Saturday, August 18, 2018

Ramamurthi Ram

பெரும் பூனைகள் 3

இந்தியாவில் பெரும்பூனைக் குடும்பத்தின் சிறப்புகள் வாய்ந்த நான்கு வகைகள் இருந்தன அவை பெரிய உருவத்திலிருந்து சிறியது வரையில் முறையே,

புலி - Tiger(Panthera tigris),

சிங்கம் - Asiatic lion (Panthera leo leo),

சிறுத்தை - lndian leopard(Panthera pardus fusca),

சிவிங்கிப்புலி - Asiatic cheetah (Acinonyx jubatus venaticus)...

இவற்றில் நான்காவதாக இருக்கும் சிவிங்கிப்புலி இந்தியாவில் முழுவதுமாக இல்லை. இந்தப் பெருமையான செயலுக்கு காரணம் மனிதர்களைத் தவிர வேறு என்னவாக இருக்கும் ?. இறுதியாக இருந்த கடைசி மூன்றையும் ஒரே இரவில் 1948 ல் மத்தியப்பிரதேசப் பகுதியில் இருந்த ஒரு மன்னனால் கொல்லப்பட்டது....

அதற்கு முன்னர் சென்னை உட்பட நமது சத்தியமங்கலம் காடுகள் வரை பரவியிருந்திருக்கிறது. மொகலாய மன்னர் அக்பரிடம் சுமார் ஆயிரம் சிவிங்கிப்புலிகளுக்கும் மேலாக, நாய்களை வேட்டைக்கு பயன்படுத்துவதைப் போல வளர்த்து வேட்டைக்கு பழக்கி வைத்திருந்திருக்கிறார்கள். திப்பு சுல்தானிடமும் வேட்டைக்காக வளர்க்கப் பட்டு இருந்திருக்கிது....

தரைவாழ் ஊனுண்ணி வேட்டையாடி விலங்குகளில் மிக வேகமாக ஓடும் திறன் வாய்ந்த இந்த சிவிங்கிப்புலிகள். இரையை சிறுத்தைகளைப் போல் மறைந்து சத்தமில்லாமல் பம்மி, பதுங்கிச் சென்று  தாக்குவதில்லை. வேகமாக துரத்தும் குறைந்த தூரத்திற்குள் அதிக வேகமெடுத்து இரையைத் தாக்கிக் கொல்லும். குறைந்த தொலைவுக்குள் இரை அகப்படா விட்டால் மிக தூரமெல்லாம் துரத்திக் கொண்டு ஓடாது...

சிவிங்கிப்புலி உறுமுவதோ,கர்ஜிப்பதோ இல்லை நாய்கள் குரைப்பதுபோன்று கீச்சிட்டு கத்தும். திறந்த புல்வெளிக்காடுகளையே விருப்பமான வாழிடமாக பெரிதும் விரும்பி வாழ்ந்திருக்கிறது.ஆனால் சிறுத்தைகள் முடிந்தவரை மரங்கள் புதர்களடர்ந்த இடங்களிலேயே வாழும் இயல்புடையவை....

ஆசியச் சிவிங்கிப்புலி இன்றைக்கு ஈரான் பகுதிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர "புராஜக்ட் சீட்டா"  Ministry of Environment and Forests (MoEF) மூலம் பெரும் திட்டமெல்லாம் போடப்பட்டது. பிறகு என்னவானது என இதுவரை தெரியவில்லை. ஆனாலும் அவற்றை இங்கே கொண்டுவருவதில் எதிர்ப்பும், ஆதரவுமான இருவேறு விதமான வேறுபாடுடைய கருத்துகள் பலரிடம் இருக்கிறது...

ஆப்பிரிக்காவில் காணப்படுவது ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகள் - African cheetah (Acinonyx jubatus jubatus). மற்றும் இங்கேயிருந்த ஆசிய சிவிங்கிப்புலிகளும் சிறுசிறு வேறுபாடுடைய உள்ளினங்கள் ஆகும்...

ஆனால் நம்ம ஊரில் ஊடகங்கள் உட்பட பலரும் இங்குள்ள சிறுத்தைப் புலிகளையும், இங்கில்லாத சிவிங்கிப்புலிகளையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்கிறார்கள். இவைகள் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. உருவம் மற்றும் பருமன்,தோலின் நிறம்,புள்ளிகளில் வேறுபாடு உடையவைகள். உடலில் தனித்தனி கருநிற ஒற்றைப் புள்ளிகளை உடைய சிவிங்கிப்புலிகள். சிறுத்தைப் புலிகளின் தோலில் ஒழுங்கற்ற வட்டவடிவ புள்ளிகள் இருக்கும்.  சிறுத்தைப் புலிகள் வேட்டையாடுவதற்கு முக்கியமாக இரவுப் பொழுதுகள் அல்லது ஒளிமங்கிய அதிகாலை மற்றும் மாலை வேளைகளையே தேர்ந்தெடுக்கும் இரவாடி விலங்கு ஆகும். ஆனால் சிவிங்கிப்புலி பகலில் மட்டுமே வேட்டையாடும் பகலாடி விலங்கு...

சிறுத்தைகளைப் போன்று சிவிங்கிப்புலி கால்நகங்களை முழுவதுமாக உள்ளிழுக்க முடியாது.வயிறு ஒட்டிய மெலிந்த கால்களுடன் இருக்கும்....

காடுகளை நாளுக்குநாள் குறைத்துக் கொண்டிருப்பது ஒருபக்கம் நடக்கிறது. அதன் விளைவாக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வாழ்க்கை போட்டியும், மோதல்களும் ய மிகுந்த இங்கே மீண்டும் சிவிங்கிப்புலிகளை மறு அறிமுகம் செய்யும் திட்டமிருக்கிறது. அதேவேளை  வரலாற்று ஆய்வாளர்களான ரோமிலா தாப்பர் மற்றும் யூசுப் அன்சாரியுடன் இணைந்து வால்மீகி தாப்பர் எழுதிய Exotic Aliens: The Lion & The Cheetah in India என்ற புத்தகத்தில் சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் நம் நாட்டின் உயிரினங்களே இல்லை என்கிறார்கள். அதனால்தான் அவைகளால் இங்கு நிலைத்து பரவி வாழமுடியவில்லை என்கிற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள். அது ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். மிக ஆழமாக உள்ளே போனால் பனைமரங்கள் கூட இந்த மண்ணுக்குரிய மரம் இல்லை என்கிற அளவில் ஆராய்ச்சி போகிறது. அப்புறம் மனிதர்களும் இந்த மண்ணிற்குரியவர்கள் இல்லை என்பதும் வெளியே வரும். இப்போதைக்கு நமது தேவைகளையும்,பேராசைகளையும் குறைத்து  இங்கு ஏற்கனவே இருக்கும் உயிரினங்கள் வாழ முதலில் வழி செய்வோம்....

மேலும் அடுத்த பதிவில் மற்றவைகளையும் பார்ப்போம்.
தேடலுடன்,
Ramamurthi Ram

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...