தாமிரபரணியில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கு வீரவணக்கம்!
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1999 ஜூலை 23ஆம் நாள் புதிய தமிழகம் தலைமையில் திருநெல்வேலி தொடர்வண்டிச் சந்திப்பிலிருந்து பேரணியாகச் சென்றனர். இதில் சிபிஐ (எம்), சிபிஐ, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஆட்சியரிடம் நேரடியாக மனுக் கொடுக்க விரும்பிய தொழிலாளர்களைக் காவல் துறை தடுத்து நிறுத்தியது. போராட்டக்காரர்கள் முண்டியடித்துச் செல்லவே, காவல்துறை லத்தி, கற்கள், கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், தோட்டாக்கள் முதலிய ஆயுதங்களால் கடும் தாக்குதல் தொடுத்தது. போராட்டக் கூட்டம் தடியடியிலிருந்து தப்பிக்க தாமிரபரணியில் இறங்கியது. சாலையிலிருந்து நல்ல இறக்கத்தில் அமைந்திருந்த தாமிரபரணி ஆற்றின் கரைக்கும் இறங்கி வந்து திடீர்த் தாக்குதலில் இறங்கியது காவல்துறை. அடி பட்டு மயங்கி விழுந்தவர்களை, குழந்தை என்றும் முதியவர் என்றும் பாராமல் கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் தூக்கி வீசியது. இது போதாதென்று, இத்தாக்குதலுக்கு சாட்சி இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் செய்தியாளர்களையும் அடித்து, அவர்களது ஒளிப்படக்கருவிகளையும் உடைத்தார்கள். அன்று ஒரு பெண், 2 வயதுக் குழந்தை உட்பட மொத்தம் 17 பேர் தாமிரபரணியில் மூழ்கி இறந்தனர். நடந்த நிகழ்வை விசாரிக்கத் திமுக அரசு முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் அமைத்த ஒருநபர் குழு ஒட்டு மொத்த நிகழ்வுக்குக் காரணம், பேரணிக்கு வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுதான் என்றும், இது வெறும் விபத்தே என்றும் கூறியது அப்படுகொலை நிகழ்வை விட பெருந்துயராமாகும்.
இன்றைய இளைஞர்கள் இன்றைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொடுமையைப் பார்த்து விட்டு, இது போன்றெல்லாம் நடக்குமா? எனக் கேட்கக் கூடும். இதே அட்டூழியத்தை அன்றைய கலைஞர் அரசு செய்தது என்பதை இந்தத் துயர நாளில் அனைவரும் நினைவுகூர வேண்டும்.
திமுக தலித் மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது எனக் கௌசல்யா கூறியதும் கொதித்த திமுக நண்பர்கள் இந்தச் சம்பவத்துககுப் பதில் கூறட்டும். இப்படுபாதகத்தைச் செய்து விட்டு, அதனை ஒரு குழுவைப் போட்டு மூடி மறைக்கப் பார்த்த கலைஞரின் செயலை நியாயப்படுத்த முடியுமா? அன்று பேராசிரியர் சுபவீ அவர்கள் தோழர் தியாகு தலைமயிலான தமிழ் தமிழர் இயக்கத்தில் இருந்த போது இயக்கத்தின் தமிழ்த் தேசம் இதழில் மோகன் குழு அறிக்கையைக் கிழித்துப் போட வேண்டும் என்று எழுதினார் என்பதையும் நினைவுகூரலாம்.
இந்தத் துயர நாளில் தாமிரபரணியில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்தப் போராளித் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
No comments:
Post a Comment