Friday, August 31, 2018

தாமிரா

எழுதியபடியே மரணம் வாய்த்தல் எத்தனை அழகானது.இவ்வளவு சின்ன வயதில் மரணித்தல் எத்தனை கொடூரமானது.
இந்த அழகும் கொடூரமும் ஒருங்கே வாய்த்திருக்கிறது அய்யப்பனுக்கு...
ஆம் அய்யப்பன் மதுபானக்கடை திரைப்படத்திற்கு வசனம் எழுதிய அய்யப்பன் மரித்துப் போனான்.அந்த மரணத்தில் மதுவின் பங்களிப்பு அநேகமிருக்கிறது.

அமீர் அப்பாஸின் மூலமாகத்தான் அய்யப்பனை முதல்முதலாக சந்தித்தேன்.மது அருந்தாத தருணத்தில் அவனது நாஞ்சில் தமிழ் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
\அது ரெட்டச் சுழி திரைப்படம் முடித்து கம்பா நதி படத்திற்கான கதை விவாத தருணம்.
ஒரு நாள் பேச்சுப் போக்கில் கிழவி சாகறதுக்குள்ள் ஊருக்கு ஒரு தரவ போயிட்டு வரணும்ணே..
ஆத்துல குளிச்சு நாளாச்சு.ஆத்துல குளிச்சு திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு பூதப்பாண்டிபோய் கிழவிய பாத்துட்டு வரணும் ஊருக்கு போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போண்ணே என்றான்.

ஆச்சியைப் பாக்கறதுக்காகவே ஊருக்குப் போவோம் என மறு நாளே புறப்பட்டோம். ஒரு நீண்ட மகிழூந்து பயணம்.என் நண்பர்கள் எல்லோரும் அவனுக்கும் நண்பர் களானார்கள். அது மதுபானக்கடை திரைப்படம் வெளிவராத நேரம்.

முத்துக்குமார் குமார் டெய்லர், கிருபா எல்லோரும் அய்யப்பனிடம் அத்தனை அன்பாக இருந்தார்கள். அந்த அன்பு அவனுக்கு புதிதாக இருந்தது.பூதப்பாண்டிக்கு அய்யப்பன் கிளம்பிய போது அவர் கைல கொஞ்சம் பணம் குடுத்து விடுங்க ஆச்சி கைல குடுத்துட்டு வரட்டும் என்றார் முத்துக்குமார்..

மறுநாள்
நாகர் கோவிலிலிருந்து திரும்பி வந்து ரொம்ப நாள் கழிச்சு ஆச்சிக்கு பணம் குடுக்கறேன் ஆச்சி அழுதிருச்சுண்ணே எனக்கும் அழுகை வந்துருச்சு என்றான்.ஆச்சிக்கு பணம் குடுக்கச் சொன்னது முத்துக்குமார் என்று சொன்னேன்.

”அது எப்படிண்ணே உங்க நண்பர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க இவ்வளவு நல்லவங்கள ஒன்னா பாக்கறது கஷ்டம்ண்ணே ”என்றான்.

தனது எல்லா நட்பையும் அன்பையும் மதுவிற்கு இரையாக தருவதை ஒரு கலையாக நிகழ்த்திக் கொண்டே இருந்தான் அய்யப்பன்.
அவனுக்குள் நுழையும் மதுவென்ற மிருகம் எனக்கு அவன் மீதிருக்கும் அன்பை வேட்டையாட முயன்று கொண்டே இருந்தது.

விடியும் பொழுதில் எனக்குன்னு யாருமே இல்லண்ணே என்பான். உறவற்ற அவனது தனிமையோடு நான் அதிகம் பிணைக்கப்பட்டிருந்தேன்.அது என் கோபத்தை மட்டுப்படுத்தியது.

மதுயானக் கடை அவனுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதிலும் எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி.

மதுபானக்கடைக்கான வசனத்தின் சில பகுதிகள அவன் எனது அலுவலகத்தில் வைத்து எழுதினான்.அந்த வெற்றியின் விரல் பிடித்து மேலே எழுந்து வந்துவிடுவான் என எண்ணினேன்.

மது ஒரு பிசாசினைப் போல அவனைப் பிடித்திருந்தது. அவனை அரவணைக்கும் எல்லோரையும் அது சிரமறுத்தது.எனது அலுவலகத்திலிருந்து அவனுக்கு விடை கொடுத்தேன். என்னுள் அவன் பதியனிட்ட சில கசப்பான அனுபவங்கள் அவனிடமிருந்து முற்றிலுமாக என்னை விலகச் செய்தது.

அவனைப் பற்றி அவ்வப்போது சில செய்திகளை செவியுறுவேன்.நிலம் நீர் காற்று என ஒரு படம் இயக்குகிறான். அவன் இப்போது குடியை நிறுத்தி விட்டான், திருந்திவிட்டான், மீண்டும் குடிக்கத் துவங்கிவிட்டான், படம் நின்று விட்டது, இன்னும் க்ளைமாக்ஸ் மட்டும்தான் எடுக்க வேண்டும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.

இவ்வாறாக ஏதேதோ செய்திகள் செவியுறுவேன்.. இன்றும் இந்த நள்ளிரவில் ஒரு செய்தியை செவியுற்றேன். இந்த நகரத்தின் ஏதோ ஒரு அறையில் அவன் மரித்துப் போயிருக்கிறான்.அவனுக்கான கண்ணீரை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...