Saturday, August 18, 2018

Ramamurthi Ram

பெரும் பூனைகள் 2

உலகளாவிய புலிகள் தினத்தில் துவங்கிய இந்தத் தொடரில்  நாம் புலிகளை மட்டும் பார்க்கப் போவதில்லை பெரும் பூனைக் குடும்பத்திலுள்ள சில விலங்குகள் பற்றியும் பார்ப்போம். அதற்கு எம்மிடம் வலுவான காரணம் இருக்கிறது. எமக்குத் தெரிந்த சில கானுயிர் புகைப்படக்காரர்களே எம்மிடமே புலிகளையும், சிறுத்தைகளையும், நமது நாட்டிலேயே இல்லாத சிவிங்கிப் புலிகளையும் சில சமயம் ஜாகுவார்கள் பற்றியும் ஒன்றாக போட்டு குழப்பி கேள்விகளை கேட்கிறார்கள். அதில் அவ்வப்போது கருஞ்சிறுத்தைகளும் கூட இடம் பிடிக்கும். அவர்கள் இயங்குவது வேறு ஒரு தளத்தோடு, அதிலும் அங்கே கிடைக்கிற Like மற்றும் comment களோடு நின்றுவிடுகிறது.(இதுதான் உண்மை அந்த நல்ல மனிதர்கள் என்மீது கோபமடைந்தாலும் பரவாயில்லை) அது அவர்கள் தவறல்ல இதுவரை இவற்றையெல்லாம் ஆழமாக அவர்களில் பலர் கவனித்ததில்லை, காடுகளோடு சிறிதளவாவது தொடர்புடைய அவர்களின் நிலையே இவ்வாறென்றால், இதற்கு துளியும் தொடர்பில்லாத பல கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ஊடகத்தினர் மற்றும் எளிய நிலையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களின் நிலையும் என்னவென்று சொல்வது ?!!!...

உண்மையை சொல்லவேண்டுமானால், இதுவரை இவற்றை  கவனிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதற்கான தேவையும் அவர்களுக்கு இதுவரை இல்லை. இவர்களின் நிலை  எப்படி இருந்தாலும் நமக்குத் தெரிந்ததை இந்த தொடரில் இங்கே தொடர்ந்து விளக்கி விடுவோம்...

புலிகள் என்றாலே உடனே நினைவில் வருவது ஆசிய நாடுகள்தான். அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். ( இந்த எண்ணிக்கயில்கூட ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கிறது அதுபற்றி இறுதியாக பார்ப்போம் )பூனைக் குடும்பத்தில் உள்ள வேட்டையாடிகளுக்கு பெயர் பெற்ற ஆப்பிரிக்க காடுகளில் கூட புலிகள் இல்லை என்பதே உண்மை. புலிகளின் ஆதிநிலம் என்றால் ஆசியாவின் மிகவும் குளிர்ச்சியான பனிசூழ்ந்த இடங்கள்தான். அங்கே இருந்துதான் எதோ காரணத்திற்காக, எதோவொரு காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமது வெப்பமான நிலப் பகுதியை அடைந்திருக்கும் என பல தரவுகள் சொல்கின்றன. அதன் எச்சமான காரணத்தினால்தான் புலிகள் எப்போதும் நீர் நிறைந்த குளிர்ச்சியான இடங்களையே தேர்ந்தெடுத்து விரும்பி வாழ்கின்றன....

அதனால்தான் இப்பவும்  நமது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள புலிகள் வாழுமிடங்களில், அவைகள் நீரில் நின்று கொண்டிருப்பதையும், படுத்திருக்கும் காட்சிகளையும் அடிக்கடி காணமுடிகிறது...

ஆனால் இந்தியச் சிறுத்தைப் புலிகள் இவற்றிற்கு நேரெதிரான குணமுடையவை முடிந்தவரை நீரைத் தவிர்த்தே வாழ விரும்பும் அவ்வளவு எளிதில் நீரில் இறங்காது.காரணம் சிறுத்தைப்புலிகளின் ஆதி நிலம் நமது பகுதியை ஒத்த வெப்பப் பிரதேசங்களே.சிறுத்தைப்புலிகள் நன்கு மரங்களில் ஏறுகின்ற திறமையுடையவை. மிகுந்த எடையை உடைய இரைக்கூட வாயில் கவ்விக் கொண்டு மரங்களில் ஏறிவிடும்.புலிகளுக்கு அந்தளவு மரம் ஏறுகின்ற திறமை இல்லை...

அதனால்தான் புலிகளைவிடவும் மிகச் சிறிய அளவிலான செந்நாய்களிகளிடம் கூட பல சமயம் புலிகள் அகப்பட்டு உயிரை விடுகின்றது. அப்படிப்பட்ட சிக்கலான நேரங்களில் சிறுத்தைப்புலிகள் மரங்களில் ஏறி தப்பித்துவிடுகின்றன...

இருந்தாலும் புலிகள் உணவு விசயத்தில் எளிதில் சமரசம் செய்து கொள்வதில்லை.சிறுத்தைப்புலிகள் போன்று பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளை முடிந்தவரை தவிர்த்து விடுகிறது. சிறுத்தைப்புலிகளின் உணவுப் பட்டியலில்  எலிகள் கூட அவ்வப்போது இடம்பெற்றுவிடும்...

இனி கருஞ்சிறுத்தைப்புலிகள் பற்றி பேசுவோம்.கருஞ்சிறுத்தைப்புலி என்பது தனியான ஒரு இனம் இல்லை. இவை முழுமையாக சிறுத்தைப்புலிகள்தான்.மனிதர்களில் நிறக்குறைபாடு காரணமாக பல நிறமற்ற(வெள்ளை) மனிதர்களை பார்த்திருப்போம். அதுபோன்ற குறைபாட்டின்(நிறைபாடு!)காரணமாக கருநிற சிறுத்தைப்புலிகள் நூற்றில் ஒன்றிரண்டு பிறக்கும்.அவற்றை அருகில் சென்று உற்றுப் பார்த்தால் சிறுத்தைப்புலிகளின் புள்ளிகளைக் காணலாம். இவற்றிற்கு பிறக்கும் குட்டிகள் வழக்கமான சிறுத்தைப்புலிகளைப் போன்றுதான் இருக்கும்...

பல ஊடகங்களில் கூட புலிக்கு பதிலாக சிறுத்தைப்புலியின் படங்களையும், சிறுத்தைப்புலி பற்றிய செய்திகளுக்கு சிவிங்கிப்புலிகளின் படமும் இடம் பெறுவதைப் பார்த்திருக்கிறோம். அது பற்றியும் பேசுவோம். அதற்கு முன்னர் உங்களது கேள்விகளையும், சந்தேகங்களையும், கருத்துகளையும் இங்கே பதிவிடுங்கள்...

ஆவலுடன்,
Ramamurthi Ram

PC: Sundhara Raman

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...