“30, 40 வருடங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது. அதுதான் தகுதி என நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்” என்ற ரஜினியின் அதிர்ச்சி அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயாலாளர்கள் நம்மைத் தொடர்பு கொண்டனர்.
“புத்தி பேதலிச்சிருச்சுன்னு எங்களையெல்லாம் சொல்லியிருக்காரு தலைவர். உண்மைதான், புத்தி பேதலிச்சதால 40 வருசமா இவர் பின்னால நின்றோம். அவரின் ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் எங்க கைக்காசைப் போட்டுத்தான் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவையெல்லாம் நடத்தினோம். எங்க குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு வந்து யாரும் பதவி கேட்கலை. மன்றத்துக்கு செலவு பண்ணுனேன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்னு தலைவர் சொல்றாரே, செலவு இல்லாம பூத் கமிட்டி அமைக்க முடியுமா?
பொதுமக்களுக்கு பொறுப்பு கொடுக்கணும்னு சொல்றாரு. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சவுதியில இருக்குறவர்களுக்கு இங்கே மன்றத்தில் பொறுப்பு கொடுத்தார்களே, அந்த மாதிரி ஆட்கள்தான் பொதுமக்களா?
புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும் இல்லாம, மாவட்டப் பொறுப்பாளரும் இல்லாம சீராய்வுக் கூட்டம் நடத்துனதெல்லாம் தலைவருக்குத் தெரியுமா? கடலூர் மாவட்டத்துல நாலு ஒன்றியங்கள், ஒரு நகரப் பொறுப்புக்கு ஆட்கள் தேவைன்னு போன மாசம் பேப்பர்களில் விளம்பரம் கொடுத்த கொடுமையாவது தலைவருக்குத் தெரியுமான்னு எங்களுக்குத் தெரியலை”
-நக்கீரன், 2018 அக்டோபர் 27 இதழ் செய்தி.
இதுதான் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மனநிலை. அவர்களில் கணிசமானவர்கள் தி.மு.க.வினர். அதுபோலவே அ.தி.மு.க. ஆதரவு மனநிலை கொண்டவர்களும் உண்டு. ரஜினி ரசிகன் என்ற மாத இதழை நக்கீரன் குழுமம் நடத்தியதால், 30 ஆண்டுகளாகவே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் நல்ல தொடர்பில் உள்ளவர்கள்.
“தலைவரோட நம்பிக்கை வட்டாரம், கார்ப்பரேட் அரசியல் நடத்த நினைக்கிறது. கார்ப்பரேட் கம்பெனியில் எங்களை மாதிரி கைநாட்டுகளுக்கு என்ன வேலை?” என்கிறார்கள் ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்கள்.
அதிருப்தியில் உள்ளவர்களில் தங்கள் ஆதரவு மனநிலை கொண்டு நிர்வாகிகளை அ.தி.மு.கவும், டி.டி.வி. தரப்பும் அந்தந்தப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மூலம் நேரில் அணுகி தங்கள் கட்சியின் வாக்குகளாக மாற்றுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். தி.மு.க தரப்பிலோ முரசொலியில் சிலம்பம் ஆடி, அதனை அக்கப்போர் விவாதமாக்கி, அதன்பிறகு சலாம் வரிசை எடுத்து, முகநூல் கழகப் போராளிகளே கட்சிக்கு எதிராக வரிந்து கட்டி வீரம் காட்டும் வித்தையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் மாநில-மாவட்ட-கிளைக்கழக நிர்வாகிகள் பலரும், அதிருப்தி மனநிலையில் உள்ள தி.மு.க. ஆதரவு ரஜினி மன்ற நிர்வாகிகளை சந்திப்பதோ பேசுவதோ இல்லை.
வெறும் பேச்சு, வேலைக்கு ஆகாது. களத்தில் இறங்கி வாக்கு பலத்தை அதிகரிக்காமல் தேர்தல் வெற்றி சாத்தியமேயில்லை.
திருவள்ளுவர் ஆண்டு 2049 அய்ப்பசி 12
No comments:
Post a Comment