தீபா வலி ....!
------------
- தாகம் செங்குட்டுவன்
ஊரெங்கும் கேட்கிறது
வெடிச்சத்தம் ...
நான் உள்ளுக்குள்ளே
வெடிக்கிறேன் சத்தமின்றி
ஆடையின்றி நிற்கிறேன் ...
நாளை என் மகளுக்கு வேண்டுமே புத்தாடை
கற்பனை நரகாசுரன் வதம்
தீபாவளி கதை....
நிதம் வதம் செய்யப்படுகிறேன்-
வரிசையில் நிற்கிறார்கள் திருமால்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால்
தானாகவே போகிறதாம் பதவி...
திருந்தி வாழ நினைத்தாலும்
வட்டமிடுகிறதே விபச்சாரிப் பட்டம்
என்னை விட்டு விடுங்கள்
வயதாகிறது என்றழுதேன்...
அறுபது வயது வாடிக்கையாளருக்கு
நான்தான் வேண்டுமாம்
எத்தனைக் காதல் எத்தனை
திருமணம் ?
அத்தனையும் முதலிரவோடு முடிந்தன
கவலையில்லை உழைக்கிறேன் ....
என் மகளுக்காக தாய்க்காக தங்கைக்காக
தந்தை வழிச் சமூகம் முகம் புதைத்து
என்னுள் எதையோ தேட ....
விட்டத்தைப் பார்த்தே எக்காளமாய்
சிரிக்கிறேன்-
நான் தாய் வழிச்சமூகம்!!!
No comments:
Post a Comment