தலைவர்களுக்குத் தேவை தன்மானம்
சுயமரியாதையை விதைத்தவர் தந்தை பெரியார், அவரது பாதச்சுவட்டை வட இந்திய தலைவர்கள் பலர் பின்பற்றி னாலும், அரசியல் மற்றும் சொந்த நம்பிக்கை காரணமாக சுயமரியாதை இழந்து அவமானப்பட்டு நிற்கின்றனர்.
பாபு ஜகஜீவன்ராம் சிலை ஒன்றை திறக்கப் போய் அவர் சென்ற பிறகு அந்தச்சிலை கழுவப்பட்டு பிறகு கங்கை நீரால் புனிதப்படுத்தப்பட்டது, இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இவர் அலகாபாத் சென்ற போது அங்கு உள்ள ஒரு கோவிலில் வழிபட்டார். அவர் சென்ற பிறகு அந்தக் கோவில் வளாகம் முழுவதும் கழுவிவிடப் பட்டு, கங்கை யமுனை நதிகளில் நீர் தெளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் யாகம் நடத்தியபிறகு கோவிலுக்குள் சென்று பார்ப்பனர்கள் பூசை நடத்தினார்கள்.
அதே போல் பீகார் முதல்வராக இருந்த ஜித்தன்ராம் மாஞ்ஜி கோவில் ஒன்றுக்குச் சென்று வந்த பிறகு அந்தக்கோவிலை இழுத்துமூடி முழுமையாகக் கழுவிய பிறகே பூசைகள் ஆரம்பித்தனர். அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது வாரணாசியில் உள்ள அனுமன் கோவில் ஒன்றுக்குச் சென்று வந்த பிறகு கோவில் சுத்திகரிக்கப்பட்டது.
காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சைலஜா குமாரி 15.11.2015 அன்று துவாரகை கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்ற போது குறிப்பிட்ட பகுதியை கடக்கமுயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரது ஜாதி என்ன என்று கேட்டனர். அவர் கூறமறுத்த போது கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வில்லை, தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிறகும் நீ என்ன ஜாதி என்றுதான் கேட்டோம், உனது பதவியைப் பற்றி கேட்கவில்லை? என்று ஒருமையில் பேசினார்கள்., இதை அவரே 1.12.2015 அன்று டில்லியில் ஊடகவியலாளர்களிடம் கூறிக் குமுறினர்.
இவர்களை விட இந்தியாவின் தற் போதைய முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவரும் பாஜகவின் முன்னாள் தலைவரும் தீவிர ஆர்.எஸ்.எஸ் காரரு மாகிய ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழைய விடாமல் கோவில்படியில் வைத்து வாழைப்பழமும், தேங்காயும் கொடுத்து திருப்பி அனுப்பினார்கள். இதுகுறித்து குடியரசுத்தலைவர் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. அவரைத் தடுத்த பார்ப்பன சாமியாரை தாக்கிய நிகழ்வு வெளியே வந்த பிறகுதான் குடியரசுத்தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாத அதிர்ச்சிகரமான நிகழ்வு வெளியானது.
அந்த அவமானத்தை தாங்கிக்கொண்ட ராம் நாத் கோவிந்த அவர்களால் பூரி ஜெகன்னாதர் கோவிலில் பார்ப்பனர் களால் கோவில் வாசலில் வைத்தே பாதுகாவலர்கள் புடைசூழ இருந்தவரை தள்ளிவிட்ட நிகழ்வு அவரது மனசாட்சியை உலுக்கி விட்டது, இதனால் தான் அவர் டில்லிக்கும் சென்ற பிறகு கோவில் நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும் தனக்கு பாதுகாப்பிற்கு இருந்த பாதுகாவலர் குழும தலைவருக்கும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி இருந்தார்.
இதே போல் மகாராஷ்டிராவில் சரத்பவார் முதல்வராக இருந்த போது நாசிக் கோவிலில் இருந்து வந்த பிரசாதத்தை அவரது கையில் கொடுக்காமல் மேசையில் வைத்துவிட்டுச்சென்றனர். இப்படி பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் வட இந்தியாவில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி இதில் இருந்து மாறுபட்டவர்.
இதுவரை அவரைத் தேடி பார்ப்பனப் பூசாரிகள் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்களே ஒழிய, அவராக எந்தக் கோவிலுக்கும் சென்ற தில்லை. அவரது ஆட்சிகாலத்தில் (2007-12) குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டில் வாரணாசி கோவிலுக்கு சென் றுள்ளார். ஒரு முதல்வராக குடியரசுத் தலைவரை வரவேற்றாரே தவிர அவருடன் கோவிலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்சாரம்
No comments:
Post a Comment