ஒற்றுமைக்கு உலை வைத்துவிட்டு ஒற்றுமைக்கான சிலையா?!
நேற்று 31.10.2018 இந்தியத் துணைக்கண்டத்தில் ஒற்றுமைக்கான சிலை திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் இந்த நிலத்தில் சமஸ்தானங்களாக இயங்கிய 565 சிற்றரசுகளை பேச்சுவார்த்தை நடத்தியும், மிரட்டியும், ராணுவத்தின் துணையோடும் ஒன்று சேர்த்தார் சுதந்திர இந்தியாவின் துணைப்பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த திரு.வல்லபாய் பட்டேல் நேற்று அவர் பிறந்த தினத்தில் அவர் பிறந்த குஜராத்தில் திறந்துவைக்கப்பட்ட சிலைதான் ஒற்றுமைக்கான சிலை என்கிறது இந்த அரசு.
இன்று 01.11.2018 என்ன நாள் தெரியுமா மொழி வாரியாக மாநிலங்கள் முதற்கட்டமாக பிரிக்கப்பட்ட நாள். இந்தியத் துணைக்கண்டம் 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் என்று 20 துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாள். இன்று இந்தியா 36 துண்டுகளாகிவிட்டது. இன்னும் மாநிலம் பிரித்துக் கேட்கும் போராட்டங்கள் ஓயவில்லை. கடைசியாக, முதலில் பிறந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிந்தது.
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைத் தனியாகப் பிரித்து மாநிலமாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அதை வலியுறுத்தி திரு.ஶ்ரீராமுலு என்பவர் 58 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்து அதன்பின் நடந்த கலவரங்களின் முடிவில் 1953 ல் ஆந்திர மாநிலம் உருவானது. அதன் பின் மாநில சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, மாநில சீரமைப்புச் சட்டம் இயற்றி 1956 நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைந்தது.
மனிதனின் சுதந்திர தாகம் தன்னை கடுமையாக கட்டுப்படுத்துகிற அமைப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளவே தூண்டும். அப்படித்தான் மிகப்பெரும் நிலமாக இருந்த “ஆங்கிலேய இந்தியா” பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், பர்மா, இந்தியா என்று பிரிந்துபோனது. அப்படிப்பிரிந்த இந்தியா தன்னுள் பல மொழி பேசும் மக்களையும், பல கலாச்சாரங்களை உடைய மக்களையும், பல இனக்குழுக்களையும் கொண்டிருந்தது. அதனால் 1947 ல் சுதந்திரம் பெற்று அடுத்த அய்ந்து ஆண்டுகளிலேயே தன்னாட்சி மன்னர்களிடமிருந்து ஒரு நிலமாக்கப்பட்டு இந்தப் பெருநிலம் மொழிவாரி பிரிந்து நின்றது.
பண்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டை ஒற்றைத் தன்மையானதாக ஆக்கமுடியாது என்பதற்கான முதல் பாடம் ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கிருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அகண்ட பாரதம் என்கின்றனர் இந்தியா இந்து நாடு என்கின்றனர் ஒரே நாடு ஒரே வரி என்கின்றனர். எல்லாம் சரி யாரும் ஒரு நாடு துண்டுதுண்டாகப் போவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் அந்த மக்களை எந்த அடிப்படையில், எந்தப்புள்ளியில் ஒன்றிணைத்து வைக்கவேண்டும் என்கிற மதி ஆட்சியாளர்களுக்கு வேண்டுமல்லவா? அண்ணல் அம்மபேதகர் சைமன் கமிசனிடம் அளித்த அறிக்கையில் ராஜ்தானியில் இருந்து கர்நாடகம் பிரிவதை எதிர்க்கிறார் அதில் அவர் ஒரு மொழி ஒரு மாகாணம் என்பது நடைமுறைப்படுத்த முடியாத மிகப்பெரிய கோட்பாடு என்கிறார். ஆக பிரிவினைக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை.
பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாச்சியை வலியுறுத்தினார். ஏனென்றால் மாநில உரிமைகள் வலுவானதாகவும் பிறர் தலையீடு இல்லாமலும் சுதந்திரமாக இயங்கவேண்டுமென அவர் நினைத்தார்.
இரண்டு விடயங்களை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஒன்று நாட்டின் பண்முகத்தன்மை, மற்றொன்று மாநிலங்களின் உரிமை. இந்த இரண்டிற்கும் ஒரே நேரத்தில் குழிபறிக்கிறது இந்த பாசிச பாஜக அரசு. மாநிலங்களின் முக்கிய நிதி ஆதாரமான வரி வருவாயை ஒரே நாடு ஒரே வரி என்கிற முழக்கத்தோடு ஜி.எஸ்.டி என்கிற பெயரில் மத்திக்கு மடை மாற்றம் செய்துவிட்டது இந்த அரசு. நீட் என்கிற பெயரில் மாநில கல்வி உரிமையை சிதைத்து வைத்திருக்கிறது இந்த அரசு. மக்கள் பிரதிநிதியாக இல்லாத சாமியார்களை முதல்வராக்கி மாநிலங்களின் மீது காவிச்சாயம் பூசுகிறது இந்த அரசு. இன்றும் வேறு மாநில மக்களை தங்கள் மாநிலங்களிலிருந்து திடீர் கலவரங்கள் மூலம் வெளியேற்றுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. பிறகு எப்படி இது ஒற்றுமையான நாடாகும்.
