Friday, October 26, 2018

சித்ரா லட்சுமணன்

நெஞ்சம் மறப்பதில்லை 119

கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்

-சித்ரா லட்சுமணன்

அமெரிக்காவிற்கு சென்ற  கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில்  என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை  என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான்  இருந்தது. கவிஞருக்கு  மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார்.  அந்த  முயற்சிகள் பலனளிக்காத நிலையில்  சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி  நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட   மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர்   சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.
 
கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின்  மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி  ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.

கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா  பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற  செய்தி  அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது.  உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்  "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம்.   நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால்  அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால்  நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று  கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு  விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 

உடனடியாக எம்.  ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது.  எம் எஸ் விஸ்வநாதனின்  குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு  அனுப்பி கண்ணதாசனை   அந்தக் குரலை கேட்கச் செய்யலாம்  என்று முடிவெடுத்த  எம்.  ஜி.  ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள்.  அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம்.  உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும்  வாய்ப்பிருக்கிறது"  என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.
  
ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது

1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல்  1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.

"கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும்  "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த  அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய  "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே  அமைந்தது. 

அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல்  சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.  ஜி.  ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.  

கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு  ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .

தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர்   கண்ணதாசன்

"நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு.  தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.

நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.

தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள  முடியாமல்
"கண்ணதாசா ! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
"அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னை மட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்

"எத்தனைக் கவிஞர் நாங்கள்
இருந்தாலும் கவிஞன் என்றால்
அத்தனை பேருக்குள்ளும்
அவனையே குறிக்கும் என்று
முத்தமிழ்க் கவிதை  நாட்டின்
முடிசூடிக் கொண்டான்"
என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்

ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும்  இருந்தார்  கவிஞர் கண்ணதாசன்

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்.

-தொடரும்

Tuesday, October 23, 2018

தாகம் வாசகர்களுக்கு.....

"தாகம்" இதழின்  25000 முகநூல் வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோள். கடந்தப் பல ஆண்டுகளாக நிலவும் கடும் பொருளாதாரச்சரிவின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. பலத் தொழிலதிபர்கள் காணாமல்போய்விட்டனர். லாப நோக்கம்   கொண்டத் தொழில்களே முடங்கும் போது, சமூக அக்கறை கொண்ட அச்சு ஊடகங்கள் நிலை என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை.

பாரம்பரியம் மிக்க அச்சு இதழ்களே விற்பனையில் படுபாதாளத்தில் வீழ்ந்துக்கிடக்கின்றன. இணைய வழி (you tube , Facebook) காட்சி ஊடகங்களாக அவை மாறி வருகின்றன. பாரம்பரிய நிறுவனங்களின் நிலையே அதுவென்றால் , "தாகம் " போன்ற இதழ்களின் நிலை .....?

1992 ஆம் ஆண்டு அனைத்துக்கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்ட "தாகம்"  28 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது. மதவாத பாசிச சக்திகளுக்கு எதிராகவே உங்கள் "தாகம் " எப்போதும் நின்று இருக்கிறது.

மிகத்தீவிர உறுப்பினர் சேர்க்கையில் "தாகம் " களம் கண்டு வருகிறது. " தாகம் " இதழின் உயிர் மூச்சே அதன் உறுப்பினர்களான சந்தாதாரர்கள்தான்.

இன்றே உறுப்பினர் கட்டணம் செலுத்தி
" தாகம் " இதழுக்கு ஆதரவு தாருங்கள் தோழர்களே.

- தமிழன்புடன்
'தாகம் ' செங்குட்டுவன்

# உறுப்பினர் கட்டணம் மற்றும் வங்கிக்கணக்கு எண் விளம்பரத்தில் உள்ளது.

Thursday, October 18, 2018

சாவித்திரி கண்ணன்

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்!
ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது.
இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது!
உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்...ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்!

