Tuesday, September 18, 2018

தமிழ்முழக்கம் சாகுல் அமீது

பகுத்தறிவுப்  பகலவன் தந்தை பெரியார் பிறந்தார்,வாழ்ந்தார், இறந்தார் எல்லாம் சரி. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த அதிகார ஆளுமையிலும் பங்கெடுக்காமல் தன் வாழ்நாளில் சமூகச் சீர் கேடுகளுக்கு எதிராகச்  செயல்பட்டார், வெறும் வார்த்தைகளில் சவடால் விட்டுக் கொண்டிராமல் களத்தில் நின்றார் கலகக்காரர் பெரியார். அவர் ஆற்றிய வினைகளின் எச்சம் இன்னும் மிச்சம் உள்ளதை  அவரைச் சீண்டிக்கொண்டே இருப்பவர்களால் அவர் இன்னும் நம்மோடே வாழ்கிறார்என்பதை உறுதி படுத்துகிறது. வாழ்ந்தபோதும்...
மறைந்து கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னும் இன்னும் செருப்பு வீச்சுக்கு ஆளாகிறார் என்றால் அன்று அவர் ஆற்றிய சமூக இழிவுக்கு எதிரான பணிகள் எவ்வளவு வீரியம் கொண்டவையாக இருந்து இருக்கும் என்னால் உணர முடிகிறது.
அவரை எதிரிகள், துரோகிகள் தாக்கலாம். ஆனால் யாருக்காக களம் பல கண்டு, சிறை பலமுறை சென்றாரோ அவர்களே அவரை இழி சொற்களால் வசை பாடுவதும், அவமதிப்பதும்தான் என் போன்றோருக்கு சற்றே மனம் வலிக்கிறது.
எந்த தலைவனும் வாழ்ந்த காலத்தில் நூறு சதவீதம் எல்லா மக்களாலும் போற்றிப் புகழப்பட்டு ஏற்கப்படுவதும் இல்லை.
அவர் யாரை இந்த மக்களின் எதிரிகளாக அடையாளப் படுத்தினாரோ அவர்களோடு இணைந்தும், இணையாததுபோல் அவாளுடைய இரவல் குரல்களாகவும் தமிழ்  பிள்ளைகள் இருப்பது கண்டு வருத்தப் படுகிறேன்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில்தான்
தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள்,
ம.பொ.சி, திரு வி.க, பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற எண்ணற்ற பெரும்பெரும் தமிழறிஞர்கள் அரசியல் களத்தில் நின்றார்கள். இணைந்தும் முரண்பட்டும் செயல் பட்டுள்ளார்கள். பெரியாருடனான அரசியல் முரண்பாட்டை அவர்கள் யாரும் இவ்வளவு கேவலமாய் வெறிகொண்டு வசை பாடியதில்லை. மேலும் பெரியார் குறித்து இவ்வளவு வன்மத்தோடு எதையும் அவர்கள் திரிபு செய்யவில்லை. இப்போது அவர்கள் யாரும் சாட்சிக்கு வர மாட்டார்கள் என்ற துணிவில் பெரியார் குறித்து பலர் அவாளின் விருப்பத்திற்கேற்ப திரிபு வாதங்களையும் முன் வைக்கத் தொடங்கியுள்ளனர் என்பது பெரும் அவலம்.!

