இன்று அதிகாலை 7 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு. தூக்கம் கலைந்து போனை எடுத்தேன். புதிய எண்ணாக இருந்தது. 'ட்ரூ காலர்' மூலம் அழைத்தவர் ஒரு இலக்கியவாதி என்று தெரிந்தது. சில காலம் முன்பு ஒருமுறை ஒரு வழக்கு தொடர்பாக என்னிடம் தொலைபேசி வழியாக ஆலோசனை கேட்டிருக்கிறார்.
நான் இலக்கியம் என்றால் சற்று விலகி நிற்பவன். கவிஞர்கள் என்றால் காத தூரம் ஓடுபவன்.
தொலைபேசியில் அழைத்தவர், இரண்டு இலக்கியவாதிகளுக்கு இடையேயான ஒரு சர்ச்சை குறித்து பேசினார். அவர் குறிப்பிடும் நபர்களை எனக்கு சுத்தமாகத் தெரியாது. எனவே அவர் குறிப்பிடும் சர்ச்சைகளும் எனக்கு முழுமையாக புரியவில்லை. ஆனால் அரைகுறையாக புரிந்த அம்சங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும், சுவாரசியமானதாகவும் இருந்தது. எனவே மவுனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
சுமார் 15 நிமிடங்கள் ஒருவழிப்பாதையாகவே பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென, "நான் என்ன கதையா சொல்றேன்? நீங்க பேசவே இல்லையே?!" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மிகுந்த தயக்கத்துடன், "இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது...?" என்றேன்.
அவர், "ஏன் உங்கள் குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது" என்றார். என் குரல் எப்போதும்போல்தான் இருக்கிறது. எனினும் "இரண்டு நாட்களாக மழையில் நனைந்ததால் மாறியிருக்கலாம்" என்றேன்.
திடீரென, "நீங்கள் கவிஞர் ------தானே?" என்றார். அவர் இதை முதலிலேயே கேட்டிருக்கலாம்.
"இல்லை ஐயா. என் பெயர் ----. நான் வழக்கறிஞராக இருக்கிறேன். நீங்கள் ஒரு முறை என்னிடம் ---- பிரச்சினைக்காக சட்ட ஆலோசனை கேட்டு தொலைபேசி மூலம் பேசி இருக்கிறீர்கள்" என்றேன்.
அதற்கு அவர், "அப்படியா! நீங்கள் கவிஞர் --- இல்லையா?" என்றார். தொடர்ந்து, "ஏன் ஸார், நான் எப்போதோ உங்களிடம் பேசியிருக்கலாம். அதற்காக என் நம்பரை ஏன் சேவ் செய்து வைத்திருக்கிறீர்கள்...? அதை டெலீட் செய்திருக்க வேண்டியதுதானே...?! இப்போது பாருங்கள் நான் கவிஞர் ---ரிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்!!" என்றார்.
கோபமும், சிரிப்பும் ஒருசேர வந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு சிரிப்புடன் "செய்துவிடலாம்" என்றேன். படைப்பாளிகள் சற்று அப்படி-இப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் சற்று அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment