Wednesday, August 15, 2018

தண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம் !!

பயபுள்ள பொய் சொல்லிடாணுக போல....
கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, தமிழகம் நோக்கி வரும் அனைத்து நீர் வழித்தடங்களையும் இதுநாள்வரை தன்பக்கம் திருப்பியும், இடைமறித்துமே வந்திருக்கிறது கேரளா.

மேலும் முல்லைப்பெரியார் அணை பலவீனமாக உள்ளது, அணை உடைந்தால் கேரளாவே மூழ்கி காணாமல் போகும், எனவே புதிய அணை கட்டவேண்டும் என பொய் பரப்புரைகளை நீண்டகாலமாக பரப்பி வருகிறது கேரள அரசு. கேரளா ஊடகங்களும் பேராபத்து என அலறுகின்றன.

ஆனால் உண்மை நிலை என்ன?

முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு எக்கச்சக்கமான நீர் தேங்கி உள்ளது என்றாலும், தமிழகத்துக்கு அத்துனை நீரும் வராது. காரணம் அணை குழியில் உள்ளது. 125 அடி வரை உள்ள நீர் நிரந்தர இருப்பு நீராகும். அதற்குமேல் உள்ள நீர் மட்டுமே மேடான தமிழகத்துக்கு வரும்.

மேலும் முல்லைபெரியார் இன்றுவரை மிகவும் உறுதியோடு உள்ளது. இதனால் கேரளத்துக்கு ஆபத்து எதுவும் இல்லை . பின் ஏன் கேரளா அலறுகிறது? காரணம் இதுதான்.

ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ஆர்ச் அணை. இந்தியாவின் முதல் ஆர்ச் அணை. இந்தியாவின் 3-வது உயரமான அணை. இந்தியாவின் மிக நீண்ட நிலத்தடி நீர் மின் உற்பத்தி நிலையம் கொண்ட அணை என பல சிறப்புகள் கொண்ட இடுக்கி அணையை பெரியாற்றின் குறுக்கே 1976-ல் கேரளா கட்டியது.

அணையின் உயரம் 555 அடி. அணையில் நீரின் பரப்பு 36,000 ஏக்கர். இந்த நீர்த்தேக்கம் இடுக்கி, செறுதோணி, குளமாவு ஆகிய மூன்று அணைக்கட்டுகளை கொண்டதாகும். பல சிக்கலான கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்ட இந்த அணையில் பல சுரங்கங்கள் உள்ளன.

இந்த அணையில் மதகுகள் இல்லை. எனவே நீர் திறப்பு இல்லை. நீர் முற்றிலும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. கணடா நாட்டின் உதவியுடன் மூலமட்டம் என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

அணையில் இருந்து நீர் சுரங்கம் மூலம் 43km தூரத்தில் உள்ள மூலமட்டதிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவின் 60% மின்சாரம் இந்த அணையில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த அணை கடந்த 39 ஆண்டுகளில் மூன்று முறை(1981,1992, 2018) மட்டுமே நிரம்பி உள்ளது.

எனவேதான் இங்கு நீர் கொண்டுவர கேரளா, முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக நாடகம் ஆடுகிறது. மேலும் அப்படியே முல்லைபெரியாறு அணை உடைந்தாலும், அங்கிருந்து வெளியேறும் நீர் அனைத்தும் இடுக்கி அணையை வந்து சேரும். அவ்வளவு தண்ணீரை இடுக்கி அணை தாங்குமா? கண்டிப்பாக...

முல்லைப் பெரியார் அணையை விட 7 மடங்கு பெரியது இடுக்கி அணை. என்னது 7 மடங்கு பெருசா? என நீங்கள் வாய் பிளப்பது தெரிகிறது. அப்படிப்பட்ட இடுக்கி அணைதான் இன்று நிரம்பி  வழிகிறது.

இதில் செறுதோணி அணையிலிருந்து ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு தற்போது நீர் வெளியேற்றப்பற்றுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெயும் மழை வரும் ஓணம் பண்டிகை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மிகவும் வேகமாக முல்லை பெரியாறு அணையும்  நிரம்பி வருகிறது. முல்லை பெரியார் நிரம்பினால் அங்கு திறக்கப்படும் நீரும் இடுக்கி அணையை  வந்து சேரும். என்ன செய்ய போகிறது கேரளா?

ஏற்கனவே இடுக்கி அணையில் திறக்கப்பட்ட நீரும், இடைமலையாறு அணையில் திறக்கப்பட்ட நீரும், கீழ் சோலையாறு அணை, பெரிக்கால்குத்து அணை, சிமினி அணைகளில் திறக்கப்பட்ட நீரும் பெரியாற்றில் பெரும் பிரளயம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

இடுக்கி, எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர் முதலிய மாவட்டங்கள் கடல்போல காட்சி  அளிக்கிறது. மேலும் , பரம்பிக்குளம், ஆழியாறு, பொத்தூண்டி, மங்களம், பீச்சி, மழம்புழா, காஞ்சரப்புழா போன்ற அணைகளில் திறக்கப்பட்ட நீராலும், நீலகிரி மாவட்ட அணைகளில் திறக்கப்பட்ட நீராலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள் மூழ்கி உள்ளன.

தற்போதைக்கு மழைவேறு தீவிரம் காட்டி வருகிறது. முல்லைப்பெரியாறு உடைந்தால் கேரளா மூழ்கும் என்று பொய் பரப்புரை செய்யும் கேரளாவே கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

நீங்கள் 36000 ஏக்கர் பரப்பளவில் கட்டி வைத்துள்ள இவ்வளவு பெரிய இடுக்கி அணை இப்போது இடிந்தால் என்னவாகும்? கேரளாவே இல்லாமல் போகும். தன் வினை தன்னை சுடும் என்பார்கள். கேரளத்துக்கு இவ்வளவு பெரிய ஆபத்தான அணை வேண்டுமா?

இயற்கை நினைத்தால் அனைத்தும் பாழாய் போகும். இந்த பேராபத்திலிருந்து மீண்டு வர கேரளாவுக்காக இயற்கையிடம் பிராத்திக்கிறோம்.

இனியாவது தமிழகத்தின் பக்கம் வரும் ஆறுகளை தடுத்து நிறுத்தி உங்கள் பக்கம் திருப்பாதீர். இல்லையெனில் இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் பிரளயம் போன்ற பேரழிவை கேரளம் சந்திக்கும்.

தற்போது முல்லை பெரியார் அணையின் நீர் தங்களுக்கு வேண்டாம் என்று கேரளா தஞ்சம் கோருகிறது. எனவேதான் ஏராளமான நீர் முல்லை பெரியாறில் திறக்கப்பட்டு வைகை அணை நோக்கி பாய்ந்து வருகிறது.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...