உலகையேக் கவர்ந்த ஓர் உரை!
சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், அண்ணல் அம்பேத்கர் என ஒவ்வொருவரையும் வலதுசாரி பாசிச சக்திகள் கடத்திச் சென்று தங்களின் எதிர்மறை அரசியலுக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சித்தாந்தத் தூய்மை போற்றும் இடதுசாரி முற்போக்கு சனநாயக சக்திகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மேற்குறிப்பிட்டத் தலைவர்களையும், பிறரையும் பாசிஸ்டுகளிடம் கையளித்து விடுகிறோம்.
இது ஓர் ஆபத்தானப் போக்கு. மேற்குறிப்பிட்டத் தலைவர்களை மீட்டெடுக்க வேண்டியத் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைவர்களின் பெயர்களைச் சொன்னாலே சில அரைகுறைகள் "பார், பார், இந்தியத் தேசியம் பேசுகிறான் பார்!" என்று குதிக்கும். வேறு சில தத்துவ ஞானிகள் நமக்கு எந்த சித்தாந்தத் தெளிவும் இல்லை என்று தீர்ப்பளித்து நம்மை அரசியல் அரங்கிலிருந்தே அப்புறப்படுத்தி தீர்ப்பளிப்பார்கள்.
இவர்கள் 'ஒரு தலைவன், ஒரு தத்துவம், ஒரு புத்தகம்' எனும் ஏகத்துவத்தில் சிக்கித் தவிப்பவர்கள். கடிவாளம் பூட்டிய குதிரைகள். கிணற்றுத் தவளைகள். இன்றைய நுண்மமான பன்முக உலக வாழ்வுக்கு, எந்தெந்த முற்போக்கு முகாம்களிலிருந்து, என்னென்ன அறிவாயுதங்கள் கிடைக்கின்றனவோ, அனைத்தையும் பெற்றாக வேண்டும், அவற்றை அறிவுபூர்வமாக பயன்படுத்தியாக வேண்டும்.
பாசிசத்தை எதிர்ப்பதற்கு சுவாமி விவேகானந்தரை துணைக்கழைத்தே ஆக வேண்டும். சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்னால், உலக மதங்களின் நாடாளுமன்றம் எனும் ஒரு மாபெரும் மாநாடு சிகாகோ நகரில் நடந்தது. இதே நாளில் (செப்டம்பர் 11) அங்கே அவர் ஆற்றிய உரைதான் விவேகானந்தர் எனும் அபார ஆளுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
சுவாமி விவேகானந்தர் ஞானோதயம் பெற்ற கன்னியாகுமரி அருகே பிறந்து வளர்ந்ததால், விவேகானந்தர் இளவயது முதலே அறிமுகமான ஆளுமையாய் இருந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு சிகாகோ நகருக்குச் சென்றிருந்தபோது, அந்த மாநாடு நடந்த The Art Institute of Chicago எனும் கட்டிடத்தைக் கண்டுபிடித்து அங்கே சென்றேன். மாலை 5 மணி ஆகி, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்ட நிலையில், கட்டிடத்தை மூடிவிட்டார்கள். ஒரே ஒரு கறுப்பின பெண் காவல் அதிகாரி மட்டும் அங்கே நின்றிருந்தார்.
அவரிடம் போய், “நான் நோட்ர டேம் பல்கலைக்கழக மாணவன், இந்தியாவிலிருந்து வருகிறேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சுவாமி விவேகானந்தர், உலக மதங்களின் நாடாளுமன்றம், அதில் அவர் ஆற்றிய உரை பற்றியெல்லாம் சொல்லி, “அந்த மண்டபத்துக்குள் ஓரிரு நிமிடங்கள் கண்மூடி தியானம் செய்ய உதவுவீர்களா?” என்று அன்புடன் வேண்டினேன்.
எனது அதீத ஆர்வமோ, அல்லது அளவுகடந்த வேட்கையோ, எதுவோ அந்தப் பெண்மணியை அசைத்துவிட்டது. தனது அறைக்குள் சென்று சாவிகளை எடுத்துவந்து, ஒவ்வொரு வாசலாகத் திறந்து, என்னை சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய அறைக்குள் அழைத்துச் சென்றார். புல்லரித்துப் போன நான், அந்த மேடையருகே நின்று ஆசைதீர சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஒருசில நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்தேன்.
பெத்லகேமில் இயேசு நாதர் பிறந்த மாட்டுத்தொழுவம், டில்லியில் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம், மகத் எனுமூரில் அண்ணல் அம்பேத்கர் முதல் உரிமைப்போர் நடத்திய குளம், எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீடு, நியூ யார்க் நகரில் மால்கம் எக்ஸ் சுட்டுகொல்லப்பட்ட ஆடுபான் அரங்க மேடை என பல வரலாற்றுத் திருத்தலங்களில் தியானம் செய்யும் வாய்ப்பைப் பெற்றது போலவே, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய மேடையருகே தியானம் செய்ததும் அற்புதமானது.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல, இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் உலக மதங்களின் நாடாளுமன்றத்துக்குச் சென்று உரையாற்றுகிறார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா, தோழர்களே? ‘அனைத்துலக சகோதரத்துவம்’ என்று அகிலமே அதிர முழங்கிய அந்த வங்கம் தந்த தங்கத்தை வணங்குவோம்.
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
செப்டம்பர் 11, 2018.
No comments:
Post a Comment