Friday, December 21, 2018

வழக்கறிஞர் அருள்மொழி

பிரபஞ்சன் என்ற விடுதலைப்பறவை..

தீவிர எழுத்து பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் சிரமப்பட்டு படித்தது பிரபஞ்சனின் முட்டை என்ற நாடகத்தை. அந்த இரண்டு சொற்களையும் யாருமே பிரித்து சொல்ல மாட்டார்கள். அதனால் நாடகத்தின் பெயரே பிரபஞ்சனின் முட்டை என்றுதான் கல்லூரிப்படிப்பை முடிக்கும்வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் வார இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகளைப் படித்தபோதும் இந்தப் பிரபஞ்சன்தான் அந்த முட்டை நாடகத்தை எழுதியவர் என்று தெரியாது.

அவரது “விட்டு விடுதலையாகி “ என்ற சிறுகதைத் தொகுப்பை படித்தபின்பு அவருடன் ஓரளவு பழக்கம் ஏற்பட்டது. அப்போது தனது இடதுசாரி எழுத்துகள் பற்றியும் குமுதம் பத்திரிகையில் வேலை பார்த்து பின் வேலையை விட்டதைப் பற்றியும் விவரித்தார். அப்போதுதான் அவரது படைப்புதான் முட்டை நாடகம் என்று புரிந்தது. அதை அவர் எதிர் கொண்ட முறை நகைச்சுவை உணர்வின் உச்சம்.

அந்த சிறுகதைத்தொகுதியில் ஒரு கதையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியை கொடைக்கானலுக்கு வருகிறாயா என்று பாலியல் வன்முறைக்கு வித்திடும் பேராசிரியரைப
பற்றி எழுதியிருந்தார். அந்தக்கால கட்டத்தில் யாருமே அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.

வானம்பாடிகள் கவிஞர் என்று அடையாளம் பெற்ற பின்பும் தனது கர்நாடக சங்கீத ஈடுபாடு பார்ப்பனப் அழகியல் குறித்த அவரது ரசனை மோகமுள் வழிக் கதைகளை வியந்தது , ஆகியவை இடது சாரி விமர்சகர்களால் கறாராக கண்டிக்கப்பட்டன.

அதேபோல் “ என்னைப் பார்த்து இன்னொருவர் டேய் என்று அழைக்க முடியாதபடி என் மரியாதையை காப்பாற்றியவர பெரியார் அல்லவா “ என்று கேட்ட பிரபஞ்சன் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தலைப்பு “ஈரோடு தமிழர் உயிரோடு”

அவரது எழுத்தை விட சுவையானது அவரது பேச்சு. புன் சிரிப்புடன் ஒரு கதை சொல்லுவார்.. நமக்கு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிடும்.

இட்லரின் நாஜி ஆட்சியில்
இருந்த ராணுவ அமைப்புப் பற்றியும் தன் மேலதிகாரியின் கவனம் திசைமாறும்படி ஒரு தும்மல் போட்டுவிட்டு அச்சத்தில் அவர் பின்னாலேயே செல்லும் ஒரு அப்பாவி ராணுவ வீரனைப் பற்றியும் அவர் பேசுவதை ஒருமுறை கேட்டவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அந்தக் கதையை சொல்லி இருப்பார்கள்.

பிரபஞ்சன் அவர்கள் மறைய மாட்டார்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...