இன்று ஒரே ஒரு உணவுப் பொருளில் உள்ள மருத்துவ குணத்தைக்கூட மருத்துவ கருவியின்றி நம்மால் அறிய முடியாது.
உண்ணாமலும், உறங்காமலும் உயிர்வாழும் கலையை வள்ளாலாரால் எப்படி கண்டடைந்து அனுசரிக்க முடிந்ததது! பல நூற்றுக்கணக்கான மூலிகை செடிகளின் மருத்துவ பலன்களையும் அவற்றை உண்ணும் முறையையும் அவர் எப்படி எழுதிவைத்தார். எந்த மருத்துவரிடமும் அவர் பாடம் பயின்றதில்லை! அவருக்கு மட்டுமல்ல,ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு  நம் மரபில் இது கைவரப்பட்டதே!

சுதந்திரத்திற்கு பின்பு இங்கு ஒரு உணவு பஞ்சம் உருவானது வாஸ்த்தவம் தான்! அதற்கு காரணம் கிட்டதட்ட முன்னூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள்சுரண்டிச்சென்றதுமட்டுமல்ல,அப்படிச் சுரண்டுவதற்காக  நில உடைமை முறைகளை மாற்றி அமைத்தது தான்! அதாவது,சிற்றரசர்கள், ஜமீந்தார்கள்,மிராசுதார்கள்,  நவாபுகள்,ராயத்துவாரிகள் ,இனாம்தார்கள்..என்று தனக்கு வரி வசூல் செய்து தரக்கூடிய ஒரு வர்க்கத்தை உருவாக்கியதே!

இதனால் உற்பத்தியில் ஐந்து அல்லது ஆறில் ஒரு பங்கை மட்டுமே விவசாயி வைத்துக் கொள்ள உரிமை கொணடவனாகவும்,மற்றவற்றை அப்படியே தர வேண்டியவனாகவும் இருந்தபடியால்,பல லட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியதாலும், நிலம் கைவிடப்பட்டதாலும் தான் பஞ்சம் உருவானது!

ஆங்கிலேயர்கள் ஒரு புறமும்,அதிகாரத்தைச் சுவைத்த இந்திய மேல்தட்டு வர்க்கம் ஒரு புறமுமாக வலுவாகச் சுரண்டிய சுரண்டலில் இந்தியா 30 க்கும் மேற்பட்ட உணவுப் பஞ்சத்தை சந்தித்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.

பசுமை புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த நெல்லை விடவும், அதிக உற்பத்திதரக்கூடிய சுமார் 300 க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல்ரங்கள் நம்மிடம் இருந்ததை இந்தியாவின் தலை சிறந்த விவசாயப் பேரறிஞர் ரிச்சாரியா ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லி வீரிய ஒட்டு ரக அரிசி ரகங்களையும்,அவை சார்ந்த ரசாயன உரங்களையும் தவிர்க்கும்படி அன்றைய விவசாய மந்திரி சி சுப்பிரமணியத்திடம் மன்றாடினார்! பலனில்லை!

ஒரு ஏக்கர் நிலத்தில் 12,000 கிலோ நெல் செங்கல்பட்டு மாவட்டத்தில் விளைந்ததாக பிரிட்டிஸ் கெஜட்டில் பதிவாகியுள்ளது! இன்று எந்த ஒட்டுரக நெல்லைக் கொண்டும் ஒரு ஏக்கருக்கு 3,000 கிலோவிற்கு மேல் விளைச்சல் எடுக்க முடியவில்லை! நிலங்கள் மலடாகி,உணவு நஞ்சானது தான் நாம் கண்ட பலன்!

மீண்டும் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக உணவை குறித்து சொல்ல விரும்புகிறேன்.
எப்போது வியாபாரப் பேராசை தலை தூக்கியதோ,அப்போது முதல் பண்டங்கள் பரிவர்த்தனையும்,பயிர் பறிவர்த்தனையும் கூடவே நடந்துள்ளது. நம்மிடமிருந்து ம நாடுகளுக்கு சென்றது போல் அங்கிருந்தும் நம் நாட்டிற்கு பல வந்தன!

கேழ்வரகின் தாயகம் உகாண்டா!

உருளைகிழங்கு உருண்டு புறப்பட்ட இடம் ஐரோப்பா!

