Monday, October 15, 2018

சின்மயியை விட....சிக்கலில் புவி !!

ஊடக நிறுவனங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

கடந்த வாரம் தென்கொரியாவின் இஞ்சேன் நகரத்தில் 195 நாடுகளின் பிரதிநிதிகள்,50க்கும் காலநிலை விஞ்ஞானிகள் என எல்லோரும் சந்தித்து முக்கியமான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையை தயாரித்தது இயக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பில் இயங்கும் ஐ.பி.சி.சி அமைப்பு, தனிநபர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ தயாரித்த அறிக்கை அல்ல. உலகநாடுகள் எல்லோரும் இணைந்து தயாரித்த அறிக்கை, இந்தியா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட அறிவியல் ஆய்வு அறிக்கை. 6,000 ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து அதில்வந்துள்ள முடிவுகளை வைத்தே இந்த அறிக்கை இப்போது வெளிவந்துள்ளது.

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன என்கிறது ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், "இப்போது இல்லையெனில் எப்போதும் முடியாது" என்று தெளிவாக தெரிவித்து பேரழிவிலிருந்து காப்பாற்ற எல்லோரும் இணைந்து பங்காற்ற வேண்டுமென்றும் காலநிலை விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மானுடத்தின் இருத்தியலே கேள்விக்கு உட்படுத்தப்படும் சமயத்தில் இதுதான் பிரதான பிரச்சனையாக பார்க்கவேண்டிய காலகட்டத்திற்கு மனித சமூகம் வந்துவிட்டது. சூழல் குறித்தும், காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பிரச்சனைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துச்செல்வதில் எல்லோருக்கும் முக்கிய பங்குள்ளது, அதுவும் ஊடகங்களுக்கு பெரிய அளவில் பொறுப்பும் கடமையும் உள்ளது.

இதன் பொருட்டே இந்த வேண்டுகோள்:

1. அச்சு, காட்சி மற்றும் எந்த இணைய ஊடகமானாலும் சுற்றுச்சூழலுக்கு என தனி குழு அமைக்க முயற்சியுங்கள் . அது, சூழலில் ஆர்வமுள்ள பத்திரிக்கையாளர்களை ஒன்றாக இணைத்து "தனி பீட்" போல் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
2. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் இரண்டு செய்திகளாவது சூழல் சார்ந்த செய்திகளை வெளியிடுங்கள், அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் எதுவாகிலும் சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுங்கள்.
3. சூழல் பிரச்னைகளின் தாக்கம் மக்களிடம் சென்று சேர்வதற்கு அதிக காலம் பிடிக்கும், அதனால் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்தால்தான் மக்களை சென்றடைய முடியும், அதனால் சூழல் சார்ந்த விஷயங்களை மக்களிடம் தொடர்ச்சியாக கொண்டு சேர்க்கவேண்டும்.
4. சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கான விவாதங்களை தொடர்ந்து நடத்துங்கள்.
5. எந்த துறையை கவனிக்கக்கூடிய பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் எல்லோரையும் இணைத்து, சூழல் குறித்த தொடர் பயிற்சி வகுப்புகளை நடத்துங்கள். எந்த திட்டம், எந்த துறையின் கீழ் வந்தாலும் அதை சூழல் பார்வையில் பார்க்கும் வகையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்த பயிற்சிகள் இருக்கட்டும்.

எல்லோரும், எங்கள் கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, இது குறித்து தொடர்செயல்பாடுகளை முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். முக்கியமான வேண்டுகோளாக வைக்கிறோம். - பூவுலகின் நண்பர்கள்

Sunday, October 14, 2018

Mano soundar mano

மீ டூ... ஒரு பாலியல் தொழிலாளியின் பாய்ண்ட் ஆஃப் வியூவிலிருந்தும்கூட விவாதிக்கப்படவேண்டும். ஆண் - பெண் - திருநங்கைகள் என அனைத்து பாலினமும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டாலும்  மிக அதிகமாக ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளாவதும் பெண்கள்தான்.

'கரும்பு தின்ன கூலி' என்றபடி பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண் பாலியல் தொழிலாளர்களைப்போல... எந்தப்பெண் பாலியல் தொழிலாளரும் மகிழ்ச்சியுடன் கடந்து செல்வதில்லை. காரணம், பாலியல் தொழில் பெண்களுக்கு சுகம் அல்ல; மரண வலி கொண்டது.

பாலியல் தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் ஆண்கள் மட்டுமே பாலியல் தொழிலாளிகளை தேடிவருவதில்லை. பெண்ணை துன்புறுத்தி இன்பம் காணும் பாலியல் வக்கிரம் நிறைந்த கொடூர சைகோக்கள், மனநோய், உடல்நோய், குடிநோய் என கொடூர நோயாளிகளும்தான் பெரும்பாலும் வருகிறார்கள். அப்படியென்றால், பாலியல் தொழிலில் ஈடுப்படக்கூடிய எந்த பெண்ணும் முழு மனதுடன் ஈடுபடுவதில்லை.

பொதுப்பெண்களுக்கு இருக்கும் அத்தனை சட்டரீதியான உரிமைகளும் பாலியல் தொழிலாளிகளுக்கும் உண்டு. பாலியல் தொழிலாளிகள்தானே என்பதற்காக யாரும் மீ டூவில்  ஈடுபட்டுவிடமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தன்னிடம் வந்தவன்கள் பணம் கொடுத்துவிட்டு துன்புறுத்திச்செல்வதால் அந்தப் பெண் புகார் கொடுக்காததால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், இப்போது வந்து மீ டூ பதிவிட்டாலும் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும்.

ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாலும் பாலியல் தொழிலாளியை அரசு காப்பகச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் துன்புறுத்தியவன்களை விட்டுவடுதும்தான் சட்டம்.

Saturday, October 13, 2018

நாச்சியாள் சுகந்தி

அரசியலிலும் அலுவலகங்களிலும் பதவியை பெற பெண் உடலை பண்டமாக மாற்றும் ஈனச் செயல் அழியும் வரை மீ டூ-க்கள் ஒழியாது.

பதவியை பெற சொந்த மனைவியை அனுப்பிய பலர் இங்கு அமைச்சர்களாக வலம் வந்த அவலம் உண்டு

பதவியில் இருப்பவனை பார்த்து ஹி ஹி எனும் பெண் கூட்டமும் உண்டு. இதையெல்லாம் இப்போதாவது விரிவாக பேசினால், எதிர்கால சந்ததி நலமாக இருக்கும்.

பிராமின்  சங்க தலவன் நாராயணனோ, வைரமுத்துவோ இப்படி பெண்களை பயன்படுத்த வேண்டும் என்ற நினத்து செயல்பட்டது ஒர்ரிரவில் நடைபெற்ற விஷயம் அல்ல. அவர்கள் அதிகாரத்தில் இருந்த மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும் பார்த்து வந்ததுதான்.

பி.கு:பாதிக்கப்பட்ட பெண்கள் ஆமாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என சொல்வதன் பின்னணியில் காழ்ப்புப்னர்வு, சாதி, இன துவேஷம் இருக்கும் என சொல்லி அப்பெண்களை இன்னும் அவமானப்படுத்தாதீர்கள்.

Tuesday, October 9, 2018

சாவித்திரி கண்ணன்

70 வயதுக்கு மேலான முதியவர்
உயர்குடி பிறப்பாளர்,
மிக உயர்ந்த பதவி வகிப்பவரான ஒரு மாநிலத்தின் ஆளுனர் மீதே ... ஒரு பத்திரிக்கை தொடர்ந்து பாலியல் அத்துமீறல் குற்றசாட்டுகளை எழுதி வருகிறதென்றால்...,

இவ்வளவு நாள் விட்டுவைத்ததே தவறல்லவா?

அவர், நக்கீரன் மீது அவதூறு வழக்கு அல்லவா தொடுத்திருக்க வேண்டும்?

ஏன் தொடுக்கவில்லை?

நிர்மலா தேவி போலீஸ்சிடம் தந்த வாக்குமூலங்கள் என்ன? அவற்றின் ஆடியோ, வீடியோ பதிவுகளை மக்கள் மன்றத்தில் வைக்கும் துணிச்சல் உண்டா?

அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறமுடியுமா?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தனக்கு கீழுள்ள ஒரு அதிகாரியை நியமித்து விசாரிக்க வைத்து,உண்மைகளை மூடி மறைப்பதில் காட்டிய அவசரமே அவரை காட்டிக் கொடுத்துவிட்டதே..!

’’ஐயோ பாவம் இவரைப் பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்களே..’’என மக்கள் அனுதாபப் படவில்லையே?

’’அடப்பாவி மனுஷா ..! இப்படியுமா?’’ என்றல்லவா அங்கலாய்க்கிறார்கள்!

நக்கீரன் என்ற ஒரு பத்திரிகை மட்டுமே ஊதி வந்த சங்கை..
இன்று ஒட்டு மொத்தபத்திரிகைகளும்,வீஷுவல் மீடியாக்களும் சேர்ந்து ஊத வைத்துவீட்டீர்களே..!

ஐயோ பாவம்.!.குற்ற உணர்வால் ஒரு மானில அரசும்,கவர்னரும் உரிய முறையில் வழக்கை கூட சிருஷ்டிக்க முடியாமல் இப்படி அவமானப் பட்டுவிட்டார்களே..!

