ஏழை மாணவர்களின்
கல்வி உரிமையைப் பறித்த மோடி !
------------------------------------------------------
நேற்று நாடாளுமன்றத்தில், ரஃபேல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டன. இரண்டாவது முறையும் ராகுல் காந்தி கண்ணடித்தார் போன்ற சிறப்புச்செய்தியையும் தற்போதுவரை வெளியிட்டு வருகின்றன.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புவரை கட்டாயத்தேர்ச்சி முறையை நேற்று நாடாளுமன்றம் சத்தமே இல்லாமல் ரத்த செய்துள்ளது. ஒரு மாணவன் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தோல்வி அடைய யார் காரணம்? இந்தச் சமூகமா? கல்வி முறையா? ஆசிரியரின் அலட்சியமா?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்களின் பட்டியலைப் பார்த்தால் உண்மை நிலைத் தெரியும். 90 % ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களே அதில் இருப்பர்.
வசதியானவர்களின் பிள்ளைகள் மட்டும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பதுதான் நீட் தேர்வின் நோக்கம். நீட் என்பது உண்மையான தகுதி தேர்வென்றால் அதற்கானப் பயிற்சி வகுப்பைப் பள்ளிகள்தான் இலவசமாகவோ, குறைந்தக்கட்டணத்திலோ நடத்த வேண்டும் என்று மோடி அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும். ஆனால், ஆகாஷ்- பிட்ஜி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொண்டு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தப் பள்ளியும் நீட் பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
ஒரு ஏழை நடுத்தர மாணவன் இனி மருத்துவராக முடியாது என்பதை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நீட் தேர்வில் வென்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் என்பதே அந்த அதிர்ச்சி அறிக்கை.
மத்திய அரசின் தவறான கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டது. இதோ, நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஏழை மாணவர்கள் இனி 5ஆம் வகுப்பைக்கூட தாண்ட முடியாத நிலையை உருவாக்கி விட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை ஒரே ஒரு கட்சிக்கூட எதிர்க்கவில்லை. நாடாளுமன்றத்தின் எத்தனை எம்.பி பள்ளிக்கல்வியை முடித்திருப்பார்கள்? இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
மீண்டும் முதல் கேள்வியை எழுப்புகிறேன். ஒரு இந்திய மாணவன் 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் தோல்வி அடைய யார் காரணம்? உலகில் கல்வியில் தலைசிறந்து நிற்கும் நாடுகள் இந்த முறையை பின்பற்றுகின்றனவா? கல்வியாளர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஒட்டுமொத்த இந்திய மக்களை அழித்த மோடி, தன் ஆட்சியின் கடைசி நாள்களில் ஏழை மாணவர்களின் , அடித்தட்டு சமூக மாணவர்களின் கல்விக்கனவைத் தகர்த்துள்ளார்.
இந்த சட்டத்தின் ஒரே நோக்கம்...குலக் கல்வி முறையை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும் என்பதே !
# தாகம் இதழுக்காக வெ. மாதவி
No comments:
Post a Comment