நீதித்துறையை புலனாய்வுத்துறை வழியாக வருமானவரித்துறையின் கரம் கொண்டு தனக்குச் சாதகமாக்கி வைத்திருக்கிறது இந்த அரசு. மாநிலங்களின் உரிமையைப் பரிப்பதற்கான திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை இன மக்களை அச்சத்திற்குள்ளாக்குவதற்காக அரசியல் கொலைகளையும் கைதுகளையும் அரங்கேற்றுகிறது. இப்படி ஒற்றைத் தன்மைக்கு நிர்வாகத்தையும், கலாச்சாரத்தையும் நகர்த்த நகர்த்த மக்கள் அச்சத்தின் பிடியிலும், களச் செயல்பாட்டாளர்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் பிடியிலும் நிற்கின்றனர்.
இந்த அழுத்தம் தொடர்ந்தால் அது வெடித்து, மக்களை பிரிவினை நோக்கி நகர்த்தும் இந்திய ஒன்றியத்தின் மாநிலங்கள் தனித்தனி நாடாகவேண்டும் என்கிற சுதந்திர தாகம் அந்தந்த மாநில மக்களிடையே உருவாகும் முடிவில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு இந்தியத் துணைக்கண்டம் தள்ளப்படும். பிரிவினையை ஒருபோதும் ஆதரிக்காத மக்கள்கூட தங்களின் மாநில உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்ட கையறு நிலையில் அதை ஆதரித்து விடும் அபாயம் இருக்கிறது.
ஒரே நாடு ஒரே மக்கள் என்பதை அடைய ஓயாமல் ஒரு அரசு சிந்தித்து, தனது பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலையுயர்வு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரிக்குப்பிறகான தொழில் இழப்பு, வேலை வாய்ப்பிழப்பு, மீண்டும் தலைதூக்கும் வறுமை. இவற்றையெல்லாம் சிந்திக்காமல் சில முதலாளிகளுக்கு திட்டங்களைப் பெற்றுத்தருவது, வளங்களைப் பங்கிட்டுத் தருவது, கடன் தருவது, பெருங்கடன் பெற்று நாட்டைவிட்டு ஓடிப்போனவர்களை நீதியின் முன் நிறுத்தாமல் விட்டுவைத்திருப்பது எல்லாச் சுமையையும் வெகுமக்கள் மீது சுமத்துவது என்று இந்த அரசின் செயல்பாடு மூச்சடைக்க வைக்கிறது. மூச்சடைத்துக்கிடப்பதில் தான் இந்த நாடு ஒன்றாக இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள்கூட ஒரே கொள்கையையும் ஒரே நடத்தையையும் கொண்டிருப்பதில்லை. இது இயல்பு என்பதாக கிராமங்களில் சொல்வார்கள் “அஞ்சு வெரலும் ஒன்னுபோலவா இருக்கு” என்று.
ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கும் உலகில் 130 கோடி மக்களை ஒற்றைக் கலாச்சாரத்திற்கு அடியில் காவிச்சாயம் பூசி நிறுத்தமுடியுமா? அனைவரும் ஒன்றாக இயங்க அவரவர் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமல்லவா ?
ஊருக்கு ஊர் இந்துத்துவ அமைப்புகளை உண்டாக்கி அந்தப்பகுதி சிறுபான்மை மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் விளிம்புநிலை மக்களை எல்லாம் பிரித்துப்பேசி மோதல் உண்டாக்கி, முற்போக்காக பேசுபவர்கள் எழுதுபவர்களைக் கொலை செய்து, சகிப்புத்தன்மையே இல்லாமல் ஒற்றுமையைக் குலைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி ஒரு தேசத்தை ஒற்றுமையாக வைப்பீர்கள்.
எல்லா மக்களையும் சுதந்திரமாக வைப்பதிலும், மாநில நிர்வாகங்களை சுதந்திரமாக வைப்பதிலும், பண்முகத்தன்மையை சுதந்திரமாக வைப்பதிலும், சிறுபான்மை மக்களை அச்சமின்றி சுதந்திரமாக வைப்பதிலும், எப்போது மத்திய அரசு நிறைவாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கையைப் பெருகிறதோ அப்போது எந்த பகீரதபிரயத்தனங்களும் இல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாக இருக்கும். இவற்றையெல்லாம் யார் செய்து முடிக்கிறார்களோ அன்று அவரை ஒற்றுமைக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளலாம்.
அதுவரை பாசிச பாஜக ஒழிக!
ஆன்மன்
01.11.2018