பேரன்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் தம்பதியினர் என்னை அணுகினர், தங்களுக்கு சட்டரீதியான மணவிலக்கு பெற்றுத்தரவேண்டி...
இருவரும் எனக்கு அறிமுகமானவர்கள். சமூக அக்கறை மிக்கவர்கள். தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களால் இயன்றதை செய்பவர்கள். அவர்களுக்கு இடையே சில சிக்கல் இருந்ததாகக் கூறினர். முழுமையாக கேட்டபின்னர், அவர்களுக்கு இடையே சிக்கல்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் அவை தீர்க்கக்கூடியவையே என்று கூறினேன். அதற்கு சில வழிமுறைகளையும் கூறி, அவற்றை முயற்சிக்குமாறு கூறினேன். அந்த முயற்சி பலன் அளிக்கிறதா என்பதை பார்க்கும்வரை மணவிலக்கு குறித்த முடிவை தள்ளிவைக்கவும் ஆலோசனை கூறினேன். யோசிப்பதாக கூறிச் சென்றவர்கள், நேராக சென்ற இடம் வேறொரு வழக்கறிஞரின் அலுவலகம்!
மனமொத்து பிரிவதற்கு முடிவு செய்திருந்த அவ்விருவரும், தனித்தே மணவிலக்கு மனு செய்ததாக கேள்விப்பட்டேன். அவர்கள் நாடிய வழக்குரைஞரின் அறிவுரையாக இருந்திருக்கலாம். அத்தகைய வழக்கு அவ்விருவருக்கும் மனச்சுமையையும், பணச்சுமையையும் நிச்சயம் அதிகரித்திருக்கும்.
பிறகு அவர்களை மறந்துவிட்டேன்.
நேற்று காலை லயோலாக் கல்லூரியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியீடு, மாலையில் சென்னை செய்தியாளர் அரங்கில் நடந்த அரசியல் செயல்பாட்டாளர்களின் கூட்டம் என கலந்து கொண்டேன்.
அருகில் கலைவாணர் அரங்கில் இயக்குனர் ராம் அவர்களின் "பேரன்பு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாகவும், அந்த விழாவிற்கு செல்வதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். எனக்கு திரைப்படங்களில் பெரிய ஆர்வம் இல்லை என்ற போதும், இயக்குனர் ராமின் கடந்த திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவன் என்ற போதிலும் அந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்க நண்பர்களுடன் நானும் சென்றேன்.
அங்கு நான் முதலில் குறிப்பிட்ட இரு நண்பர்களையும் சந்தித்தேன். இருவரும் சேர்ந்தே வந்திருந்தனர். என்னைப் பார்த்தவுடன் இருவருமே திகைத்தனர். அந்தப் பெண் வெட்கத்தை புன்னகையால் மறைக்க முயல, ஆண் என்னை பார்க்காததுபோல கடந்து சென்றார். அவர்களிடையே இணக்கமான சூழல் நிலவியதாகவே தோன்றியது.
பேரன்பு பெருகட்டும்...!
பின்குறிப்பு: பேரன்பு திரைப்பட இசை வெளியீட்டு விழா துவங்கிய சிறிது நேரத்திலேயே நான் வெளியேறிவிட்டதால் அந்த நிகழ்வு குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. வழக்கம்போல இயக்குனர் ராமின் இந்தப் படத்தையும் நான் பார்க்க மாட்டேன் என்றே தோன்றுகிறது.
புகைப்படத்திற்கு நன்றி: ஜாக்கி சேகர்.
No comments:
Post a Comment