Saturday, August 18, 2018

Ramamurthi Ram

பெரும் பூனைகள் 4

பெரும் பூனைக் குடும்பத்திலிருக்கும் நமது மண்ணில் வாழ்கிற சிறுத்தைகள் பற்றியும், நமது மண்ணிலிருந்து மறைந்த சிவிங்கிப்புலிகள் பற்றியும் ஓரளவு பார்த்தோம். இவைகள் பற்றி அறியாத/புரியாத காட்சி மற்றும் அச்சு ஊடகத்தினரில் பலர் அறியாமையால் தொடர்ந்து தப்பும் தவறுமாக செய்திகளை பரப்பிவருவது நமது சமூகத்திற்கு தொடர்ந்து செய்துவரும் அறிவுசார்ந்த பாதகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது ?!!....

இப்படியிருக்க நமது நண்பர் ஒருவர் கடந்த பதிவின் கமென்ட்டில், "அப்ப ஜாகுவார் என்பதெல்லாம் கட்டுக் கதைகளா ?" என்கிற ரீதியில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதனால் இன்றைக்கு அதுபற்றி பார்ப்போம். ஜாகுவார் பற்றி பிறகு பார்க்கலாம் என்றிருந்தேன், நமது பதிவில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதற்கு காரணம் அது நமது நிலத்திற்குரிய விலங்கல்ல என்பதே...

ஆனாலும் நமது ஊடகங்களில் சிறுத்தைக்குப் பதிலாக  சிவிங்கிப்புலிகள் போல அவ்வப்போது நமது மண்ணிற்கு சிறிதும் தொடர்பில்லாத  ஜாகுவார்களும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பது பெரிய தவறுதான். அதற்காகவாவது இன்றைக்கு அதுபற்றி சுருக்கமாக பார்ப்போம். சிறுத்தைகளுக்கும் ஜாகுவார்களுக்குமான உருவத்தில் நெருங்கிய ஒற்றுமை உண்டு என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க கண்டத்திலுள்ள பெரும் பூனைகளில் இது கொஞ்சம் பெரியது இந்த ஜாகுவார் - Jaguar (Panthera onca). ஓரளவு சிறுத்தைகள் பற்றி அறிந்தவர்கள் கூட இரண்டையும் இனம் பிரித்து காணமுடியாத அளவிற்கு உருவ ஒற்றுமைகளை உடையவை...

ஆனால் கூர்ந்து கவனித்து ஒப்பிட்டு பார்ப்பவர்கள் இரண்டிற்குமுள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியும். தோலிலுள்ள வட்டப் புள்ளிகளுக்கு இடையில் கருநிற புள்ளிகளுடன் இவற்றின் தோல் காணப்படும்.(படத்தில் பார்க்கவும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்) சிறுத்தைகளை விட உருவத்திலும், எடையிலும், வலிமையிலும் பெரியது ஜாகுவார்கள். பூனைக் குடும்பத்தில் புலி மற்றும் சிங்கத்திற்கு அடுத்த பெரிய விலங்கு இது. சிறுத்தைகளை ஒத்த தோற்றத்திலிருந்தாலும் சிறுத்தையிலிருந்து மாறுபட்ட குணமுடையவை இவை. சிறுத்தைகளைப் போலில்லாமல் புலிகளை போன்று நீர் நிலைகளுக்கு அருகே வாழ விருப்பமுடையவை. நன்கு நீந்தும் அதோடு முதலைகளை மிக விருப்பமாக வேட்டையாடும். சூழ்நிலைக்கு ஏற்பவும் தமது இரையை முடிவு செய்யும் தன்மையுடைவை...

ஜாகுவார்கள் பலம் மிகுந்த தலை மற்றும் உறுதி வாய்ந்த தாடைகளையுடையவை. பெரிய பூனையினத்தின் மற்ற விலங்குகளை விட ஜாகுவாரே மிகவும் ஆற்றலுடைய கடிதிறனை உடையவையாகும்.கடினமான மண்டையோட்டைக்கூட தமது உறுதிமிக்க கடியால் சேதப்படுத்தி மூளையை சிதைத்து இரையை செயலிழக்கச் செய்துவிடும் வலிமையுடையவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

இன்னுமொரு ஆர்வமுள்ள தகவல் என்னவென்றால் ஜாகுவாரிலும் கருஞ்சிறுத்தை போல கருநிற ஜாகுவார்கள் அரிதாக பிறப்பதுண்டு. இவற்றைப் போல அவைகளும் தனியினம் கிடையாது. அதே குணமும், ஆற்றலும் மட்டுமே உடையவை. இன்னும் சொல்லப் போனால் அவற்றின் நிற மாறுபாடுபற்றி அவற்றிக்கு தெரியவே தெரியாது....

இன்றைக்கு ஜாகுவார் இனம் அச்சப்படும் வகையில் அழியும் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, மனிதர்களின் நாகரீக சொகுசு வாழ்க்கையின் வளர்ச்சி நிலையை உணர்த்துகிறது. நமது வாழ்க்கை அளவுக்கு அதிகமாக சுகமானதாக மாறிவிட்டது என நாம் எண்ணுகிற நிலைக்கு வந்தால், அது பிற உயிர்கள் ஏதோ ஒரு வகையில் வேகமாக அழிந்து கொண்டிருப்பதன் குறியீடாகும்...

ஆனால் நமது சிறுத்தை அந்தளவிற்கெல்லாம் ரிஸ்க் எடுக்காத இயல்புடையவை. மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டியே கூட வாழ்ந்துவிடும். என்ன அவ்வப்போது எளிதாய் கிடைக்கும் நாய்கள் கோழிகளைக் கூட வேட்டையாடிவிடும். இந்த தன்மையால் மனிதர்கள் மற்றும் சிறுத்தைகளுக்கும் கூட மிகுந்த பாதிப்புதான்...

அதுபற்றியெல்லாம் அடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம். தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வையுங்கள். அடுத்த பதிவில் அதுபற்றி விரிவாக பேசுவோம். அதுவரை...

பேரன்புடன்,
Ramamurthi Ram

(இப்படியே போனால் பூமா பற்றியும் பேசவேண்டும் போல உள்ளது)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...