Sunday, September 9, 2018

கா.அய்யநாதன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசைப் போல் இதற்கு முன்பிருந்த எந்த ஒரு அரசுக்கும் இந்த அளவிற்கு அபார துணிச்சல் இருந்ததில்லை. ஆம், மக்கள் படும் வேதனை, அவர்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமை, விலைவாசி ஏற்றத்தால் ஏற்கனவே சரிந்துக் கொண்டிருக்கும் ௹பாயின் மதிப்பு காரணமாக ஏற்படும் பண வீக்கம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாடு முழுவதும் மக்கள் கோவத்துடன் விவாதித்தாலும் அது பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை ஒவ்வொரு நாளும் உயர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறாரே இந்தத் துணிச்சல் இதற்கு முன் இருந்த எந்த பிரதமருக்கு இருந்தது இல்லை!
இன்றைய நிலையில் மும்பையில் கச்சா எண்ணெயின் இறக்குமதி விலை ஒரு பீப்பாய்க்கு ௹.4884.00, ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டர்களைக் கொண்டது. இந்த விலைக்குத்தான் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சாவைப் பெறுகின்றன. இதனை சுத்திகரிப்புச் செய்ய ஆகும் செலவையும் தாண்டி ஈட்டும் இலாபம் (Gross Refinery Margin – GRM) சர்வதேச அளவில் பீப்பாய்க்கு ஒரு டாலர் மட்டுமே, ஆனால் இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு டன் கச்சாவை சுத்திகரிப்பு செய்தால் 7 டாலர்கள் வரை இலாபம் ஈட்டுகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் 11.9 டாலர்களை வரை இலாபம் ஈட்டுகிறது. அதற்கு அந்நிறுவனம் இறக்குமதி செய்யும் கச்சாவில் இருந்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் வரை காரணம் என்று சொல்லப்படுகிறது. இருக்கட்டும், கச்சா விலை + சுத்திகரிப்பு இலாபம் இவை இரண்டையும் கூட்டினாலும் இன்றைய நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அடக்க விலை ௹.30.72 + 0.10 = ௹.30.82 மட்டுமே!
இந்த பெட்ரோல் அடக்க விலையின் மீது இந்திய ஒன்றிய அரசு விதிக்கும் உற்பத்தி வரி + மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி அல்லது விற்பனை வரி + டீலர் கமிஷன் ஆகியன 99 விழுக்காடு! டீசல் மீதான உற்பத்தி வரி + மாநிலங்களின் வரிகள் (இவை மாநிலத்திற்கும் மாநிலம் வேறுபடுகிறது) சற்றேறக்குறைய 65 விழுக்காடு! இதனால்தான் பயன்படுத்துவோர் அனைவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றனர். அதனைச் செய்தால் அதிகபட்ச ஜிஎஸ்டி 28% + அதிகபட்ச கூடுதல் வரி (Cess) என மொத்தமே 53 விழுக்காடுதான். இதனை வாங்கும் இடத்தில் வசூலித்தால் (எரிபொருள் நிலையங்களில்) அதிகபட்சமாக – இன்றுள்ள ௹பாயின் மதிப்பு மதிப்பை (ஒரு அமெரிக்க டாலருக்கு 71.26) சேர்த்தாலும் ௹.50ஐ தாண்டாது! ஆனால் இந்திய ஒன்றிய அரசும் தயாராக இல்லை, மாநில அரசுகளும் ஏற்க மறுக்கின்றன. காரணம் இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வரக் கூடிய வரி வருவாயில் 40 விழுக்காடு எரிபொருள் வரி விதிப்பில் இருந்தே கிடைக்கிறது.
முதலில் இந்திய ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு அளித்துவந்த மானியங்களை விலக்கிக் கொண்டதோடு, சர்வதேச சந்தையிலும் 2014ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி வரை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்த்து. ஒரு கட்டத்தில் அது பீப்பாய்க்கு 27 டாலர்கள் வரை குறைந்தது. ஆனால் சர்வேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கத்திற்குத் தக்கவாறு விலையை மாற்றியமைப்போம் என்று இந்நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழியை காற்றி பறக்கவிட்ட மோடி அரசு, கச்சா எண்ணெயில் இருந்து உற்பத்தியாகும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் மீதான உற்பத்தி வரியை தொடர்ந்து உயர்த்தியது. பெட்ரோல் மீது லிட்டருக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி (எக்சைஸ் டியூட்டி) வரியை ௹.11.77 வரையும் டீசல் மீது விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை 13.47 வரையும் படிப்படியாக உயர்த்தியது!
இதற்கு அரசு கூறிய காரணம்: கச்சா விலை உயரும் போது அந்த சுமையை மக்கள் மீது சுமத்தாமல் அரசே சமாளிக்க முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் நலனை எதிர்காலத்தில் காக்கவே விலையை குறைக்கவில்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். ஆனால் விலை உயரும்போது ஒரு முறை உற்பத்தி வரியை ௹.2 குறைத்த நிதியமைச்சகம், மாநிலங்களும் வரியை குறைத்து விலையை குறைத்திட உதவிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன் பிறகு மேலும் ௹.2 உற்பத்தி வரியை குறைத்தவர், எரிபொருள் மீதான கூடுதல் உற்பத்தி வரியை ௹.6 குறைப்பதாகவும் அறிவித்தார். ஆனால் இதன் பயனை மக்களுக்கு அளிக்காமல், அந்த எட்டு ௹பாயும் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி குவியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்!