Friday, October 5, 2018

கோவி லெனின்

கணவர் பணியாற்றுவோர் கவனத்திற்கு..

இந்திய மனைவியர் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி கணவர்குலம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிப்பட்ட அம்சங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? எந்நேரமும் நீங்கள் ஓர் அடிமை (அன்புக்கு?!) என்பதை மறந்துவிடாதீர்கள். மனதளவில் அடிமை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் இதுதான் மகிழ்ச்சி என்ற எண்ணமும் தானாக வந்துவிடும்.

குடும்பத்தில் மனைவிதான் Boss. இதை மறந்துடாதீங்க பாஸூ. Boss is always correct என்பது முதலாளித்துவத்தில் மட்டுமல்ல, இந்தியக் குடும்பத்திற்குமான ’விதி’.

கணவர்களே, பேச்சைக் குறையுங்கள். மனைவி எப்போது என்ன பேசினாலும் அதனைக் கவனிக்க வேண்டியது உங்கள் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மனைவியர் தன்னைப் பற்றியே தன் கணவர் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் எப்போது என்ன யோசனையில் இருந்தாலும், “உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று சொல்லத் தயங்காதீர்கள். (அது பச்சைப் பொய் என்பது தெரிந்திருந்தாலும்).
“இன்றைக்கு சினிமாவுக்குப் போகலாம்” என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்றால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அலுவலகம், அசைன்மென்ட், புராஜக்ட் என எதுவேண்டுமானாலும் முக்கியமாக இருக்கலாம். மனைவியருக்கு கணவன் கொடுத்த உத்தரவாதம்தான் முக்கியம். எனவே, சினிமாதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது என்பதை உணருங்கள்.
“பராவயில்லீங்க.. இன்னொரு நாள் நாம வெளியிலே போகலாம்” என்று மனைவியர் சொன்னால், அதனை கணவன்மார் உடனே அப்படியே நம்பி சும்மா இருந்துவிடக்கூடாது. மனைவியரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓராயிரம் பொருள் உண்டு. ஆம் என்றால் இல்லை என்றும், இல்லை என்றால் ஆம் என்றும் பல அர்த்தங்கள் உண்டு. அதனை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுபவனே சரியாகக் கணவன் பணி செய்பவன்.

நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள் என்றால் அது உங்கள் மனைவியாக மட்டுமே இருக்கவேண்டும். தன்னைப்போல திறமையான ஒரு பெண்ணைத் தன் கணவர் பார்த்திருக்கவே மாட்டார் என்பதுதான் இந்திய மனைவியரின் மனநிலை. எனவே, அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் பெண்கள் பற்றியோ, ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வந்து உரையாற்றும் பெண்கள் பற்றியோ பெருமையடித்து, உங்களுக்கு நீங்களே சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
மனைவிக்கு என்ன உடை பிடிக்கும், என்ன நிறம் பிடிக்கும், யார் நடித்த படம் பிடிக்கும், ஹோட்டலில் என்ன டிஷ் பிடிக்கும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது கணவன்மார்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. மனைவியருக்கு நேற்று ஒன்று பிடிக்கும். இன்று வேறொன்று பிடிக்கும். ஆனாலும் அவர் கேள்வி கேட்கும் நேரத்தில் அவருக்கு எது பிடிக்கும் என்று சொல்லக்கூடிய திறமையான யூகிப்பாளராக நீங்கள் இருக்கவேண்டும்.
மறந்தும்கூட உங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசாதீர்கள். உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இவர்களைப் பற்றி பேசுவதைத் தவிருங்கள். உங்கள் அம்மா, அக்கா, தங்கையின் பெருமைகளை மூச்சுவிடவே கூடாது. அதேநேரத்தில்  உங்கள் மனைவி அவரது குடும்பத்தினர் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் நிறுத்தும்வரை நீங்கள் தடுக்கவே கூடாது. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
மனைவியின் மனமகிழ்ச்சி என்பது கணவனின் பொருளாதார ஆற்றலை சார்ந்தது. நேற்று நீங்கள் வைரத்தில் தோடு வாங்கிக்கொடுத்திருக்கலாம். உங்கள் மனைவியும் சந்தோஷம் அடைந்திருப்பார். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண்மணியோ, எதிர் வீட்டு அம்மணியோ வைர நெக்லஸ் அணிந்திருப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட்டால், அத்தனை சந்தோஷமும் காற்றுப்போன பலூனாகிவிடும். வைர நெக்லஸை நீங்கள் வாங்கித்தந்தே ஆகவேண்டும். அதற்குள் எதிர்வீட்டிலும் பக்கத்துவீட்டிலும் புது கார்  வாங்கிவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.
இப்படியிருந்தால் எப்படித்தான் கணவராகப் பணியாற்றுவது எனக் கவலைப்படுகிறீர்களா? ‘என் கணவர் எனக்கே எனக்கானவர்’ என்பதுதான் இந்திய மனைவியரின் மிகப்பெரும் பெருமிதமாக உள்ளது. அதனால் உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உனக்காகத்தான் வாழ்கிறேன் என்பதை சின்னச்சின்ன வெளிப்பாடுகள் மூலம் நிரூபியுங்கள். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். காசா, பணமா? அன்பான வார்த்தைகளால் உங்களை நிரூபியுங்கள். உண்மையான அன்புக்கு ஈடுஇணை ஏதுமில்லை. குடும்பத்தின் சிறந்த பணியாளர் விருது உங்களுக்குக் கிடைக்கும்.
HAPPY WEEKEND
http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=671