பெரியார் தனி நாடு கேட்டார்.
ஆரிய பார்ப்பனர்,
வடவர் ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து வாழ முடியாது எனக் கூறி திராவிட நாடு கோரிக்கையை முன்மொழிந்து  தமிழ்நாடு தமிழருக்கே என்ற மாற்று அரசியல் முழக்கத்தை பின்னர் வைத்தார்.
அதோடு நிற்காமல் இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு பகுதியை விலக்கி இந்திய வரைபடத்தையே தீயிட்டுக் கொழுத்தி சிறை சென்றார். இந்தியத்துடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்று இந்திய அரசியல் சட்ட நகலை தீயிட்டு எரித்து சிறை சென்றார். இன்றைக்கு பொது மக்களுக்கு 
தேசிய கீதத்தை அவமதித்தால் சிறை என்று சொல்லும் இந்திய அரசு மோடியும், பிஜெபி  கேடிகளும் அவமதித்தால் பிழையில்லை என்று கண்டும் காணாதிருக்கிறது. ஆனால் அதே தேசிய கீதத்தை அன்றே ஏற்க மறுத்தது மட்டுமின்றி இந்திய தேசிய கொடியையே எரித்து சிறை சென்றவர் பெரியார்.
மூட நம்பிக்கையை சட்ட ரீதியாகவும் நீதி மன்றத்திலேயே எதிர் கொண்டு தன் நிலையில் உறுதியாய் நின்று சிறையைத் தண்டனையாய் விரும்பி ஏற்றார்.
மது விலக்கை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தபோதே அதற்கு செயல் வடிவம் காட்டி தன் தென்னந் தோப்பையே தாரை வார்த்தவர்.
செருப்பு வீச்சுக்களும், சாணி ஊற்றல்களும் நிகழ்ந்த பின்னும் சற்றும் மனம் தளராமல் மூத்திரச் சட்டியோடு தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதியாய் உழைத்தார்.
மேடைகளில் முழங்கி வெற்றுக்கூச்சல் போட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல பெரியார். 
தீண்டாமைக்கு எதிராக...
மூட நம்பிக்கைக்கு எதிராக...
சாதியத்திற்கு எதிராக...
ஆரியத்திற்கு எதிராக...
பெண்ணடிமைக்கு எதிராக...
இந்தியத்திற்கு எதிராக... என்று இன்னும் இதுபோல் எண்ணற்ற எல்லா நிலைகளிலும் களத்தில் நின்று போராடியவர் பெரியார்.
அதற்கு விலை சிறையேயானாலும் இன் முகத்தால் எதிர்கொண்டவர்.
அப்படி பட்ட அவருடன் அறிஞர் அண்ணா இணைந்து கொண்டார். பிறகு பிரிந்து சென்றார். தனிக்குடித்தனம் போன அண்ணா பெரியாரின் சில பல கொள்கை நிலைப்பாடுகளில் முரணாகவும் அரணாகவும் செயல் பட்டாலும் அதில் தனிநாடு கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார். அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு என்றார்.
ஓட்டு அரசியல், அதிகார மோகம்... நீதிதேவன் மயக்கமானான். அண்ணா தனிநாடு கோரிக்கையை கைவிட்டார். ஆனால் அப்படி அண்ணா தனிநாடு கோரிக்கையைக் கைவிடும் போது
'' தனி நாடு கோரியதற்கான காரணங்கள் இன்னும் உயிரோடு அப்படியே இருக்கின்றன. '' என்று சொல்லி சில காலம் வாழ்ந்து அவரும் செத்துப்போய்விட்டார். இப்ப இவ்வளவு வீரியமாக பெரியாரை வசைபாடும் தமிழ் தேசிய பேரறிஞர்களிடம் என் கேள்வி இவ்வளவுதான்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே தமிழர்கள் தனிநாடு கேட்டவர்கள். அதில் பெரியார் இணைந்து கொண்டார், செயல்பட்டார். பின்னாலே அண்ணா வந்தார். பெரியாரின் போராட்டம் என்று  முன்னெடுத்தார், செயல்பட்டார். முடியலே, இப்போது  உங்கள் கணக்குப்படி இரண்டு வந்தேறிகளும் இல்லை. செத்துப் போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற போராட்டம் மட்டும் சாகாமல் காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
''தமிழ்நாடு தனிநாடு'' கோரிக்கையை நம்மில் துணிச்சலோடு முன்னெடுக்கப்போகும் தமிழ் தேசிய தலைவர் யார்.?
வாழ்ந்த காலத்தில் முழுமையாக இல்லையானாலும் நமக்காக சில நாழிகைகளே செலவிட்டு உழைத்திருந்தாலும் அவர் பொருட்டு வாஞ்சையுடன் நினைவு கூர்தலே நல்ல தமிழனின் பண்பு என்பதே மூத்தோர் வாக்கு.
அதைவிடுத்து
நாம் நினைக்கிறபடியெல்லாம்,
வாழ்ந்து மறைந்தவர்கள் இருந்து இருக்க வேண்டும் என்று விரும்பினால் கொஞ்சம் நமது முதுகையும் நினைவில் கொள்ளுதல் அறிவுடைமை என்று கருதுகிறேன். மேலும் பெரியாரின் கொள்கை முழக்கங்களும், தத்துவக் கருத்துக்களும் சித்தாந்த வடிவத்தின் பரிணம வளர்ச்சி என்பதை அவர் மறைந்து அரை நூற்றாண்டை நெருங்கும் இந்தத்  தருணத்திலும் எதிர்ப்பு ஆதரவு நிலைகளில் ஊடுருவி இருப்பதே பெரிய சான்று.
அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பது அல்ல என் வாதம். விமர்சியுங்கள். அவை கேள்விகளாக இருக்கும் நிலையில் யாரும் பதிலாகத் தர இயலும்.
அதுவே வரம்பு மீறிய வசைகளாக மாறும்போது
அவை
எதிரிகளுக்கு நல்ல ஆயுதமாக அமைந்து விடுகிறதே என்பதுதான் என் ஆதங்கம்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தித்தான் நம் அனைவருக்குமான பொது எதிரிகள் மிக எளிதாக நம் மண்ணில்  ஊடுருவி விட்டார்கள். இப்ப இருக்கும் சூழலில் நம்
பொது எதிரிகள் நம்மை விட மிக வலிமையான ஆயுதமாக மதத்தையும் ஆன்மீகத்தையும் கையில் ஆயுதங்களாக ஏந்தி களத்தில் நிற்கிறார்கள். அதிகாரம் அவர்களுக்கு அடிமை சேவகம். சட்டம் அவர்களுக்கு உற்ற துணை. இனி நாம் விரும்பி ஒன்றிணைந்து எதிர்த்தாலும் அவாளை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் யதார்த்தம்.
இறந்து போனவர்களை நினைத்து சண்டை போடுவதை விடுத்து, இன்னும் உயிரோடு இருந்து வாழ்பவர்களின் உரிமையற்ற இழி நிலையை நினைவு கூர்தல் நலம்.!
தற்போது....
தத்துவக் கூற்று தனிமனிதத் தாக்குதலில் நிலை கொண்டுள்ளது.
சரி செய்யலாம்
நாம் விரும்பினால்....!

 

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...