Wednesday, December 19, 2018

சுந்தர்ராஜன்- பூவுலகின் நண்பர்கள்

டோடோ பறவையும் கல்வறியா மேஜர் மரமும்:-

சூழல் தொகுதிகளாக உள்ள மலைகள், ஆறுகள், காடுகள் போன்றவற்றை தனித்தனிக் கூறுகளாக பார்க்கக்கூடிய பார்வையை ஏற்படுத்திவருகிறது தற்கால நவீன அறிவியல்.

ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை "இயற்கையின் அறிவியலும்" பூர்வகுடி மக்களும் உணர்த்தி வருகிறார்கள்.

இவ்வுலகத்திலுள்ள உயிர்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை பல்வேறு சமிக்ஞைகளின்  மூலமாக நமக்கு உணர்த்திவருகிறது, நாம்தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

காகம் இல்லையென்றால் பல மரங்கள் முளைக்காமல் போய்விடும், விதைப்பரவலில் பறவைகளின் பங்கு மிக முக்கியமானது.

அப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒரு விஷயத்தை பார்க்கலாம்.

1960களில் "மொரிசியஸ் தீவுகளில்" கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது, அந்த தீவுகளில் எந்த வகையான மரங்கள் உள்ளன, எத்தனை மரங்கள் உள்ளன என்பது குறித்தான கணக்கெடுப்பு. கணக்கெடுப்பின் முடிவில் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது, கல்வறியா மேஜர் என்கிற மரம் வெறும் 18 மரங்கள்தான் அந்த தீவுகள் முழுவதும் இருந்திருக்கின்றன, அதுவும் அனைத்து மரங்களும் 200-250 வருடங்கள் பழமையான மரங்கள்.

அந்தநாட்டிலுள்ள தாவரவியலாளர்களுக்கு ஒரு வினா எழுகிறது, ஏன் இந்த "கல்வறியா மேஜர்" மரம் கடந்த 200 ஆண்டுகளில் புதிதாக முளைக்கவில்லை என்று. அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள், அப்போதுதான் அவர்களுக்கு "டோடோ" என்கிற பறவையை பற்றி தெரியவருகிறது. சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டில் இந்த பறவைக்கு முக்கிய பங்குள்ளது.

கல்வறியா மேஜர் மரத்தின் பழங்கள் கடினமான தோல் கொண்டவை, அதனால் எந்த பறவையாலும் மரத்தின் மீதமர்ந்து பழங்களை கொத்தி சாப்பிடமுடியாது. டோடோ நம் ஊர் வாத்தைப் போன்றது, டோடோவால் பறக்க இயலாது. அந்த பறவைகள் பொதுவாக கல்வறியா மேஜர் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருக்கும். கல்வறியா மேஜர் மரத்தின் பழங்கள் கனிந்து கீழே விழும்போது, டோடோ பறவைகள் அவற்றை சாப்பிடும், அந்த பழங்கள், பறவைகளின் வயிற்றுக்குள் சென்று செரிமானித்து சில சுரப்பிகள் சேர்ந்து எச்சமாக வெளிவரும், அந்த எச்சத்திலிருந்துதான் மறுபடியும் கல்வறியா மேஜர் மரங்கள் முளைக்கும், இல்லையெனில் அவை முளைக்காது.

நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றியது போல், மொரிசியஸ் தீவுகளை பிரெஞ்சு நாட்டினரும், டச்சு நாட்டினரும் கைப்பற்றினர். அவர்களுக்கு டோடோ பறவைகளை பாத்தவுடன் அளவற்ற மகிழ்ச்சியானது. அவற்றை பிடித்து பிரியாணி சமைத்து, சூப் வைத்து, வறுத்து தாங்களும் சாப்பிட்டார்கள், தங்களின் செல்ல பிராணிகளுக்கும் விருந்துவைத்தார்கள். அடுத்த 150 ஆண்டுகளில் அந்த தீவுகளில் இருந்த அனைத்து டோடோ பறவைகளையும் அழித்துவிட்டார்கள். டோடோ பறவைகள் இல்லாத காரணத்தால் கல்வறியா மேஜர் மரங்களும் முளைக்காமல் போயின. டோடோ பறவைகளின் மரணம் கல்வறியா மேஜர் மரங்களின் மரணத்தில் வந்து முடிந்தது. 1960களுக்கு பிறகான காலகட்டத்தில் டோடோ பறவைகளை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் எதுவுமே இதுவரை சாத்தியப்படவில்லை.

ஒரு உயிரின் மரணம் எப்படி சங்கிலித்தொடர் போல் மற்ற உயிர்களை பாதிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...