சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில், ரயில்களுக்கு இடையேயான கால அளவை அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையெனில் மிகவும் தவறான நடவடிக்கையாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னையில் நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர், அதுவும் பொதுப்போக்குவரத்து இல்லாததுதான் காரணமாகவும் தெரிவித்திருந்தனர். இந்த பின்னணியில் மெட்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதிகம் கவலைகொள்ளச் செய்கிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் விமானநிலையம் இடையேயான இருமார்கத்திலும், இனிமேல் 14 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் ரயில் இயக்கப்படும் என்றும், அதுவும் மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய காலை மாலை நேரங்களிலும் (peak hours ) இதுதான் நிலமையாக இருக்கும் என்ற மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தற்சமயம் மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய நேரங்களில் (காலை- மாலை) ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்லியிருப்பது, தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தவில்லை என்று. ஏற்கனவே பலமுறை இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர், சென்னையில்தான் மெட்ரோரயில் சேவையின் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது என்றும், ரயில்கள் குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படவேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர். டெல்லி மெட்ரோ சேவையில் வசூலிக்கப்படும் தொகையைவிட குறைந்தபட்சம் 50% அதிகமாக சென்னை மெட்ரோவில் வசூலிக்கப்படுகிறது, கொல்கத்தா மெட்ரோவில் இன்னமும் கட்டணம் மிகக்குறைவு.
பொதுப்போக்குவரத்து துறையில் இயங்கும் நிறுவனங்கள் சேவை செய்யவே இயக்கப்படுகின்றன, அரசுகள் இதைப்போன்ற விஷயங்களில் முதலீடு செய்தால் மக்களின் பொது சுகாதார துறையில் (public health initiatives) முதலீடு செய்வதற்கான தேவைகள் குறையும், அதாவது மக்களின் உடல்நலம் பாதிப்படையாமல் இருக்கும்.
வளர்ந்தநாடு என்பது, ஏழைகளும் மத்தியதர வகுப்பினரும் காரை பயன்படுத்துவதுகிடையாது, பணக்காரர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவத்துவதுதான் என்கிறார் போகோட்டோ நகரத்தின் முன்னாள் நகரத்தந்தை. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment