Saturday, December 8, 2018

நலங்கிள்ளி

தமிழிய மண்ணில் தன்னைத் தகவமைத்து நிலைபெற்ற ஜெயலலிதா!

--------------------------------------

ஜெயலலிதா குறித்து நான் என் எழுத்துக்களில் இது வரை கடுமையாக விமர்சித்தே வந்துள்ளேன். குறிப்பாகச் சமச்சீர்க் கல்விக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்ட போது, திமுகவின் முயற்சியைப் பாராட்டியும், ஜெயலலிதா நடவடிக்கையில் உள்ள சதிகளை வெளிப்படுத்தியும் கீற்று இணையத்தளத்தில் பெருங்கட்டுரை வரைந்தேன். பின்னர் அது நூலானது.

ஜெயலலிதா இப்போது மறைந்து விட்ட நிலையில், அவர் எம்ஜிஆரால் அரசியலில் நுழைக்கப்பட்டதிலிருந்து அவரிடம் ஏற்பட்டு வந்துள்ள வளர்ச்சி உள்ளபடியே வியப்புக்குரியது. தமிழ்த் தேசிய நோக்கில் இதனை நான் சொல்கிறேன்.

ஜெயலலிதா பிறப்பால் பார்ப்பனர். திரை வாழ்க்கையில் அவருடைய நட்பு வட்டத்தில் பெரும்பாலும் சோ போன்ற பார்ப்பனர்களும், அல்லது பார்ப்பனியச் சிந்தனை கொண்டவர்களே இருந்தனர். எனவே இந்துத்துவமே அவரது சிந்தனையின் அடித்தளமாக இருந்தது. அந்த இந்துத்துவ மனநிலையில்தான் அவர் அதிமுகவில் நுழைந்தார்.

ஜெயலலிதா மண்டல் குழு பரிந்துரையை வி. பி. சிங் நிறைவேற்றிய போது அதனை எதிர்த்தார். இதுதான் அன்றைய ஜெயலலிதாவின் அரசியல். ஆனால் அதே ஜெயலலிதாதான் தமிழகத்தில் 50 விழுக்காட்டுக்கு மேலான இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவதற்குச்  சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கி. வீரமணியால் 'சமூகநீதி காத்த வீராங்கனை' பட்டம் பெற்றார்.  தான் வளர்ந்து வந்த குட்டையில் தேங்கி விடாமல் தமிழக அரசியல் சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள ஜெயலலிதாவின் முதல் முயற்சியிது.

ஜெயலலிதா காவிரித் தீர்ப்பாயம் அமைத்த வி. பி. சிங்கின் முடிவை எதிர்த்தார். ஆனால் அதே ஜெயலலிதாதான் காவிரி அறிஞர்கள் பலரின் ஆலோசனையைப் பெற்று காவிரி உரிமை நிலைநாட்டுவதில் இறக்கும் வரை உறுதியாக இருந்தார். கர்நாடகத்துடன் பேசித் தீர்க்க வேண்டுமெனக் கலைஞர், ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் வலியுறுத்தினாலும், அதற்குச் செவிசாய்க்காமல், காவிரியில் தமிழர்களுக்குள்ள தன்மான உரிமை பக்கம் நின்றார்.

ஜெயலலிதா வெகு காலம் பல முற்போக்கு அமைப்புகளும் வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் அன்று முற்றி வந்த லாட்டரி சீட்டு எனும் சூதாட்டப் பண்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஜெயலலிதா ஜெயேந்திரரைக் கைது செய்தது அவரது அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனை. அந்தக் கைதுக்குப் பிறகு அடுத்து வந்த திமுக ஆட்சி அந்த வழக்கை நீர்த்துப் போக வைக்கும் செயலில் ஈடுபட்டதும், அதைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியிலும் அதே நிலை தொடர்ந்து ஜெயேந்திரர் விடுதலை பெற்று வெளியேறியது கெடுவாய்ப்பே. ஆனாலும் ஜெயலலிதா செய்த அந்தக் கைது நடவடிக்கையால், ஜெயேந்திரரின் மதிப்பு தமிழகத்தில் பாதாளத்துக்குச் சென்றது. ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றால் அதிகாலை வேளையில் தவறாமல் இடம்பெற்ற ஜெயேந்திரரின் முகம் காணாமல் போனது. அது பார்ப்பனியத்துக்குப் பேரிடியாக வந்து விழுந்தது.

ஜெயலலிதா அன்றைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கடுமையாக இழிவுபடுத்தி வந்தார். இந்த நிலைப்பாடு அவர் 2009 ஈழப் பேரவலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுகூட, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் எனப் பேசி தமிழுணர்வாளர்கள் உள்ளத்தில் ஈட்டியைப் பாய்ச்சினார். பின்னர் திமுக தொடர்ந்து காங்கிரசுடனே ஒட்டிக் கொண்டு ஈழ இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்து வரலாற்றுப் பழியைச் சுமந்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு தலைகீழானது. அதுவரை தீவிரத் தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையாக மட்டுமே இருந்து வந்த பல கோரிக்கைகளைச் சட்டமன்றத் தீர்மானங்களாக்கி அசத்தினார்.

ஜெயலலிதா முதல் நகர்வாக, இலங்கைக் கால்பந்து ஆட்டக்காரர்களுக்குத் தமிழகத்தில் இடமில்லை என அறிவித்தார். இது "இலங்கையைப் புறக்கணிப்போம்" (பாய்காட் சிறீலங்கா) என்ற உலகத் தமிழர்களின் கோரிக்கைக்கு உயிர் கொடுப்பதாய் அமைந்தது. அப்போது இதன் அரசியல் முக்கியத்துவம் கூட புரியாது கலைஞர் எதிர்த்தார். விளையாட்டில் அரசியலைப் புகுத்தக் கூடாது என்றார். பல இந்தியவாத இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஜெயலலிதாவின் நடவடிக்கையை இனவாதம் எனக் கடுமையாக எதிர்த்தனர். உலக வரலாற்றில் புறக்கணிப்பு அரசியலே விடுதலைக்குத் துணை புரிந்துள்ளது எனப் பல சான்றுகளுடன் கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது? என்ற தலைப்பில் கீற்று இணையத் தளத்தில் கட்டுரை எழுதினேன்.  தமிழகத்தின் அரசியல் நாடித் துடிப்பைச் சரியாக உணர்ந்து தன்னைத் தகவமைத்துக் கொண்டு முன்னேறிய ஜெயலலிதாவின் வளர்ச்சியில் மிக முக்கியத் திருப்புமுனை இது.

ஜெயலலிதா இலங்கைப் புறக்கணிப்பு அரசியலை அடுத்தடுத்துக் கூர்மைப்படுத்தினார். ஐபிஎல் கிரிக்கெட் சென்னையில் நடக்கும் போது அதில் இலங்கை கிரிக்கெட்டர்களோ, இலங்கை நடுவர்களோ (அம்பயர்களோ) கலந்து கொள்ளக் கூடாது என அறிவித்ததுடன், அதனை இன்று வரை நிறைவேற்றியும் காட்டினார். இன்னும் ஒரு படி மேலே போய், தமிழீழ மக்களிடம் அவர்கள் விடுதலைக்கான ஒரு பொதுவாக்கெடுப்பு நடைபெறும் வரை இந்தப் புறக்கணிப்பு அரசியல், விளையாட்டில் மட்டுமல்லாது, பொருளியல், சுற்றுலா, கலை என அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்றும், அது வரை இலங்கையை இந்தியா நட்பு நாடு எனக் கூறக் கூடாது என்றும் சட்டமன்றத் தீர்மானம் இயற்றினார்.

ஜெயலலிதா ராஜீவ் காந்தி படுகொலையை மூலதனமாக வைத்துதான் 1991 முதல் தமிழீழ எதிர்ப்பு அரசியலைச் செய்து வந்தார். அந்த அடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறைப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும் எனப் பேசி வந்தார். கலைஞர் நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு வழங்கிய போது, அதனைக்கூட பொறுக்க மாட்டாமல், கலைஞரைக் கடுமையாக எதிர்த்தார். சோனியா பதி பக்தி இல்லாதவர் எனக் கூறுமளவுக்குச் சென்றார். ஆனால் பின்னர் அதே சோனியா காந்தி 3 தமிழர்களைத் தூக்கிலிட முடிவெடுத்த போது, இதில் தமிழக அரசு செய்ய ஒன்றுமில்லை எனக் கைவிரித்தார். ஆனால் அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூன்று வழக்குரைஞர்களின் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டம், செங்கொடியின் தீக்குளிப்பு ஆகிய போராட்டங்களின் பின்னணி கொடுத்த அழுத்தத்தில் தன் கருத்தை அடியோடு மாற்றிக் கொண்டு, மூவரின் தண்டனைக் குறைப்புக்கு ஆதரவாகச் சட்டமன்றத் தீர்மானம் இயற்றினார். பின்னர் எழுவர் விடுதலையில், மத்திய அரசுக்கு 3 நாள் கெடு கொடுத்தது, இந்தியத்துக்கு தமிழர்களின் இறையாண்மையை உணர்த்துவதாக அமைந்தது. இந்திய வரலாற்றில் எந்த மாநில முதலமைச்சரேனும் மத்திய தில்லி அரசுக்கு இப்படி நாள் குறித்துக் கெடு விதித்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடு, தமிழ்த் தேசியத்தின் தன்மானத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது எனத் தோழர் தியாகு பாராட்டியதை இங்கு நினைவுகூரலாம். எனவேதான் ஜெயலலிதாவின் இந்த விடுதலை நடவடிக்கையை அர்னாப் உள்ளிட்ட இந்திவெறி ஊடகர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

ஜெயலலிதா மனத்தின் ஆழத்தில் உள்ளபடியே புதைந்திருப்பது என்ன? என்ற ஆராய்ச்சி பலருக்கும் இருக்கலாம். அவரது நடவடிக்கைகளுக்குத் தாராளமாக உள்நோக்கம் கற்பிக்கலாம். ஆனால் அவை நமக்கு முக்கியமல்ல. நான் தொடக்கத்திலேயே கூறியது போல், அவரது அரசியல் தொடக்கம் என்பதே தமிழர் நலன் புறக்கணிப்பாக இருந்தாலும், ஜெயலலிதா நாட்பட நாட்பட, தமிழ்த் தேசிய அரசியலின் நாடித் துடிப்பறிந்து, தன்னைத் தகவமைத்துக் கொண்டு முன்னேறி தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அந்த அடிப்படையில்தான் இந்தியக் கட்சிகளின் தமிழக அரசியல் செல்வாக்கு செல்லாக்காசு எனத் தேர்தல்களிலும் மெய்ப்பித்துக் காட்டினார்.

ஜெயலலிதா முன்னெடுத்த வெறும் சட்ட நிலைப்பாட்டுக்கா இந்தப் பாராட்டு என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வி மிகவும் நியாயமானதே. வெறும் சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றிய ஜெயலலிதா அதனை மக்கள் கோரிக்கையாக்கி தமிழர்களின் போராட்ட அரசியலை முன்னெடுக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜெயலலிதாவின் இந்தச் சட்ட நிலைப்பாடுகளைக் கெட்டியாகப் பற்றி, அக்கோரிக்கைகளைத் தமிழர்களிடம் பற்றிப் படரச் செய்வதற்குத் தமிழ்த் தேசிய அரசியலர்கள் பெரும் ஆற்றறலாகத் தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே வரலாற்றுத் துயரம்.

ஜெயலலிதா மீதான பாராட்டுரை அல்ல இது. ஒருவர் பார்ப்பனராக, இந்துத்துவராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு சார்ந்த தமிழர்களின் கட்சிக்கு அவர் தலைமை தாங்க வேண்டுமானால், அவர் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் அக்கறை செலுத்தாமல் தமிழர்களின் அன்பைப் பெற முடியாது என்பதே ஜெயலலிதாவின் வளர்ச்சி நமக்கு உணர்த்துகிறது. தமிழகத்தின் நீண்ட நெடிய  சமூகநீதி அடிப்படையிலான தமிழின உணர்வைப் புறக்கணித்து விட்டு, எவரும் தமிழ் மண்ணில் கால் பதித்து விட முடியாது என்பதையே ஜெயலலிதாவின் வளர்ச்சி நமக்கு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் உணர்த்துகிறது.

(ஜெயலலிதா மறைவை ஒட்டி ஈராண்டு முன்பு முகநூலில் எழுதிய பதிவு)

- நலங்கிள்ளி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...