நண்பர்களே,
கேரளப் பெருமழை வெள்ளத்தில் உடைமை இழந்தோர் எண்ணிக்கை நம் கணக்கீடுகளையும் மதிப்பீடுகளையும் கடந்த நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் அம்மக்களுக்கு துணை நிற்கின்றனர். செம்மை அகல் செயல் திட்டத்தின் வழியாக நாமும் பணியாற்றுகிறோம்.
பேரிடர் நிகழும்போது ஒரு சில நாட்களுக்கு பதற்றமும் பரபரப்பும் பொங்க உதவி செய்வதும் சில நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோரின் மீட்பு குறித்த சிந்தனையற்றுப் போவதும் பொதுவான வழக்கமாகிவிட்டது.
உணவு, உடை ஆகியவை அழிவு நிகழும் நாட்களில் அடிப்படையானவை. அதன் பிறகு, அம்மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை அறிந்து அவற்றை வழங்குவது உண்மையான பேரிடர் மீட்புப் பணியாக இருக்கும்.
ஒரு பகுதியில் அழிவு நேரும்போது, அங்கு வாழும் அனைவரும் ஒரே வகையில் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதிப்பின் அளவீடுகள் வேறு. ஒவ்வொரு மனிதருக்கும் தேவைகளும் வேறு.
பச்சிளம் குழந்தைகளுக்கு சத்துமாவு போன்ற ஊட்டச்சத்து உணவுகள் தேவை. முதியவர்களுக்கு குளிர்ச்சியைத் தாங்கக்கூடிய படுக்கைகள்கூட அடிப்படைத் தேவை. சிலருக்கு பாத்திரங்கள் தேவைப்படும். சிலருக்கு அடுப்புகள் தேவைப்படும். சிலருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். இவற்றைப் பொறுமையாக ஆய்வு செய்து, பட்டியலிட்டு திட்டமிடுவது, மீட்புச் செயல்பாடுகளில் மையக்கரு என்று நினைக்கிறோம்.
பாலக்காடு நகருக்கு சற்று புறத்திலுள்ள சுண்ணாம்புத்தாரா எனும் இடத்தில் உள்ள சுந்தரம் காலனி எனும் பகுதி ஒரு கால்வாயின் கரையில் அமைந்துள்ளது. மொத்தம் 143 வீடுகள் அங்கு உள்ளன. பொருளாதாரத்தில் கடைநிலையில் உள்ள மக்கள்தான் அங்குப் பெரும்பகுதியினர். நள்ளிரவு 12 மணிக்கு கால்வாயிலிருந்து வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகத் தொடங்கியது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் அப்பகுதி முழுமையும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.
அந்தக் கால்வாயில் கழிவுநீர் ஓடிக் கொண்டிருந்தது. குடியிருப்புகளில் இருந்த சாக்கடை, மலக்குழிகள் ஆகியவை உடைந்து, வெள்ள நீரில் கலந்து, முற்றிலும் மாசடைந்த சூழல் உருவானது. மக்கள் மேட்டுப்பகுதியை நோக்கி ஓடி தப்பித்துக் கொண்டார்கள். எந்தப் பொருளையும் அவர்களால் கையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான அவகாசம் இல்லை.
1 வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் 12 பேர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 32 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 51 பேர் அங்கு வசிக்கின்றனர். (தரவுகளின் வரைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.) திடீரென வெள்ளம் வரும்போது, அதுவும் பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், நள்ளிரவில் இவர்களால் எந்தப் பொருளைக் காப்பாற்றிவிட முடியும்?
மலமும் சாக்கடையும் கலந்த இந்த வெள்ளம் வடிவதற்கு ஏறத்தாழ 5 நாட்கள் ஆகியுள்ளன. விளைவாக, வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது மட்டுமல்லாமல், பயன்படுத்தவே முடியாத நிலையை அடைந்துவிட்டன. இவர்கள் அனைவரும் அரசு முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு ஒரு போர்வை, ஒரு பாய், சில ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 143 குடும்பத்தினரும் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்றால், அவர்களுடைய வீடுகளில் பாத்திரங்கள், அடுப்பு, அனைவருக்கும் போதுமான அளவு போர்வை, பாய், சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் ஆகியன வேண்டும். வீடுகளை சீரமைத்துத் தருவதாக அரசு கூறியுள்ளது.
செம்மை சமூகத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று, அம்மக்களோடு உரையாடி, தேவைகளையும் மனிதர்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனி அலகாகப் பிரித்து அக்குடும்பத்தின் தேவைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ள தனிமனித சிறப்புத் தேவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் அடிப்படையில், பொருட்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வழங்கும் பொருட்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தத்தக்க தரமானவையாக இருக்க வேண்டும். சூழலைச் சிதைக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும். வேதிப்பொருள் இல்லாத உணவுகளை வழங்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
அனைவரையும் ஒரே பொருட் பட்டியலுக்குள் அடக்காமல், தனித்தன்மையுடன் அணுக வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவுறும்போது அங்கு வாழும் குடும்பத்தினர் அனைவரும் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இவையே செம்மை அகல் செயல் திட்டத்தின் கொள்கைகள்.
இச்செயல் திட்டத்தின் வழியாக செலவிடப்படும் நிதி சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோருக்குச் சென்றடைய வேண்டும் என்பது இச்செயல் திட்டத்தின் அடிப்படை ஒழுங்கு. இந்த ஒழுங்கினை முழுமையாகக் கடைப்பிடிக்க இயலாவிட்டாலும், இயன்றவரை இத்துடன் ஒத்தி நிற்கிறோம்.
உங்களில் பலர் செம்மை அகல் செயல் திட்டத்திற்கு நிதி வழங்கி இருக்கிறீர்கள். செம்மை சமூகத்தினர் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். இவர்களோடு நானும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் பொருட்கள் வழங்கும் பணி நிறைவடைந்துவிடும். அதன்பிறகு முறையான பதிவுகளோடு அடுத்த அறிவிப்பினை வெளியிடுவோம்.
‘எவ்வுயிரும் எம்முயிரே’ என்பது இறைப் பண்பு. அப்பண்பு மனிதருக்கும் வழங்கப்படுகிறது. அன்பே சிவமாகி நிற்க, செயல்களெல்லாம் சக்தியாகி இயக்க, தொண்டு செய்வோம்!
அன்புடன்,
ம.செந்தமிழன்
No comments:
Post a Comment