பிலிப்பபைன்சில் பிறந்து வந்ததே தேங்காய்!

மஞ்சளின் மகிமையை உணத்திய மண் சீனம்!

கொய்யாவை கொய்து வந்தததுபெரு தேசத்திலிருந்து!

அதே போல் இங்கிலீஸ் காய்கறி என்று சொல்லப்படும் கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,பீட்ரூட்,காளிபிளவர்..உள்ளிட்ட பல காய்கற்கள்.. நம்உணவுக்கலாச்சாரத்தோடு பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துவிட்டன!

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்,அங்கிருந்துவந்த இந்த இயற்க்கையின் கொடைகளை நாம் நம் உணவு பண்பாட்டோடு இசைவான முறையில் பொருத்திக் கொண்டோமேயல்லாமல் வெளி நாட்டார் போலவே அதை சமைத்து உண்ணவில்லை!

இன்றென்ன நிலைமை?  பரோட்டா,நாண்,பீட்சா,பர்க்கர்,
பிரைடு ரைஸ், நூடுஸ்,சமோசா,பப்ஸ், வித விதமான கிரீம் கேக்குகள்...என்னென்னவோ பெயர் தெரியாத உணவுகள்...! எனவே பெயர் தெரியாத வியாதிகளும் சேர்ந்தே வருகின்றன!

விவசாயத்தில் பயன்படுத்தக் கூடாத விஷங்கள் பயன்படுத்தப் படுவது போலவே, சமையலிலும் அஜுண்மோட்டோ,  நைஸ் உப்பு, ரீவைண்ட் ஆயில்,டால்டா,மைதா, வெள்ளைச் சீனி,சத்தில்லாத பாலீஸ் செய்யப்பட்ட பாரம்பரியமில்லா அரிசி..போன்றவற்றை பயன்படுத்துகிறோம்! இவை இல்லாத ஒரு உணவு சாத்தியமே இல்லை என்று பாமரத்தனமாக  நம்ப வைக்கப்பட்டுள்ளோம்!

இது தவறு,இதற்கு மாற்றாக, அருமையான பாரம்பரியமான,ஆரோக்கியமான,அறுசுவை உணவுகள் உள்ளன என்பதை எழுதி,எழுதி சலித்துப் போனதால்,அவற்றை நடைமுறை படுத்திக் காட்டி அனுபவத்தின் மூலமாக உணரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் ஆரம்பித்தது தான் தேவாமிர்தம் என்ற கேட்டரிங் சர்வீஸ்!

நீண்டகாலமாக சாவித்திரி கண்ணனை ஒரு சமரசமற்ற எழுத்து போராளியாக பார்த்துப் பழக்கப்பட்ட பலரும்,’’பேனா பிடித்த கை கரண்டி பிடிப்பதா?’’,’’நீங்கள் எழுத்து பணியை  விட்டுவிடலாமா?’’ என்று மிகவும் வருத்தப்பட்டனர்.

ஆனால், சமையலும்  அறத்தோடு செய்தால் உன்னத சேவை தான்! அந்த சேவைக்கு உரிய மரியாதையும், வரவேற்பும் கிடைத்து வருவதும்மகிழ்ச்சி அளிக்கிறது.இது குறித்து மக்களிடையே பேசும் வாய்ப்பையும் பயிற்ச்சி அளிக்கும் வாய்ப்பையும் நான் சந்தோசமாக ஏற்க்கிறேன்.
அத்துடன் நான் உணவு தொடர்பாக ’ரெளத்திரம்’ இதழில் கடந்த மூன்றாண்டுகள் மிக அரிய கட்டுரைகளை எழுதியுள்ளேன். விவசாயம் குறித்து ’குமுதம் மண்வாசனை’ இதழில் விவசாயம் இன்று, நேற்று, நாளை என இது வரை 50 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்!
உண்மையில் நமது உணவு கலாச்சாரத்தின் மீது ஒரு உக்கிரமான போர் தொடுக்கப்பட்டு படு மோசமான சேதாரங்களை நாடும், மக்களும் கண்டு வருகின்றனர்.
ஆனால், அது பற்றிய பிரக்ஞையே சிறிதுமின்றி இந்த நாட்டின் பிரஜைகள் வாழ்ந்து கொண்டிருப்பது தான் என்னை அதிக கவலையில் ஆழ்த்துகிறது!

