Saturday, October 27, 2018

தோழர் மதிமாறனுடன் நிற்போம்!

திட்டமிட்டு கோமாளியாக்கப்படுகிறாரா மதிமாறன்?
.....................
மதிமாறனை ஆதரிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு. எவருடைய ஆதரவும் இல்லாமல் தன் சொந்த தர்க்க பலத்தால் நிற்கக் கூடியவர் அவர். நான் பெரிதும் மதிக்கும் திராவிட இயக்கபோராளி. அவர் கருத்துகளை ஏற்காதவர்கள்கூட அவர் வாத திறமையை ரசித்து கேட்பதை பார்த்திருக்கிறேன். அவருடன் தனிப்பட்ட முறையில்  எனக்கு  பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் அவரது பேச்சாற்றலின் ரசிகனாக இருந்திருக்கிறேன். பாரதி, ஜெயகாந்தனை அவர் விமர்சிக்கிற விதத்தில் எனக்கு மாற்று அபிப்ராயங்கள் உண்டு. ஆனால் அவரது விமர்சனம்  வெறுப்பிலிருந்து விளைந்த  வெற்று விமர்சனம் அல்ல. ஒரு கோட்பாட்டின் வழி நின்று எழுப்பும் விமர்சனங்கள் .நீங்கள் அதை ஒருவர் மீதுகொண்டு அபிமானத்தால் எதிர்கொள்ள முடியாது. அதற்கான தர்க்கம் உங்களிடம் இருக்க வேண்டும். உதாரணமாக காமராஜர் பற்றி மதிமாறன் வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திராவிடத்திற்கு எதிராக இங்கு திட்டமிட்டு உருவாக்கபட்ட புனித பிம்பங்களை மதிமாறன் விவாதத்திற்கு உட்படுத்துகிறார் என்பதுதான் எல்லோருக்கும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் காமராஜர் பற்றிய மதிமாறனின் கருத்து ஒரு ஆழமான அரசியல் விவாதத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் அவரை மோசமாக வசைபாடினார்கள்.

இரண்டு நாளாக நடந்துகொண்டிருக்கும் தோசை விவகாரத்திலொ மதிமாறன் ‘ டார்கெட் செய்யப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக பேசிய அனைத்துக்கும் கணக்கு தீர்க்க முற்படுகிறார்கள். இந்த ட்ரெண்டிங்கினுடைய நோக்கம் அவரை எப்படியாவது கோமாளியாக்க வேண்டும் என்பது. அப்படி கோமாளியாக்கிவிட்டால் அவர் பேசுகிற எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கிவிடலாம் அல்லவா. ?

இன்று அவரை கேலிப்பொருளாக விரும்பும் யாருக்கும் அவர்  யார் என்றே தெரியாது. மிக ஆழமான படிப்புக்கொண்ட திராவிட இயக்க சிந்தனையாளர் அவர். இசை. சினிமா குறித்து மிக கூர்மையான பார்வைகளைக்கொண்டவர். இளையராஜா பற்றிய அவரது  பார்வைகள் அவரது ஆழ்ந்த இசையறிவிற்கு உதாரணம். ஸ்ரீ தேவி மறைந்த அன்றுஅவரைப்பற்றி  நானும் மதிமாறனும் நியூஸ் 18 லைவ்வில் பேசியபோது  நடிப்புக் கலை பற்றிய மதிமாறனின் கூரிய நோக்கு என்னை வியக்கச் செய்தது. ஆனால் ஒருவரின் ஆளுமையை ஒரு தோசை உதாரணத்தை வைத்து காலி செய்ய முடியும் என்பது என்ன ஒரு வினோதமான சூழல்.

’உணவும் சாதியும்’ என்ற ஒரு திறந்த விவாதத்தை யாராவது மதிமாறனுடன் நிகழ்த்த தயாரா? நான் ஏற்பாடு  செய்கிறேன். எங்கள் யூ ட்யூப் சேனலில் அதை ஒளிபரப்புகிறோம். ஆனால் எதற்கு அவருக்கு எதிராக இவ்வளவு கூச்சல்? அவர் ஸ்டாலின் தான் ஒரே தளபதி என்று சொன்னதாலா? அவர்தான் முதலமைச்சராக வேண்டும் என்றதாலா? இதேதான் எனக்கு 2013 நான் திமுகவில் சேர்ந்தபோது நடந்தது. அப்போது நான் மிகக்கடுமையாக இணையத்தில் தாக்கபட்டேன். என் பெயரில் போலி முகநூல் கணக்குகள் துவங்கப்பட்டன. என்னை கிண்டல் செய்யும் பக்கங்கள்  நடத்தபட்டன. நான் எதை எழுதினாலும் தாக்கினார்கள். என் புகைப்படங்களை மார்ஃபிங்க் செய்தார்கள். என்னை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கபட்டன. என்னை ஒருபுறம் கோமாளியாகவும் இன்னொருபுறம் வில்லனாகவும் கட்டமைத்தார்கள். இந்த வேலையை செய்தவர்களுக்கு யார் காசு கொடுத்தார்கள் என்பதுவரை எனக்குத் தெரியும். என்னைப்பற்றி எதுவுமே தெரியாத இணைய வாசிகளிடம் என்னைக்குறித்த முற்றிலுமான எதிர்மறை பிம்பம் உருவாக்குவதுதான் அவர்கள் நோக்கம். இன்றளவும் அந்த வேலை நடக்கிறது. நான் பேசுகிற யூ ட்யூப் காணொளிகளுக்கு கீழே போடப்படும் பதிவுகளைப்போய் பாருங்கள். போலி கணக்குகள் வழியே எவ்வளவு வசவுகள் கொட்டப்படுகின்றன என்று. சாதிய மதவாத உணர்வுகொண்ட திராவிட எதிர்ப்பு சக்திகள் இதை அமைப்பு ரீதியாகவே திட்டமிட்டு அரங்கேற்றிவருகின்றன. டான் அசோக் , மனுஷ்ய புத்திரன், மதிமாறன் என இதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இணையப்பெருவெளியில் கருத்தியல் தளத்தில் திராவிடத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் காலத்தில் அதை சிதைப்பதற்கான தந்திரம் இது. இணையத்தில் காசு செலவழித்தால் யாருக்கு எதிராகவும் எதையும் ட்ரெண்டிங் ஆக்கலாம்.

இறுதியாக,  மதிமாறனின் தோசை விவகாரம் நேர்மையாக விவாதிக்கப்படவேண்டியதே தவிர கும்பலாக சேர்ந்துகொண்டு கூச்சல்போடும் காரியமல்ல. சாதி மட்டுமல்ல, வர்க்கம், பாலினம் எல்லாமே உணவில் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ஆனால் சிறுவயதில் எங்களுக்கு வீட்டில் மெலிதான முறுகலான தோசை கிடைக்கும். ஆனால் வீட்டு வேலைகாரர்களுக்கு தடிமனான தோசைதான் கிடைக்கும். இதைவிட அம்மா எங்களுக்கு மெலிதான முறுகல் தோசை வார்த்துக்கொடுத்துவிட்டு தனக்கு கனமான தோசை ஊற்றிக்கொள்வார். இப்படி ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

திராவிட அரக்கர்களை போரிட்டு வெல்ல முடியாது என்பதால் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிடலாம் என்று பார்க்கிறார்கள். அதுதான் இந்த தோசை விவகாரம். மதிமாறனின் இமேஜை காலிசெய்தால் யாருக்கு அது உபயோகம் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் உருவாக்கப்பட்ட இந்த சர்ச்சையின் பின்புலம் புரியும்

- மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...