நெஞ்சம் மறப்பதில்லை 119
கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்
-சித்ரா லட்சுமணன்
அமெரிக்காவிற்கு சென்ற கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில் என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான் இருந்தது. கவிஞருக்கு மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.
கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின் மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.
கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற செய்தி அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது. உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம். நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால் அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால் நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
உடனடியாக எம். ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது. எம் எஸ் விஸ்வநாதனின் குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி கண்ணதாசனை அந்தக் குரலை கேட்கச் செய்யலாம் என்று முடிவெடுத்த எம். ஜி. ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள். அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம். உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும் வாய்ப்பிருக்கிறது" என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.
ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது
1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல் 1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.
"கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும் "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே அமைந்தது.
அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம். ஜி. ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.
கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .
தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன்
"நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு. தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.
நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.
தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல்
"கண்ணதாசா ! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
"அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னை மட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்
"எத்தனைக் கவிஞர் நாங்கள்
இருந்தாலும் கவிஞன் என்றால்
அத்தனை பேருக்குள்ளும்
அவனையே குறிக்கும் என்று
முத்தமிழ்க் கவிதை நாட்டின்
முடிசூடிக் கொண்டான்"
என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்
ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்.
-தொடரும்