பொதுவாக நான் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு செல்வதில்லை. மேடை நாகரீகம் என்ற பெயரில் நடக்கும் அர்ச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், எந்த ஒரு நூலையும் முன்முடிவுகளின்றி நான் எனது பார்வையிலேயே படிக்க விரும்புவதாலும் இந்த முடிவு.
எனினும் அண்மையில் நடந்த "நமக்கு ஏன் இந்த இழிநிலை? - ஜாதி மாநாடுகளிலும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.
நூலை அறிமுகம் செய்து பேசிய "தீக்கதிர்" குமரேசன், "இந்த நூலின் 77ம் பக்கத்தில் பெரியார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பார்ப்பனக் கட்சியாக குறிப்பிட்டுள்ளார். இது இன்றுவரை தொடர்கிறது. நாங்கள் விரும்பாத பூணூல் எங்கள்மீது திணிக்கப்படுகிறது" என்று குறைபட்டுக் கொண்டார்.
அரங்கின் வெளியே நண்பர்களிடம் அரட்டை அடித்தபோது இந்தப் பேச்சு வந்தது. பெரியாரோடு இணைந்து செயல்பட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும், அவர் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தபோது ஓடிவிட்டனர். அவர்களின் இந்தப்போக்கு ஈழப்பிரச்சினை, காவிரிப் பிரச்சினை என்று தமிழர் சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் இன்றுவரை தொடர்கிறது. எனவே பெரியார் சரியாகவே கூறியுள்ளார் என்றார்கள்.
ஏற்புரை நிகழ்த்திய நூலாசிரியர் சுபகுணராஜன் கூறிய ஒரு கருத்து மிக முக்கியமானதாக இருந்தது.
"பெரியார் அடிப்படையில் ஒரு சாதி ஒழிப்பு செயல்பாட்டாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் பல சாதிச்சங்க தலைவர்களும், அவர்களுடைய மாநாடுகளில் உரையாற்ற பெரியாரை அழைத்திருக்கின்றனர். அவர் சாதியை ஆதரித்து பேசப்போவதில்லை. தங்களை விமர்சனம்தான் செய்யப்போகிறார் என்று தெரிந்திருந்தும், பெரியாரை சாதிச்சங்க தலைவர்கள் அழைத்திருக்கிறார்கள். இதுதான் பெரியாருக்கும், தமிழ் மக்களுக்குமான உறவு!" என்றார். உளவியல் மாணவனான எனக்கு தமிழர்களின் சமூக உளவியலில் இது ஒரு புதிய பார்வையாகத் தோன்றியது.
உண்மைதான்! தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகம். ஆனாலும் அவர்களில் பலரும் பெரியார் மீது அபாரமான மரியாதையும், பற்றும் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அந்தக் கிழவன் அதிரடியாகப் பேசினாலும், தங்கள் நல்லதுக்காகவே குரல் கொடுத்திருப்பதாக பலரும் நம்புகின்றனர்.
ஒரு குடும்பத்தில் தாத்தாவுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவாகவே பெரியாருக்கும், தமிழக மக்களுக்கும் இடையே உள்ள உறவு இருக்கிறது.
இந்த உண்மை புரியாமல் பெரியாரை கொச்சைப்படுத்துவதன் மூலம் தங்கள் கொள்கைகளை கடைவிரிக்க முயலும் இந்துத்துவா அன்பர்களையும், கடுங்கோட்பாட்டு தமிழ்த்தேசிய நண்பர்களையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
No comments:
Post a Comment