அய்யோ எப்பா சரணம்......கோவி லெனின்

சபரிமலைக்கு பெண்கள் செல்வது அய்யப்பனின் பிரம்மச்சரியத்துக்கு எதிரானதா?
-----------------------------------------------------------------------
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் செல்ல முடியாத சூழல் தொடர்கிறது. பக்தர்கள் மட்டுமா? பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

ஆன்மிக மரபுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்கிறார்கள் அய்யப்ப பக்தர்கள். அதுவும், சபரிமலையில் உள்ள அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பருவத்தில் உள்ள பெண்கள் அங்கே செல்வது அவரது பிரம்மச்சரியத்துக்கு எதிரானது என்கின்றனர்.
அது என்ன நைஷ்டிக பிரம்மச்சாரி?

பிரம்மச்சரியம் (திருமண உறவுக்கு முந்தைய வாழ்க்கை), கிரகஸ்தாஸ்ரமம் (குடும்ப வாழ்வு), வனப்ரஸ்தம் (வீட்டைத் துறந்து காட்டில் வாழ்தல்), சந்நியாசம் (இல்லறத்தை முழுமையாகத் துறத்தல்) என 4 படிநிலைகளை வலியுறுத்துகிறது ‘இந்து’ மதம். இதில் பிரம்மச்சர்யத்தை விட்டு நீங்காமல், குடும்ப வாழ்க்கைக்குச் செல்லாமல், தனது குருவுக்கே வாழ்க்கையை அர்ப்பணிப்பதுதான் நைஷ்டிக பிரம்மச்சரியம். மகாபாரதத்தில் பீஷ்மரும், இராமாயணத்தில் அனுமரும் நைஷ்டிக பிரம்மச்சாரிகள்.
“இயற்கை தர்மத்தை அநுசரித்து பிரம்மச்சாரியானவன் அதனை நீக்கும் சடங்கான சமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம்(திருமணம்) செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி (இயற்கையான) வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது ” என ‘தெய்வத்தின் குரல்’ கொண்டு ஒலிக்கிறார் காஞ்சி பெரிய சங்கராச்சாரியார்.
சபரிமலையில் மகத்தான பாபம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பெண்களை அனுமதிக்க மறுக்கும் இந்துத்வா அமைப்புகளின்  நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்கு மலைப்பாதையில் உள்ள வாபர் மசூதியை நிர்வகிக்கும் எரிமேலி ஜமாஅத்தும் ஆதரவு தெரிவித்து, வழிபாட்டு மரபுகளை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்கிறது.

மோகினி எனும் பெண் உருவில் இருந்த திருமால் மீது சிவன் கொண்ட மோகத்தின் விளைவுதான் அய்யப்பன் என்கிறது புராணம். அதனால்தான் அய்யப்பன், பெண் வாசம் இல்லாமல் நைஷ்டிக பிரம்மச்சாரியாக சபரிமலையில் இருக்கிறார் என புராணத்தின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் கூறுகிறார்கள் பக்தர்கள். அதே புராணத்தில், நைஷ்டிக பிரம்மச்சாரி குறித்த விளக்கமும் உண்டு.

பிரம்மாதான் நைஷ்டிக பிரம்மச்சாரி என நினைக்கும் நாரதர், அவரிடம் அது பற்றி கேட்கிறார். பிரம்மனோ, கிருஷ்ணர்தான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்கிறார். கோபியருடன் கொஞ்சும் கிருஷ்ணர் எப்படி நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்க முடியும் என நாரதர் குழப்பமடைய, இது பற்றி துர்வாச முனிவரிடம் கேள் என்கிறார் பிரம்மா. நாரதர் துர்வாசரிடம் போய் விளக்கம் கேட்கிறார்.
துர்வாசரோ, “கிருஷ்ணர்தான் நைஷ்டிக பிரம்மசாரி என்பதில் சந்தேகம் வேண்டாம். பெண்களே இல்லாத இடத்தில் வாழ்பவனும், பெண்கள் தன்னை அணுகாமல் தவிர்த்து வாழ்பவனும் பிரம்மச்சாரி அல்ல. பதினாயிரம் கோபியர்களுடன் ராசலீலை புரிந்து அவர்களின் பாசத்திற்கும் பிரேமைக்கும் ஆளாகிய போதிலும் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அவர்கள் மீது இச்சை கொள்ளாமல் வாழும் கிருஷ்ணரே நைஷ்டிகி பிரம்மச்சாரி’‘ என விளக்கம் அளித்தார். (தினமலர் இணையதளம்-ஆன்மிக வகுப்பறை 2014 ஜூலை 4)