Tuesday, October 2, 2018

தாகம் செங்குட்டுவன்

எல்லோரையும்
எழுப்பி
ஓடச்செய்துவிட்டு

எக்காளமிட்டபடி
இப்போதுதான்
பல் துலக்குகிறாய் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து....)

Monday, October 1, 2018

பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராஜன்

சஞ்சய் தத்தும் ராஜீவ் கொலை வழக்கும்":-

1993 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மும்பை நகரை தொடர் வெடிகுண்டுகள் கலங்கடித்தன, 13 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் 257 பேர் உயிரிழந்தார்கள், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். தாவூத் இப்ராஹிம் உட்பட பலர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டார்கள். அந்த  குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான தரவுகளும் திரட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் AK  56 இருந்ததற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது, அந்த தீர்ப்பில் சஞ்சய் தத் குற்றவாளி என்றும் அவருக்கு ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் சஞ்சய் தத் 8 மாதங்களுக்கு முன்னரே, பிப்ரவரி மாதம் 2016 நன் நடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்திருக்க வேண்டிய காலகட்டத்தில் 120 நாட்களுக்கு மேலாக பரோலில் வெளியில்தான் இருந்தார், அப்படி இருந்தும் அவர் நல்ல விதமாக நடந்து கொண்டார் என்பதை காரணம்காட்டி பலமாதங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதில் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது, அதை அரசும், நீதிமன்றங்களும் முடிவு செய்யட்டும், ஆனால் சஞ்சய் தத்தை சீக்கிரமே விடுதலை செய்யக்கூடாது என்று மும்பை குண்டுவெடிப்பில் உயிரழிந்த 257 பேரில் ஒருவர் கூட நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. காயம் அடைந்த 700க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரும் நீதிமன்றத்தை நாடவில்லை.

ஆனால், ராஜீவ் கொலைவழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் 28 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகும்,  அவர்களின் விடுதலைக்கு உச்சநீதி மன்றம், தமிழக அரசு, ராஜீவின் குடும்பத்தார் என எல்லோரும் இசைவு தந்தபிறகும் விடுதலை கிடைக்கவில்லை என்பதை எப்படி நாம் பார்ப்பது? உயிரழிந்த ஒவ்வொரு உயிரும் முக்கியமானதுதான் அதற்கு உரிய தண்டனைகளை நீதிமன்றமும் வழங்கிவிட்டன, இதற்கு பிறகு உயிர் இழந்தவர்களின் தரப்பில் எப்படி நீதிமன்றம் செல்ல முடியும்? பல தலைவர்களின் பிறந்தநாட்கள்,  நன்நடத்தை என பல காரணங்களால் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை கிடைக்கும் கைதிகள்  எல்லோருக்கும் எதிர் தரப்பு என்று ஒன்று இருக்கும், அப்படி இருக்கும் ஒவ்வொரு எதிர்தரப்பும் இதைப்போன்ற விடுதலைகளை எதிர்த்து நீதி மன்றங்கள் சென்றால் நீதி மன்றம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இதுவரை இந்திய வரலாற்றில் நடைபெற்றுள்ளதா என்பதை யாராவது சொல்வார்களா ? 

சிறைகள் இருப்பது சீர்திருத்தம் செய்யவே, குற்றவாளிகளை கொல்வதற்காக அல்ல. 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் வாதம் செய்யும் பலர், தண்டனை காலம் முடியும் முன்னரே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே, இதை நாம் எப்படி புரிந்து கொள்வது.?

(பேரறிவாளன் குற்றவாளியா அல்லது பொய் குற்றம் சாட்டப்பட்டவரா என்பது வேறு வாதம், இங்கே அந்த 7 பேரின் தண்டனை குறித்தும் அவர்களின் விடுதலை குறித்து மட்டுமே பார்க்கவேண்டும்).   

(குறிப்பு:- பா.ஜ அரசு வந்தவுடன் எந்த காரணங்களின் அடிப்படையில் சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டார் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு பிறகு அது தள்ளுபடி செய்யப்பட்டது).

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...