கச்சா எண்ணெய் விலை குறைந்த காலத்தில் எந்த அளவிற்கு இந்திய ஒன்றிய அரசும்  மாநில அரசுகளும் கூடுதல் வரி வருவாயை பெற்றன?.2016-17ஆம் ஆண்டில் மட்டும் ஒன்றிய அரசுக்கு ௹.2.43 இலட்சம் கோடியும், மாநில அரசுகளுக்கு ௹.1.67 இலட்சம் கோடியும் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளன. நிதியாண்டு வாரியாக இந்திய ஒன்றிய அரசு மட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் இயந்திர எண்ணெய் ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி உயரிவின் மூலம் 2013-14ஆம் ஆண்டில் ௹.88,600 கோடி, 2014-15இல் ௹.1,05.653 கோடி, 2015-16இல் ௹.1,85,953 கோடி, 2016-17இல் ௹.2,53,254 கோடி, 2017-18இல் ௹.2,01,593 கோடி, 2018-19 நிதியாண்டின் நிதி நிலை மதிப்பீட்டின்படி ௹.2,57,850 கோடி! ஒட்டுமொத்தமாக ௹.10,92,903 கோடி! மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ள கூடுதல் வருவாய் இதில் சற்றொப்பு 75 விழுக்காடு என்று கணக்கிட்டால் மொத்தும் ௹.18 இலட்சம் கோடிகளாகும். இது மட்டுமின்றி, ஒரு 8 விழுக்காட்டை கூடுதல் வரியாக அறிவித்தார் அல்லவா நிதியமைச்சர் ஜெட்லி? அதில் இதுவரை இந்திய ஒன்றிய அரசுக்கு (சாலை அமைக்கும் திட்டத்திற்காக!) வந்துள்ளது ௹.1,13,000 கோடி! எந்த சாலைகள் திட்டத்திற்கு? சென்னை – சேலம் 8 வழிச்சாலை, மதுரை நத்தம் 4 வழிச்சாலை போன்றவற்றிற்காகவே!
இப்படிப்ட்ட சுமையேற்றல் மக்களிடையே ஆட்சியின் மீது கோவத்தையும், வெறுப்புணர்வையும் உருவாக்காதா? பின் ஏன் செய்கிறார்கள்? அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைக்கவே என்று நிதியமைச்சக அதிகாரி கூறியது செய்தியாக வந்துள்ளது. அதுமட்டுமல்ல, எரிபொருள் மீதான கூடுதல் வரியை (செஸ்) வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் இதையும் விட ஒரு திட்டம் இதில் உள்ளது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் சில்லரை விற்பனையை பெருமளவிற்கு இந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களே செய்து வருகின்றன. இதற்குமேல் பெட்ரோலியத்தில் (பெட்ரோல் என்ற சொல்லில் கச்சா, இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் வாயுக்களையும் குறிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது) முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள் சில்லரை விற்பனையிலும் அனுமதிக்க கொள்கை முடிவு எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக அராம்கோ எனும் செளதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் நம் நாட்டில் தனது கச்சாவைத் தருவித்து சுத்திகரிப்புச் செய்து சில்லரையிலும் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோல், ஹைட்ரோகார்பன் எடுப்பில் ஈடுபடும் வேதாந்தா போன்ற நிறுவனங்களும் தாங்கள் எடுக்கும் கச்சாவை இந்நாட்டிலேயே சுத்திகரிப்பு செய்து சில்லரை விற்பனை செய்யலாம். நன்னிலம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய மேலும் 650 ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடன் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுள்ளதை இவ்விடத்தில் நினைவுப்படுத்திக் கொள்க!
இதுமட்டுமல்ல, இந்தியாவை ஒரு எரிவாயு பொருளாதாரமாக (Gas Economy) மாற்றப்போகிறேன் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது ஒரு பெரும் விளம்பரமாக (ஆங்கில ஏடுகளில்) வந்துள்ளது. ஏன்? இங்கு எடுக்கும் இயற்கை எரிவாயுவை குழாய்களை பதித்து ஒரு பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தி, வீட்டுக்கு வீடு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கும் பெரும் திட்டம் உள்ளது. இந்நாட்டில் எடுக்கும் எண்ணெய் வளங்களை இங்கேயே சுத்திகரிப்பு செய்து, எரிபொருள் சில்லரை விற்பனை மற்றும் எரிவாயு இணைப்பு மூலம் பெரும் வணிக வாய்ப்பை வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்தித் தருகிறது. அது மட்டுமல்லாமல், காவிரிப் படுகை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் இலங்கைக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டம் கூட உள்ளதாக சொல்கிறார்கள், உறுதியாகவில்லை.
இப்படிப்பட்டத் திட்டங்களை நிறைவேற்றவே காவிரிப் படுகையில் குழாய் பதிப்பை வேகப்படுத்தி வருகிறது கெய்ல் நிறுவனம் என்பதை கருத்தில் கொள்க!
எனவே இந்திய ஒன்றிய அரசின் திட்டத்தில் 1. பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையை தனியார், அந்நிய முதலீடுகளுக்கு மாற்றுவது, 2. குழாய் பதித்து எரிவாயு கட்டமைப்பை ஏற்படுத்தி வீடுகளுக்கு இணைப்பை வழங்குவது, அண்டை நாடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்வது ஆகியன உள்ளது வெளிப்படை. இந்த வணிகமெல்லாம் இலாபகரமாக நடந்தால்தானே கார்ப்ரேட்டுகள் முதலீடு செய்வார்கள்? எனவே விலைகளை உயர்த்திக் கொண்டே போகிறார்கள்! அது ௹.100ஐ தொட்டால் அவர்களின் திட்டமெல்லாம் துலங்கிவிடும். அது சரி தேர்தலில் எப்படி ஜெயிப்பது? அது பெரிய வியூகம், சிந்திக்காமல் இருப்பார்களா? நாமும் துணிவுடம் சந்திப்போம்.
கா. அய்யநாதன், சென்னை, செப்டம்பர் 10, 2018.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...