பிரபஞ்சனுடன் ஒரு நாள்!
“எங்க இருக்க பிரபஞ்சனை பார்க்கப் போகணும் வா” என்றார் ஆசிரியர் திருமாவேலன்.
நானும் அவரும் மதியத்திற்கு மேல் கீழிறங்கிச் செல்லும் பகல் பொழுதில் புதுச்சேரி சென்றோம்.
“நான் ஒரு வேலைல சேரணும்ணு அவர் நினைச்சார். குமுதம் , குங்குமம்ணு போன் பண்ணி திருமாவுக்கு வேலை வேண்டும். சும்மா இருக்கார்” என்று தொடர்ந்து பேசினார். எனக்கும் அடிக்கடி போன் பண்ணி என்ன திருமா உங்களுக்கு ஓகே தானே?” என்பார். என்று பிரபஞ்சனுடன் பல விதமான நினைவுகளை பகிர்ந்தபடியே வந்தார் திருமாவேலன்.
இருட்டிய பின்னர் புதுச்சேரியில் இருந்து மணக்குள விநாயகர் மருத்துவமனை நோக்கி ஒரு மணி நேரப் பயணம். மருத்துவமனைக்கே உண்டான ஒரு வாசமும் அங்கு இல்லை. ஏராளமான ஏழைகள், பெரும் செல்வந்தவர்கள் என பலதரப்பினரும் யாரோ ஒருவருக்காக விரவிக்கிடந்தார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் சென்று பார்த்த போது பிரபஞ்சன் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. கண்களை அகல விரித்தபடி மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது கைகள் அமைதியாக இருக்க வில்லை.ஒரு துடிப்பும், வாழ்வின் மீதான பெரும் வேட்கையும் சுகவீனமுற்றிருந்த அந்த மனிதரிடம் இருந்தது.
“வாங்க திருமாவேலன்”
அது மட்டும்தான் ஆக்சிஜன் குழாய்க்கு அப்பால் கேட்டது. வேறு ஏதோ பேச நினைக்கிறார் முடியவில்லை. “நான் வந்திடுவேன் அந்த புதுச்சேரி வரலாறு எழுதி முடிக்கணும்” என்பது போல எதையோ சொல்ல நினைக்கிறார். பி.என்.எஸ் பாண்டியன் அவரிடம் குனிந்து பேசுகிறார். பதிலுக்கு அவரால் குறைவாகக் கூட பேச முடியவில்லை.
கல்லூரி காலத்தில் இசை பயின்றவர் பிரபஞ்சன் அதனாலோ என்னவோ, எழுதிக் கொண்டிருந்த கைகள் இடைவிடாமல் செய்கை செய்து கொண்டே இருந்தது.
பிரபஞ்சனின் இறுதி மாதங்களில் பத்திரிகையாளர் பி.என்.எஸ் பாண்டியன் ஒரு மகன் போல இருந்து அவரை கவனித்துக் கொண்டார். மணக்குள விநாயகர் மருத்துவமனை நிர்வாக அவரது ஒட்டு மொத்த சிகிச்சைச் செலவுகளையும் ஒரு எழுத்தாளனுக்குச் செய்யும் கடமையாக எண்ணி இலவசமாகச் செய்தது.
யாருக்கும் தொந்தரவில்லாமல் மரித்து விட விரும்பிய பிரபஞ்சனின் மரணம் மனதில் தொந்தரவு செய்கிறது. நேசத்திற்குரியவர்களை இழப்பது பேரிழப்புதான்!
No comments:
Post a Comment