன் மனைவிக்குப் பிடித்த பாக்யராஜின் படத்திற்கு டிக்கெட் வாங்கி வந்திருப்பதாகக் காட்டி அவளின் ரசனையை அவன் புரிந்துகொண்டான் என்று சொல்லியிருப்பீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் நான்கு வருடத்திற்கு ஒரு தடவை எழுதப்படும் புத்தகம் படிப்பவர்களில் மகா மட்டமான பேர்வழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும். க்ரைம் நாவல்கள் விரும்பிப் படிப்பவர்களில் பல அற்புதமான மனிதர்களையும் காட்டமுடியும்.
எந்த வகை படைப்புகளைப் படிப்பது என்பது அவரவர் ரசனைக்கு ஏற்றது.அதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.
பக்குவமான சிந்தனாவாதியான உங்களிடமிருந்து மேம்போக்கான இந்தக் கருத்தை எதிர்பார்க்கவில்லை.
மற்றபடி அவ்வப்போது யூ டியூபில் உங்கள் கருநீலம் பேச்சுகளை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். இது கட்டாயம் சமுதாயத்திற்கு அவசியமான பேச்சுதான். தொடருங்கள்.
No comments:
Post a Comment