அய்யப்ப பக்தர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும் பா.ஜ.க.-பரிவார அமைப்புகளோ, சபரிமலைக்கு பெண்கள் வருவது அய்யப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரியத்துக்கு எதிரானது என்று பக்தர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரையிலான அனைத்துப் பெண்களையும் தடுத்து தாக்கி விரட்டுகிறது.
ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பவர்கள் யாரெனப் புரிகிறதா?

திருவள்ளுவர் ஆண்டு 2049 அய்ப்பசி 1

Wednesday, October 17, 2018

விற்பனைப் பண்டமான தண்ணீர்! பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராஜன்

தண்ணீரை அடிப்படை வளமாக பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் "டேங்கர் லாரிகளின்" வேலைநிறுத்தம்.

காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் "நிலத்தடிநீர் பேரிடர்".

தற்சமயம், நம்முடைய விவசாயத்திற்கு தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரின் அளவில் 90% பூர்த்திசெய்வதும் நிலத்தடி நீரே.

1960களில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியோடு சேர்ந்துவந்த உரம் சார்ந்த விவசாயம், பயிர்விளைச்சலுக்கு அதிகமான நீரை கோரியது அதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் தோன்றின, நீரின் அளவும் குறைந்தது.

நீர்நிலைகள் ஆக்கிரமித்தல், ஆறுகளில் நடைபெற்ற/நடைபெறும் மணல்கொள்ளை நிலத்தடி நீரை மீள்நிரப்பம் செய்யமுடியாமல் போனது, அதனால் நிலத்தடி நீர்நிலைகள் வற்றிப்போயின.

அதே நேரம் நம்முடைய குடிநீர் ஆதாரங்களும் அழிக்கப்பட்டதன் விளைவாக இப்போது நமக்கு தேவையான குடிநீருக்கு 30%நிலத்தடி நீரைத்தான் நம்பியுள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி அதிகமான தொழிற்ச்சாலைகளை இந்நிலத்தில் காலூன்றவைத்தது, அதன்தேவையில் 90% நீர் பூமிக்கடியில் இருந்து உறிஞ்சப்பட்டது, இது கடந்த பலபத்தாண்டுகளில் ஏற்பட்ட விளைவு.

பழைய மாமல்லபுரம் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் இல்லங்கள், அவர்களின் வீடுகளிலுள்ள நீச்சல் தொட்டிகள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் தண்ணீருக்கான வணிகம் வாரத்திற்கு 200 கோடி. யோசித்துப்பாருங்கள் நாம் எவ்வளவு பெரிய அழிவில் வந்து சிக்கிக்கொண்டுள்ளோம் என்று.

இப்போது நடைபெறும் டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்காக அரசு இறங்கிவந்தது சில சலுகைகளை வழங்கலாம் ஆனால், நாம் நிலத்தடிநீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மை.

இன்றில்லாவிட்டாலும் நாளை அந்த உண்மை நமக்கு முகத்தில் அறையும், அப்போது காலம் கடந்திருக்கும்.

தண்ணீர் என்பது அடிப்படை வளம், அதை விற்பதற்க்கோ வாங்குவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது என்று அரசு அறிவித்து, ஒவ்வொரு குடிமகனிற்கும் தேவைப்படும் தண்ணீரை குழாய்களில் கொண்டு சேர்க்கும் கடமை அரசிற்குரியது.           

செய்யுமா?

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...